

ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சிலையாகக் கொலுவீற்றிருக்கும் நூதன மண்டபம், தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் போன்று பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருக்கிறது. பாலாற்றங்கரையில் உள்ள ஓரிக்கை என்ற இடத்தில் இந்த மணிமண்டபம் உள்ளது.
இதில் மகா பெரியவர் வாழ்ந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளைக் குறிப்பது போல், நூறு தூண்களைக் கொண்ட நூறு கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இத்தூண்களில் ஆங்காங்கே செதுக்கப்பட்டுள்ள சிம்மம், தாவும் குதிரைகள், யாளி, பூக்கொடிகள் ஆகிய சித்திரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. அஸ்திவாரம் முதல் கலசம் வரை அனைத்தும் கருங்கற்களால் ஆன இம்மண்டபம் பத்ம கணபதி ஸ்தபதி தலைமையில் கட்டி முடிக்கப்பட்டது. சாஸ்திரப்படி கட்டப்பட்டுள்ள இம்மணிமண்டபத்தை மகாலஷ்மி மாத்ருபூதேஸ்வரர் அறக்கட்டளை நிர்வகித்துவருகிறது.
ரத வடிவமைப்பில் மண்டபம்
கர்ப்பக்கிரகத்தின் கூரைப்பகுதி மேரு வடிவத்தில் கருங்கற்களால் அமைந்துள்ளது. கோபுரம் காஸ்யப சிற்ப சாஸ்திரப்படி ஐந்து நிலைப்படியும் கொண்டு அமைந்துள்ளது. மணிமண்டபத்திற்கு தேவையான வெள்ளைக் கருங்கற்கள் பெங்களுருவுக்கு அருகில் உள்ள ஹசரகட்டா மற்றும் கொய்ரா என்ற இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. கருப்புக் கற்கள் பட்டிமலைக் குப்பம் மற்றும் திருவக்கரை ஆகிய பகுதிகளில் இருந்தும் கொண்டுவரப்பட்டன.
கர்ப்பக்கிரகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜன்னல்களும் கருங்கற்களால் ஆனவை. நூறு அடி விமானம் கொண்ட மண்டபம், பக்கவாட்டில் கருங்கல்லால் ஆன இரு சக்கரங்களைக் கொண்டு ரதம் போலக் காட்சி அளிக்கிறது.
கல் சிங்கத்தின் வாயில் உள்ள கல் பந்தினை, அதன் வாய்க்குள்ளேயே சுழற்றும் முறையில் செதுக்கப்பட்டுள்ள விதம் சிற்ப நுண் திறனுக்கு ஒர் எடுத்துக்காட்டு. மகா சுவாமிகளின் அர்த்த மண்டப வாயிற்படிக்குக் காவலைப்போல இரண்டு பக்கங்களிலும் கல் யானைகள் நிற்கின்றன.
இந்த மண்டபத்தின் தெற்குப் பிராகாரச் சுவரில் குரு பரம்பரையும், சீடர்களுடன் ஆதிசங்கரர் இருப்பது போன்ற சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதே மண்டபத்தின் வடக்குப் பிரகாரத்தில் நடராஜரின் சந்தியா பிரதோஷ தாண்டவம் சிறப்புற வடிக்கப்பட்டுள்ளது.
மன அமைதியைத் தேடி வருபவர்களுக்கும், மகாபெரியவரின் மகத்தான வாழ்வைத் தெரிந்துகொள்வதற்கும் இந்த மணிமண்டபம் அற்புதமான தலமாகத் திகழ்கிறது.