மகமேரு தேரில் குருநாத சுவாமி!

மகமேரு தேரில் குருநாத சுவாமி!
Updated on
3 min read

எஸ்.கோவிந்தராஜ்

ஆடி மாதம் நெருங்கினாலே ஸ்ரீ குருநாதசுவாமி கோயில் தேர்த் திருவிழாவுக்காக அந்தியூர் களைகட்டத் தொடங்கிவிடும். பிரம்மாண்டமான `மகமேரு தேரில்’ வலம்வந்து அருள்பாலிக்கும் காமாட்சி அம்மன், பெருமாள் சுவாமி மற்றும் குருநாத சுவாமிகளைத் தரிசிக்க, 500 ஆண்டுகளாக ஈரோடு மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும்   பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

‘ஆடி நோம்பி’ என்றழைக்கப்படும் அந்தியூர் புதுப்பாளையம் குருநாத சுவாமி கோயில் ஆடிப்பெருந் தேர்த் திருவிழா அந்தியூரின் பெருமைகளில் முதன்மையானது. அந்தியூர்-பர்கூர் சாலையில் அமைந்துள்ளது இக்கோயில்.

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, சிதம்பரம் அருகேயுள்ள கடலோர சதுப்புநிலப் பிரதேசமான பிச்சாபுரம், ஆற்காடு நவாப் ஆட்சியின் கீழ் இருந்தது. அங்குள்ள கோயில் பூசாரி வீட்டுப்பெண்ணை ஆற்காடு நவாப் பெண் கேட்டுள்ளார். பூசாரியின் குடும்ப உறவினர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த நவாப்,  குறிப்பிட்ட காலத்துக்குள் சம்மதம் தெரிவிக்காவிட்டால், அனைவருக்கும் மரணதண்டனை கொடுப்பதாக மிரட்டியுள்ளார்.

இதனால், பிச்சாபுரத்தில் இருந்து வெளியேறிய பூசாரி குடும்பத்தார், குல தெய்வங்களின் நினைவாக 3  கற்சிலைகளை பூஜைக்கூடையில் வைத்துக்கொண்டு, அந்தியூர் புதுப்பாளையத்தை வந்தடைந்தனர். அங்கு தெய்வங்களைப் பாதுகாப்பதற்காக, கொங்கு பகுதியில் ஆட்சிபுரிந்த குறுநில பாண்டிய மன்னனிடம், தற்போது கோயில் அமைந்துள்ள கல் மண்டபத்தைக் கேட்டுள்ளனர். ‘மாற்றரசர் படையெடுத்து வந்தால், நீங்கள் அனைவரும் என் படையுடன் சேர்ந்து, அவனை வீழ்த்த வேண்டும்’ என்ற நிபந்தனையுடன், கல் மண்டபத்தை வழங்கியுள்ளார் அந்த மன்னர். அங்கேயே தங்கி சிலைகளைப் பாதுகாத்துக் கொண்டு,  ஆடு, மாடுகளை மேய்த்து ஜீவனம் செய்தனர் சாந்தப்பன் வகையறாவினர். இப்போதும் இந்த மண்டலத்தில் மீன் சின்னங்கள் இருப்பதைக் காணலாம்.

சைவமும், வைணவமும்...

தாங்கள் கொண்டுவந்த உருவமற்ற சிலைகளுக்கு பூஜைகள் செய்து வணங்கியவர்கள், உருவகம் அமைக்க முடிவு செய்தனர். முதல் சிலையை குலதெய்வமான ஸ்ரீகாமாட்சி அம்மனாகவும், இரண்டாவது சிலையை பெருமாளாகவும், மூன்றாவது சிலையை சிவன்-முருகனைக் குறிக்கும் வகையில் குருநாதர் எனவும் பெயரிட்டு, வழிபட்டனர். சைவம், வைணவம் என இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

வழி வழியாக வந்த இக்குடும்பத்தாரின் வாரிசுகள், கல் மண்டபம் மீது மூன்று கோபுரங்கள் கட்டினர். கோபுர கட்டுமானப்  பணியில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கும்போது, காசுகளை மணலுடன் கலந்து,  அள்ளிக் கொடுப்பார்கள். அதிகம் உழைத்தவர்களுக்கு அதிக காசும், ஏமாற்றியவர்களுக்கு குறைந்த காசும் கிடைத்ததை,  குருநாத சுவாமியின் அற்புதமாகவே கருதியுள்ளனர். இப்போதும்,‘கூலிக்கார குருநாதன்’ என்று சுவாமியை அழைக்கின்றனர் இப்பகுதியினர்.
கோயில் பிரகார சுற்றுப்புறத்தில் 11 அடி உயரம், 11 அடி அகலம், 11 அடி நீளம் கொண்ட நிலவறை அமைத்து, பூஜைப் பொருட்களை அதில் வைத்துள்ளனர். இதற்கு ‘குலுக்கைப் பெட்டகம்’ என்று பெயர். ஆடித் திருவிழாவின் முதல் பூஜைக்கு முந்தைய நாள் மேளதாளத்துடன் குலுக்கைப் பெட்டகத்தை திறந்து, பூஜைப் பொருட்களை எடுப்பது மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

வனக் கோயிலும், மகமேரு தேரும்...

கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வனக் கோயில் உள்ளது. ஸ்ரீகாமாட்சியம்மன் தவம் மேற்
கொள்ள இந்த வனத்தை தேர்ந்தெடுத்த தாகவும், அப்போது அங்கிருந்த,  மாயமந்திரத்தில் பிரசித்தி பெற்ற உத்தண்ட முனிராயன், காமாட்சியம்மனை தவம் செய்யவிடாமல் தடுத்துள்ளான்.

குருநாதரின் பிரதான சீடனான அகோர வீரபத்ரன் மூலம், உத்தண்ட முனிராயனுக்கு நல்உபதேசம் செய்தும், கேட்க மறுத்து விட்டான். இதையடுத்து, இருவருக்குமிடையே சண்டை நடந்தது. மாய மந்திரம் நிறைந்த முனிராயன்  தன் உருவத்தைப் பெரிதாக்கி, உயர்ந்து நின்று சண்டையிட, முனிராயன் நிற்பதற்கு மேல் உயரமாக, மகமேரு தேரை உருவாக்கி, அதில் அமர்ந்து குருநாதர் அவனை அழித்தார். இதுதான், மகமேரு தேர் அமைந்த வரலாறு.

இதன் நினைவாகத்தான், திருவிழா முதல் நாளன்று ஒரு பல்லக்கில் காமாட்சியம்மன், சிறிய மகமேரு தேரில்  பெருமாள்சாமி, பெரிய மகமேரு தேரில் குருநாத சுவாமி சிலைகளை அலங்கரித்து வைத்து, வனக் கோயிலுக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு பூஜைகள் செய்து முடித்து, இரண்டாம் நாள் மீண்டும் புதுப்பாளையம் கோயிலுக்கு இவை கொண்டுவரப்படுகின்றன. இந்த 3 தேர்களையும், இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் தங்கள் தோள்களில் சுமந்து வனக் கோயிலுக்கு கொண்டு சென்று, மீண்டும் புதுப்பாளையம் கோயிலுக்குக் கொண்டு வருகின்றனர்.ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் குருநாத சுவாமி தேர் பவனியில், பழங்கால இசைக்கருவி முதல் நவீன இசைக்கருவி வரை இசைக்கும் கலைஞர்கள் பங்கேற்பார்கள். மகமேரு இரண்டும் மூங்கில், தேங்காய் நார் கயிற்றால் அமைக்கப்படுகிறது. இரும்போ, ஆணிகளோ  பயன்படுத்தப்படுவதில்லை. மகமேருகள் இரண்டையும் தூக்கிநிறுத்த தருமபுரி மாவட்டம் பென்னாகரம், நெருப்பூர், நாகமறை, ஏரியூர் மற்றும் உள்ளூர் மக்கள் ஜாதி வித்தியாசமின்றி பங்கேற்கின்றனர்.தேர்கள் மூன்றையும் வனக்கடை என்ற இடத்தில் இறக்கிவைத்து, தேர்களை சுமந்து வருவோருக்கு ஓய்வுகொடுத்து, வாணவேடிக்கை நடத்தப் படுகிறது. சாந்தப்பன் சகோதரர்கள் வகையறா பரம்பரை அறங்காவலர் குடும்பத்தினரால் கோயில் நிர்வாகம் செய்யப்படுகிறது. பூசாரிகளாக இக்குடும்பத்தினரே உள்ளனர். அறநிலையத்துறை நிர்வாகமும் இக்கோயிலில் உள்ளது.

திப்புசுல்தானின் குதிரை லாயம்

ஆடித் திருவிழாவின் தனிச் சிறப்பு மாடு, குதிரை சந்தையாகும்.  மைசூர் திப்புசுல்தான் அந்தியூருக்கு வேட்டையாட வரும்போது, அதற்காக சிறு கோட்டை, குதிரை லாயம் அமைக்கப்பட்டுள்ளது. வெளியூர் வியாபாரிகள் திப்புசுல்தானிடம் குதிரை விற்க அந்தியூர் வந்துள்ளனர். இதுவே, குதிரை சந்தை உருவாக காரணம்.

ஏறத்தாழ 250 ஆண்டுகளாக இந்த சந்தை நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு மாடு, காங்கயம் காளை,  உயர் ரக மாடுகள், வெளி மாநில உயர் ரக குதிரைகள் என ஆயிரக்கணக்கான மாடுகளும், குதிரைகளும் சந்தையில் விற்பனையாகும்.  நாட்டியமாடும் குதிரைகள் இந்த திருவிழாவின்  சிறப்பம்சம். தற்போது, அரிய வகை ஆடு, கோழி, நாய், பறவை இனங்களும் சந்தையில் இடம் பிடித்துள்ளன.  மேலும்,குதிரை வண்டி, மாடு, குதிரைகளுக்கான கயிறு, சட்டை, குச்சிகள், துண்டுத்தடிகள், அலங்காரப் பொருட்கள், தோல் பெல்ட்டுகள், பல வண்ண சாட்டைகள் என நூற்றுக்கணக்கான கடைகள் திருவிழாவில் களை கட்டும். அந்தியூரை
சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் உறவினர்கள், நண்பர்களை அழைத்து,  ஒரு வாரத்துக்கு  திருவிழா கொண்டாடுவர். பெரிய ராட்டினம், மரணக் கிணறு, பொம்மலாட்டம் என பழமைமாறாமல் திருவிழா நடைபெறும்.
நடப்பாண்டு குருநாதசுவாமி கோயில் தேர்த் திருவிழா கடந்த 17-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. வரும் 24-ம் தேதி கொடியேற்றம், 31-ல் முதல் வன பூஜை, ஆகஸ்ட் 7 முதல் 10-ம் தேதி வரை ஆடித் தேர்த் திருவிழா, 14-ம் தேதி பால் பூஜை நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in