Published : 16 Jul 2019 10:28 AM
Last Updated : 16 Jul 2019 10:28 AM

சந்திர கிரகணம்; பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்

வி.ராம்ஜி

இன்று நள்ளிரவு (புதன்கிழமை நள்ளிரவு) சந்திர கிரகணம். இந்த சந்திர கிரகணத்தால், சில நட்சத்திரங்கள் பரிகாரம் செய்துகொள்ளவேண்டும். கிரகணம் முடிந்ததும் குளித்துவிட்டு, ஆலயங்களுக்குச் சென்று தீபமேற்றி வழிபடுவது சிறந்த பரிகாரம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


இன்று 16ம் தேதி செவ்வாய்க்கிழமை. இன்றைய தினம் நள்ளிரவு அதாவது 17ம் தேதி புதன்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு கிரகணம் தொடங்குகிறது. பின்னர் 3.02 மணிக்கு கிரகணம் உச்சிக்குச் செல்கிறது. அதாவது மத்திய நேரமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 
இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு கிரகணம் முடிகிறது. 


பொதுவாகவே, கிரகண காலங்களின் போது, வெளியே செல்லக் கூடாது. குறிப்பாக, கர்ப்பிணிகள் வெளியே செல்வதை அறவே தவிர்க்கவேண்டும். கிரகணத்துக்கு தோஷம் உண்டு; தீட்டு உண்டு. எனவே, கிரகண நேரத்தில், நாம் தொட்டுப் பயன்படுத்தும் ஆடைகள், போர்வை முதலானவற்றை விடிந்ததும் நனைத்து உலர்த்தவேண்டும் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.


அதேபோல், ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் உண்டு. அதாவது வருடத்தில் 96 முறை தர்ப்பணம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். இந்தப் பட்டியலில், கிரகண கால தர்ப்பணத்துக்கும் முக்கியமானதொரு இடம் உண்டு. கிரகணம் தொடங்கி, மத்தியில் இருக்கிற நேரங்களில், அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு, தர்ப்பணம் செய்யவேண்டும். இதன்  பின்னர், கிரகணம் முடிகிற நேரத்தில், அதாவது காலை 4.30 மணிக்கு மீண்டும் நீராடவேண்டும். கிரகணத் தோஷம், தீட்டு, பீடை முதலானவை அப்போதுதான் விலகும் என்பதாக ஐதீகம். 


கிரகண காலத்தில், எதுவும் சாப்பிடக்கூடாது. மேலும் கிரகண காலத்தில், சொல்லவேண்டிய மந்திரம் ஒன்றும் உள்ளது. இந்த மந்திரத்தை எவர் வேண்டுமானாலும் சொல்லலாம். குறிப்பாக, பரிகார நட்சத்திரக்காரக்காரர்கள் அவசியம் சொல்லவேண்டும்.


அந்த மந்திரம் இதுதான்... 
யோஸெள வஜ்ரதரோ தேவ:
நக்ஷத்ராணாம் ப்ரபுர்மதி: ஸஹஸ்ரநயன
சந்த்ர: க்ரஹ பீடாம் வ்யபோஹது//


இந்த மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருப்பது உத்தமம். இயலாதவர்கள், இந்த மந்திரத்தை ஒரு பேப்பரில் எழுதி வைத்து, பக்கத்தில் வைத்துக்கொள்ளலாம். அந்தக்காலங்களில், ஓர் ஓலையில் எழுதி, நெற்றியில் பட்டம் போல் கட்டிக்கொள்வார்கள். இப்போது அப்படியெல்லாம் இல்லை. எனவே, மந்திரத்தை முடிந்தவரை சொல்லிக்கொண்டே இருப்பது தோஷத்தில் இருந்து நம்மை அரணென இருந்து காக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். 


பரிகாரம் செய்யவேண்டிய நட்சத்திரங்கள்: 
பூராடம், உத்திராடம், திருவோணம், கார்த்திகை, உத்திரம்.


சந்திர கிரகணம், கேது கிரஸ்தம்: பரிகாரம் செய்யவேண்டிய நட்சத்திரக்காரர்கள், கிரகணம் முடிந்ததும்,  வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் (முடிந்தால் மட்டைத்தேங்காய்) ஆகியவற்றுடன் கொள்ளு தான்யமும் தட்சணையும் ஆச்சார்யர்களுக்கு தானமாக வழங்கவேண்டும். பிறகு கோயிலுக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்து, தீபமேற்றி வணங்கினால், கிரகண தோஷம் இல்லை என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள். 


கிரகணத்தின் மத்திய நேரத்தில் ஒரு முறை தர்ப்பணம் செய்யவேண்டும். அதன் பிறகு, ஆடி மாதம் தட்சிணாயன புண்ய காலத் தொடக்கத்தையொட்டி, மாத தர்ப்பணம் செய்யவேண்டும்.  
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x