Published : 22 Jul 2019 10:21 AM
Last Updated : 22 Jul 2019 10:21 AM

சேலத்திலும் அருள்பாலிக்கும் அத்திவரதர்!

வி.சீனிவாசன்

ஒவ்வொரு நாளும் காஞ்சிபுரம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆம்... 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருள்பாலிக்கும் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கானோர் காஞ்சிபுரம் செல்கின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் அத்திவரதரை தரிசிக்க முடியாமல் தவிக்கின்றனர் கோடிக்கணக்கான பக்தர்கள்.

கோயில் தெப்பகுளத்தில் தைலக்காப்பு செய்து,  வெள்ளிகவசம் அணிந்து பெட்டகத்தில் வைத்துப்  பாதுகாக்கப்படும் அத்திவரதர், தற்போது  பக்தர்களுக்கு காட்சியளிப்பதால், வாழ்நாளில் காணக்கிடைக்காத அரிய காட்சியாக கருதி, மெய்சிலிர்த்து அவரை  வணங்கிச் செல்கின்றனர் பக்தர்கள்.

இந்த நிலையில், சேலம் சின்னகடை வீதியில் உள்ள  ஸ்ரீபிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் (பட்டை கோயில்), அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தைலக்காப்பு, வாசனை மலர்களால் அலங்காரம், ஆராதனை என காஞ்சிபுரம் ஆதி அத்திவரதருக்கு செய்யப்படும், அனைத்து சேவைகளும் சேலம் அத்திவரதருக்கும் தினமும் நடக்கிறது.

சுமார் 6 அடி உயரம் கொண்ட அத்திவரதர், 24 நாட்கள் சயன கோலத்திலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பதைப்போலவே, சேலம் பட்டைகோயில்  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அத்திவரதரும் அருள்பாலிக்கிறார்.

காஞ்சிபுரத்தில் அலைமோதும் கூட்டத்தைக்  கடந்து செல்ல இயலாத முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர், சேலம் பட்டைகோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அத்திவரதரை தரிசிக்கின்றனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி,  கோவை, நாமக்கல், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் தினமும் இங்கு வந்து, வழிபட்டு செல்கின்றனர்.தரிசனத்துக்குப் பின் ஆதி அத்திவரதரை தெப்பகுளத்தில் வைத்துவிடுவதுபோல, சேலத்தில் தீர்த்த தொட்டி அல்லது மடத்தில்  வைத்து, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க வைப்பது குறித்து தேவஸ்தானக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

தற்போது ‘சின்ன காஞ்சிபுரம்’ என்று அழைத்து, தினமும் பட்டைகோயில் வந்து அத்திவரதரை தரிசிக்கின்றனர் பக்தர்கள். ஒவ்வொரு நாளும்  காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார் அத்திவரதர். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், அந்த நாட்களில் காலை 6.30 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x