

“ பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்தி குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே.”
பரிசனவேதி எந்த உலோகத்தின் மீது பட்டாலும் அது பொன்னாகிவிடும். அதுபோன்று குருவின் ஸ்பரிசம் பட்டால் இந்தப் பூவுலகில் வாழ்பவர், மும்மலங்களை ஒழித்து சிவகதியை அடைய முடியும் என்று திருமூலர் கூறுகிறார். மும்மலங்கள் என்பவை நம் மனதிலுள்ள ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று அழுக்குகளாகும்.
சிவகதி என்பது மீண்டும் பிறவாமல் மோட்சத்தை அடைவது என்று பொருள். குருவின் ஸ்பரிசம் என்பது குரு அளிக்கும் தீட்சையாகும். குருவின் தீட்சையானது நயன தீட்சை, ஸ்பரிச தீட்சை, திருவடி தீட்சை, மானச தீட்சை என்று பலவகை உண்டு. குரு, தமது அருட்பார்வையினால் உபதேசிப்பது நயன தீட்சையாகும். குரு, நம் சிரசில் தம் கைகளை வைத்து அருளுபதேசம் செய்வது ஸ்பரிச தீட்சையாகும்.
குரு தம் திருவடிகளை நம் சிரசின் மீது வைத்து உபதேசம் செய்வது திருவடி தீட்சையாகும். நாம் நமது குருவை நேரில் தரிசிக்க இயலாத தொலைவிலிருக்கும்போது, அதனை குரு உணர்ந்துகொண்டு, அவரது மானச நிலையினால் ஞானத் தெளிவை உணர்த்துவது மானச தீட்சையாகும் .
ஞானிகளின் ஞானகுரு
திருமயிலையில் ஜீவசமாதியில் வீற்றிருந்து அருளாட்சி செய்துகொண்டிருக்கும் குழந்தைவேல் சுவாமிகளும் பல ஞானிகளுக்கு ஞானகுருவாக இருந்திருக்கிறார். வேளசேரி மகான் என்ற சிதம்பர பெரிய சுவாமிகள், குழந்தைவேல் சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சித்தராக ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமகளின் நாயகனான திருமாலும், நான்முகக் கடவுளும் தேடியும் உணர முடியாத ஒப்பற்ற பரம்பொருளாகிய சிவபெருமான் தமது குரு குழந்தைவேலரின் உருவில் வந்து உபதேசம் செய்தார். அவரது திருவடி தீட்சை பெற்றதால் தான் இந்தப் பிறவி என்ற பிணியைப் போக்கிக்கொண்டேன் என்று தமது குருவின் பெருமையைக் கூறுகிறார்.
ஜீவசமாதியில் சிவலிங்கப் பிரதிஷ்டை
குழந்தைவேல் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அவரது குரு பரம்பரையைப் பற்றித் துறையூர் மடத்தின் இருபதாம் பட்டம் சொக்கலிங்க சிவப்பிரகாசரின் பாடலில் சில குறிப்புகள் உள்ளன.
திருமுதுகுன்றம் என்று அழைக்கப்பட்ட விருத்தாசலத்தில் பெரியநாயகி அம்மையால் அபிஷேகப் பால் புகட்டப்பட்டவர் குமாரவேலர். அந்தப் பரம்பரையில் வந்த குழந்தைவேல் சுவாமிகள், துறையூர் வீரசைவ மடத்தின் கிளையான திருமயிலைப் பீடத்தின் ஆதினமாகச் சிவபெருமானின் பெருமைகளைப் பரப்பியதுடன் சிவசித்தராகப் பெயர் பெற்றுச் சித்துக்களையும் செய்துள்ளார் என்ற செய்தி கிடைக்கிறது. இவரது பிரதான சீடரான முத்தையா சுவாமிகளைப் பற்றிய செய்திகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
குழந்தைவேல் சுவாமிகள், சித்தரை மாதம் 13-ம் நாள் பூச நட்சத்திரத்தில் ஜீவ சமாதியடைந்தார். ஜீவசமாதியடைந்த ஆண்டு தெரியவில்லை. ஜீவசமாதியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அவரது சீடரான முத்தையா சுவாமிகள், எப்பொதும் தமது குருவைத் தொழுதுகொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பியதால் அவரது சமாதியும் குழந்தைவேலரின் சமாதியின் முன் அமையப் பெற்றிருக்கிறது. அவரது விருப்பப்படி அவரது சமாதியின் மீது நந்தி பகவான் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறார்.
குழந்தைவேல் சுவாமிகளின் ஜீவசமாதியைத் தரிசிக்க
திருமயிலையில் அருள்மிகு கற்பகாம்பாள் ஆலயத்தை அடுத்துள்ள சித்திரக்குளத்தின் மேற்குத் தெருவில் உள்ள ஜே.டி.பி.காம்ப்ளெக்ஸின் பின்புறம், ஆலயம் அமைந்துள்ளது.