Published : 24 Jul 2019 11:28 AM
Last Updated : 24 Jul 2019 11:28 AM

ஆடி வெள்ளியில் ஆடிக் கிருத்திகை;   கேட்ட வரம் தருவான் முருகன்!

வி.ராம்ஜி
ஆடி வெள்ளிக்கிழமையும் ஆடிக் கிருத்திகையும் ஒன்றிணைந்து வருகிறது. இது அற்புதமான நாள் என்றும் இந்தநாளில் முருகப்பெருமானைத் தரிசிப்பதும் விரதம் மேற்கொள்வதும் மிகுந்த விசேஷ பலன்களைக் கொடுக்கும் என்றும்  சொல்கிறார்கள் பக்தர்கள்.
மாதந்தோறும் வருகிற கிருத்திகை நட்சத்திர நாள் என்பது முருகனுக்கு உகந்த அருமையான நாள். அதேசமயம், ஒரு வருடத்தின் மூன்று கிருத்திகை நட்சத்திர நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகின்றன.  தை மாதத்தில் வருகிற கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வருகிற கிருத்திகை, ஆடி மாதத்தில் வருகிற கிருத்திகை என மூன்று கிருத்திகைகள் விசேஷமானவை. 
இதோ... ஆடி மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம் என்பது வெள்ளிக்கிழமையில் வருகிறது. பொதுவாகவே வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்தது. அதிலும் ஆடி வெள்ளி அமர்க்களமான நன்னாள். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில், ஆடி வெள்ளியும் ஆடிக்கிருத்திகையும் ஒருசேர வருகிறது என்றால் அந்த நாளின் மகத்துவத்தைச் சொல்லவேண்டுமா என்ன?
மாதந்தோறும் கிருத்திகையன்று விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். ஆடி கிருத்திகையில் விரதம் இருப்பது ரொம்பவே பலன்களை வாரி வழங்கக் கூடியது என்பது ஐதீகம். உத்தராயன புண்ய காலத் தொடக்க மாதமான தை மாதத்தில் வருகிற கிருத்திகை போலவே, தட்சிணாயன புண்ய காலத்தில் வருகிற கிருத்திகையும் மகத்துவம் வாய்ந்தவை என்கிறார்கள் ஆச்சார்யர்கள். 
எனவே, ஆடிக் கிருத்திகையில் முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்ளுங்கள். அன்றைய தினம் முருகப்பெருமான் துதி, ஸ்லோகம், கந்த சஷ்டி கவசம் முதலானவற்றைப் பாராயணம் செய்து வாருங்கள். காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி, முருகனுக்கு செந்நிற மலர்கள் சூட்டுங்கள். சர்க்கரைப் பொங்கல், அவல் பாயசம், பால் பாயசம், கேசரி முதலான ஒன்றை நைவேத்தியமாகப் படைத்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். 
மாலையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு அல்லது கோயிலில் உள்ள முருகன் சந்நிதிக்குச் சென்று தரிசியுங்கள். வீடு வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும் கல்யாணம் கைகூடி வரவேண்டுமே என்று தவிப்பவர்களுக்கும் குழந்தை பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லையே என்று ஏங்குவோருக்கும் நினைத்த வரங்களையும் கேட்ட வரங்களையும் தந்தருள்வான் வடிவேலன். 
ஆடிக்கிருத்திகையும் ஆடி வெள்ளியும் ஒன்று சேர வரும் அற்புதமான நாளில், முருகப்பெருமானை வழிபட மறக்காதீர்கள். கேட்டது கிடைத்தே தீரும்; நினைத்ததை நடத்திவைப்பான் கந்தகுமாரன்! 
 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x