

‘சங்கம்’ முற்காலத்தில் தமிழ் வளர்க்கத் தோற்று விக்கப் பெற்றது. ஆனால் இராமலிங்க வள்ளலார்தான் முதன்முதலில் சமயம் வளர்க்க, சங்கம் தோற்வித்தவர் என்ற பெருமைக்கு உரியவராகிறார். அதுவரை சமய வளர்ச்சிக்கு எனப் பல மடங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆசிமங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் `சங்கம்’ என்ற ஒன்று உருவாக்கப்பட்டது அதுவே முதல் முறையாகும். வடநாட்டில் புத்தரால் ஏற்படுத்தப்பட்ட பௌத்த சங்கத்திற்குப் பிறகு சமயத்திற்கு என ஏற்படுத்தப்பட்ட முதல் சங்கம் வள்ளலாரால் ஏற்படுத்தப்பட்ட சமரச வேத சன்மார்க்க சங்கம்தான்.
அச்சங்கத்திற்கென ஒரு சில கொள்கைகளையும் வள்ளலார் நிர்ணயித்தார். அவை,
1. கடவுள் ஒருவரே
2. அவரை உண்மையான அன்புடன் ஒளி வடிவில் வழிபட வேண்டும்.
3. சாதி, மத வேறுபாடு கூடாது.
4. புலால் உணவை அறவே ஒதுக்க வேண்டும்.
5. அனைத்து உயிர்களையும் தன் உயிர் போலவே கருதுதல் வேண்டும்.
6. சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுத்தல் கூடாது.
7. பசித்த உயிர்களுக்கு உணவை அளித்து ஆதரிக்க வேண்டும்.
8. கொல்லாமை என்னும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
9. ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
10. அனைவரும் சகோதரர்களே என்ற ஒருமித்த மனவுணர்வுடன் உயர்வு, தாழ்வு கருதாமல் வாழ வேண்டும்.
சங்கத்தின் தலைவனாக வள்ளலார், இறைவனையே நியமித்தார். தான் உட்பட மற்றவர்கள் அனைவரும் தொண்டர்களே என்றும் பக்தர்களிடம் எடுத்துரைத்தார்.
சமரச வேத சன்மார்க்க சங்கம் பின்னர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதற்குப் பல்வேறு கட்டுப்பாடான சட்ட திட்டங்களையும், கொள்கைகளையும் வள்ளலார் வகுத்தார்.
அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவித்து அன்பு செலுத்த வேண்டும் என்பதை மிக முக்கிய கொள்கையாக வலியுறுத்தினார். தனது சங்கத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு அவர் கீழ்க்கண்ட அறிவுரைகளைப் போதித்தார்.
“அன்பு ஒன்றுதான் இந்த உலகத்தில் அள்ள அழியாத பொருள். எனவே அனைவரும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு நிறைந்தவர்களாய்த் திகழ வேண்டும். மனதை இறைவனிடத்தே ஒருமுகப்படுத்தி தியானம் செய்ய வேண்டும். இறைவன்பால் உள்ளம் நெக்குருகி கண்கலங்கிக் கண்ணீர் சிந்தி வழிபடுவதே சிறந்த வழிபாடாகும்.
உயிர்ப் பலியை ஒருபொழுதும் இறைவன் ஏற்பதில்லை. எனவே எந்த ஒரு உயிரையும் கொன்று இறைவனுக்குப் படைத்தல் கூடாது” என்றெல்லாம் அவர் வலியுறுத்தினார்.
அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்,
பா.சு.ரமணன் வெளியீடு: சூரியன் பதிப்பகம், 229,
கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை 600 004.
தொலைபேசி: 044-4220 9191.