Published : 29 Jul 2019 12:27 PM
Last Updated : 29 Jul 2019 12:27 PM

அருளை அள்ளித் தரும் அத்தனூர் அம்மன்!

திருமணம், குழந்தைப்பேறு, நிலம் வாங்குதல் என பக்தர்களின் பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றி அருள்பாலிக்கிறார் “ என்று போற்றி வணங்குகின்றனர் கோவை கணபதியில் குடிகொண்டுள்ள அத்தனூர் அம்மன் திருக்கோயில் பக்தர்கள். கொங்கு மண்டலத்தின் மையமாகவும், கோவை மாநகரின் வடக்கு எல்லையாகவும் திகழும் கணபதியில், பல நூற்றாண்டுகளாக கிராம காவல் தேவதையாக விளங்குகிறார் அத்தனூர் அம்மன்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மல்லூருக்கு அருகேயுள்ள அத்தனூரில் இருந்து சுமார் 500  ஆண்டுகளுக்கு முன், பிழைப்புக்காக கோவை வந்த கொத்தண்டியார் குலத்தினர், தங்களுடன் அத்தனூர் அம்மன் சிலையையும் எடுத்து வந்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், வேளாளக் கவுண்டர் சமூகத்தினரால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த காங்கயம் நாட்டில் உள்ள அத்தனூரில் இருந்து, கணபதி என்னும் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், இத்தலத்துக்கு கணபதி அத்தனூர் அம்மன் என்று பெயர்  ஏற்பட்டுள்ளதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் ஊஞ்சல் மரங்கள் நிறைந்த வனமாக இப்பகுதி இருந்துள்ளது. பின்னர் அம்மன் உத்தரவின்பேரில், மரங்களை வெட்டி, சிறிய கோயில் கட்டியுள்ளனர். தொடக்கத்தில் தாழபுரம், நல்லூர் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டுள்ள இப்பகுதி, பின்னர் கணபதி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ள கணபதியில் அமைந்துள்ள அத்தனூர் அம்மன் கோயிலில், அம்மன் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.  அம்மனின் எட்டுக் கைகளில், கதை, வாள், கபாலம், சூலம், மான், மழு ஆகியவை உள்ளன. இரு திருவடிகளும் மகிஷாசுரனை ஊன்றி மிதித்தபடி உள்ளன. கோயில் கருவறையில் அம்மன் ஊற்றிருந்து அருள்பாலிக்கிறார். 

உள்மண்டபத்தில் நின்ற நிலையில் நிருத்த கணபதி, வெளிப்புறத்தில் விநாயகர், அம்மனுக்கு முன் சிம்ம வாகனம்,  வெளிப்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கோமாதா, நாகசக்தி என பல்வேறு உப தெய்வங்கள் உண்டு. தினமும் காலையில் 6 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

ஆடி வெள்ளியில் குவியும் பக்தர்கள்...

இங்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஆடி வெள்ளிக் கிழமைகளில் கணபதி, உருமாண்டாம் பாளையம், துடியலூர், வெள்ளக்கிணறு, சின்ன வேடப்பட்டி, உடையாம்பாளையம், சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம், சுப்பிரமணியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, அனைத்து சமூக மக்களும் இங்கு திரண்டு, அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.ஆண்டுதோறும் இக்கோயிலில் ஊஞ்சல் உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது.

பொங்கல் பண்டிகையின்போது இங்கு பக்தர்கள் திரண்டு, பொங்கல்வைத்து வழிபடுகின்றனர்.  தவத்திரு கந்தசாமி சுவாமிகள், தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள், தவத்திரு கந்தசாமி சுவாமிகள் உள்ளிட்டோர் அம்மனைப் போற்றி, பாடல்கள் இயற்றியுள்ளனர். இக்கோயிலை ஆறுச்சாமி, துரைசாமி, நஞ்சப்பன், ஜெயராம் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகளில் ஒருவரான துரைசாமி கூறும்போது, “ஆரம்பத்தில் சிறிய கோயிலாக இருந்துள்ளது. ரூட்ஸ் ராமசாமியின் தாத்தா ராமசாமி கவுண்டர் உள்ளிட்டோர், மக்களிடம் நிதி  திரட்டி, 1941-ல் கோயிலை விரிவுபடுத்தியுள்ளனர். பின்னர், 1990-ல் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 1990-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, 2002, 2016-ம் ஆண்டுகளிலும் சில திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

இக்கோயிலில், குழந்தைப் பேறு, திருமணத் தடை, தொழில் வளர்ச்சி,  நிலம் வாங்குதல் என பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும், கோரிக்கைகள் நிறைவேறவும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். நோய்கள் தீரவும் பிரார்த்தனைகள் செய்கின்றனர். இங்குள்ள துரத்தில் மரத்தில் பல்லி சகுனத்தைக் கேட்டும், முடிவுகள் எடுக்கின்றனர்” என்றார்.

இக்கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், அங்கவஸ்திரம் சாத்துதல் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். அக்காலத்தில் அத்தனூர் அம்மன், பூத, வேதாள கணங்கள் புடைசூழ, அதிர்வேட்டு எழும்ப, சிங்க வாகனத்தில் காலை, உச்சி, மாலை வேளைகளில் பவனி வந்துள்ளார் என்றும் செவிவழிச் செய்திகள் உள்ளன. இக்கோயில் கொத்தண்டியார் குலத்தினர் மற்றும் மணியம் கூட்டத்தினருக்கு குலதெய்வமாக இருந்தாலும், சுற்று வட்டாரப் பகுதி மக்கள் ஜாதி பேதமின்றி இக்கோயிலுக்கு வந்து, அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

துரைசாமி

 

- ஆர்.கிருஷ்ணகுமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x