

வி.ராம்ஜி
ஆடி மாதத்தின் சஷ்டி, செவ்வாய்க்கிழமையன்று வந்துள்ளது. இன்று 23.7.19ம் தேதி சஷ்டி. முருகப்பெருமானுக்கு உரிய நன்னாள் இன்று. இந்தநாளில், வேலவனை வழிபடுவோம். வேண்டியதைத் தந்து நம்மைக் காத்தருள்வான்.
பொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான வழிபாட்டுக்கு உரிய நாள். மாதந்தோறும் வருகிற சஷ்டி திதியில், முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பார்கள் பக்தர்கள். சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகனைப் போற்றுவார்கள்.
அதேபோல் செவ்வாய்க்கிழமை என்பதும் கந்தனை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள். செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்து வருவது மேலும் சிறப்பு. அதுமட்டுமா? ஆடிச் செவ்வாய் ரொம்பவே விசேஷம்.
ஆடி மாதத்தில், செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் ஒருசேர வந்திருக்கிறது. இன்று ஆடிச் செவ்வாய், சஷ்டி. இந்தநாளில், விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது விசேஷம்.
விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானைத் துதிக்கும் பாடல்களைப் பாராயணம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் படியுங்கள். எதிர்ப்புகள் விலகும். கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும். நாம் வேண்டியது அனைத்தையும் தந்தருள்வான் வேலவன்.
இன்னும் முடிந்தால், சஷ்டி நாளில், நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். எலுமிச்சை சாதம் வழங்குங்கள். இன்னும் வளமுடன் வாழச் செய்வான் வெற்றிவேலன்.