Last Updated : 16 Jul, 2015 01:12 PM

 

Published : 16 Jul 2015 01:12 PM
Last Updated : 16 Jul 2015 01:12 PM

சக்தியின் அருள் பெறலாம்

ஆடிப் பண்டிகை ஜூலை 17

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு விசேஷம். அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தினை வரவேற்பதுபோல் அம்மாதத்தின் முதல் நாளைப் பண்டிகையாக கொண்டாடுவது வழக்கம். இந்த மாதத்தில் ஆடித் தபசு, பதினெட்டாம் பெருக்கு, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, திருவாடிப்பூரம் உட்பட ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியும் அம்மனுக்கு உற்சவம்தான்.

ஆடித் தபசு

முன்னொரு காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாயிருந்த காட்சியைத் தனக்குக் காட்டுமாறு சிவனிடம் பார்வதி தேவி கேட்டார். அவ்வுருவைக் காண வேண்டுமானால் பார்வதி தேவி தவம் செய்ய வேண்டும் என்றார் சிவபெருமான்.

புன்னை வனத்தில் கடும் தவம் செய்த அன்னைக்கு ஆடி மாதம் பெளர்ணமியன்று இடப்பாகம் சிவனாகவும், வலது பாகம் நாராயணனாகவும் காட்சி அளித்தார் சிவபெருமான். பார்வதி தேவி மீண்டும் சிவனாக உருக்காட்டுமாறு வேண்ட அவ்வாறே சிவரூபம் மட்டும் காட்டி நின்றார் சிவன்.

இந்த இரு நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் நிகழ்ந்ததால், ஆடித் தபசு என்ற விழாவன்று சிவன் மாலையில் சங்கர நாராயணனாகக் காட்சி அளிக்கும் வைபவமும், பின்னர் சிவனாகக் காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

சிவனும், விஷ்ணுவும் சங்கர நாராயணனாகத் தோன்றியதுபோலவே இடப்புறம் பார்வதியும், வலப்புறம் மகாலட்சுமியுமாக இத்திருக்கோவிலில் காட்சி அளிக்கிறார்கள்.

பதினெட்டாம் பெருக்கு

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் காவிரியைக் கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் உண்டு. மழைக் காலமானதால் அன்றைய தினம் இரு கரை தொட்டு ஒடுவாள் காவிரி. பொங்கிப் பிரவாகிக்கும் அன்னையை விவசாயிகள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடுவர். பெண்கள் தாலி மாற்றிக்கொள்ளும் வைபவமும் நடக்கும். பூக்களை ஆற்று நீரில் போட்டு, காவிரியைத் தன் தாயாக நினைத்து வணங்குவார்கள். கலந்த சாதம் கொண்டுவந்து குடும்பமாய் அமர்ந்து சாப்பிடுவர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் கடற்கரையில் அமர்ந்து இவ்விழா வினைக் கொண்டாடுவார்கள். குடிநீரைப் பூஜித்தல், அனைவர் மனதிலும் நீரைக் காக்க வேண்டும் என்ற ஆக்கபூர்வமான எண்ணத்தை உண்டாக்கும். அதனால் சமையல் அறையில் உள்ள குழாய்க்குப் பூச்சூட்டி மகிழலாம். நீர் நிரம்பிய அண்டா, குண்டா, வாளி போன்றவற்றிலும் மலர் தூவி நீரை ஆராதிக்கலாம்.

ஆடிக் கிருத்திகை

கார்த்திகேயனை, கிருத்திகைப் பெண்கள் கண்டெடுத்து வளர்த்த நாள் என்பதாலும், முருகவேள் அன்னை பராசக்தியின் சக்தி வேலைத் தாங்கிய நாள் என்பதாலும் ஆடிக்கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் என்பார்கள். அன்றைய தினம் முருக பக்தர்கள் பால் காவடி தூக்கி வந்து பிரார்த்தனை செலுத்துவார்கள். ‘கந்தனுக்கு அரோகரா’ என பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்திடுவார்கள்.

ஆடி அமாவாசை

நீத்தார் கடன் அளிக்க உகந்த நாள் ஆடி அமாவாசை. அன்றைய தினம் சக்திக்குச் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வதும் நன்மை பயக்கும்.

திருவாடிப்பூரம்

ஆண்டாள் ஆடிப்பூரத்தன்று துளசிச் செடியின் அடியில் கண்டெடுக்கப்பட்டதால் இந்த நாள் விசேஷம். அதனால் ஆண்டாளுக்குப் பல பூஜைகள் செய்து ஆராதிப்பர்.

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்றும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம். முதல் வெள்ளியன்று இனிப்புத் தேங்காய் கொழுக்கட்டை, உப்பு, காரப் பருப்புக் கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். இரண்டாம் வெள்ளியன்று பருப்புப் பாயசமும், உளுந்து வடையும் செய்து நிவேதிக்க வேண்டும். மூன்றாம் வெள்ளியன்று சர்க்கரைப் பொங்கல் செய்ய வேண்டும். நான்காம் வெள்ளியன்று ரவா கேசரி செய்து படைக்கலாம்.

இந்த ஆண்டு, ஆடி மாதம் முதல் நாளே வெள்ளிக்கிழமை பிறப்பதால், மாதம் முழுவதுமாக ஐந்து வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. பொதுவாக ஐந்தாம் வெள்ளிக்கிழமை பால் பாயசம் செய்ய வேண்டும். ஆனால் அதே நாளன்று ஆடி அமாவாசையாக இருப்பதால் வெல்லமும் பருப்பும் கலந்த பாயசம்தான் செய்ய வேண்டும்.

இவற்றை அம்பாளுக்குப் படைத்த பின் தாமும் உண்டு, அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும். குறிப்பாக இல்லத்தில் வேலை செய்பவர்களுக்குக் கொடுத்து, அவர்களின் உடல்நலனைப் பேண வேண்டும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதை நினைவுகூரவே பண்டிகைகளும் பாயாசங்களும் என்றால் மிகையில்லை.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x