

திருவெஃகா மாதிரியே திருத்தண்கா என்றும் பதினாலில் இன்னொன்று இருக்கிறது. வெஃகா, தண்கா என்றால் முறையே வெம்மையான காடு என்றும் தண்மையான காடு என்றும் அர்த்தம். ஆதியில் காடுகளில் ரிஷிகள் பூஜை பண்ணிக்கொண்டிருந்த இடங்கள்தான் அப்புறம் க்ஷேத்ரங்களாக ஆனதால் கா, காடு என்றே அவற்றில் பலவற்றின் பேர் இருக்கிறது. திருவானைக்கா, திருக்கோடிகா, திருவேற்காடு, திருமறைக்காடு (வேதாரண்யம்) இப்படி.
தண்காவைத் தூப்புல் என்பார்கள். தூய புல்லான தர்ப்பை வளரும் இடம். வடகலை ஆசார்ய புருஷரான வேதாந்த தேசிகரின் ஜன்ம ஸ்தலம் அதுதான். தண்காவுக்கு இப்படிப் பெருமையென்றால், நம்முடைய கதைக்கார ஆழ்வார் சம்பந்தப்பட்ட வெஃகாவில்தான், அதன் புஷ்கரிணியில் திருக்குளம் என்கிற பொய்கையில் ஆழ்வார்களில் முதல்வராக இருக்கப்பட்ட பொய்கையாழ்வார் அவதாரம் செய்திருக்கிறார்.
அங்கேதான் யதோக்தகாரியாக பகவான் இருப்பது. யதோக்தகாரி என்ற பெயர் ஏற்படுவதற்கு முந்தியே அவர் அங்கே புஜங்க சயனப் பெருமாளாகப் படுத்துக்கொண்டிருந்திருக்கிறார். வரதராஜா ஆவிர்பவித்ததற்கு முந்தியே இருந்திருப்பவர் இவர். ஏனென்றால், பிரம்மா ஒரு யாகம் பண்ணி, அதில் வரம் தர வந்தவர்தான் வரதராஜா.
அந்த யாகம் பண்ணும்போது பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் மனஸ்தாபம். அதனால் பிரம்மா, சரஸ்வதியை ஒதுக்கிவிட்டு, சாவித்ரி, காயத்ரி என்ற இரண்டு பேரையே யஜ்ஞ பத்னிகளாக வைத்துக்கொண்டு யாகம் ஆரம்பித்தார். அப்போது சரஸ்வதி ஒரே கோபமாக வேகவதி என்ற நதி ரூபம் எடுத்துக்கொண்டு, வேகமாக வெள்ளமாக அடித்துக்கொண்டு யாகசாலையை நோக்கி வந்தாள்.
அந்தச் சமயத்திலே இந்த புஜங்க சயனப் பெருமாள்தான் நதி வருகிற வழியில் குறுக்கே போய்ப் படுத்துக்கொண்டு தடுத்தார். யஜ்ஞமும் பூர்த்தியாகி, பிரம்மாவுக்கு மாத்திரமில்லாமல் எல்லா ஜனங்களுக்கும் எல்லாக் காலத்திலும் வரம் கொடுப்பதற்காக வரதராஜா தோன்றிக் கோயில் கொண்டார்.
ஆழ்வாரான திருமழிசைக்காரர் காஞ்சீபுரத்தில் இந்த புஜங்கசயனர் ஆலயத்திலோ அல்லது அதை ஒட்டினாற்போலவோதான் வசித்துவந்தார். அப்போதுதான் அவர் பெருமாளைத் தாம் சொன்னபடி செய்ய வைத்து யதோக்தகாரியாக்கியது.
வரதராஜா உள்படக் காஞ்சீபுரத்திலுள்ள பெருமாள்களில் பெரும்பாலும் எல்லாருமே 'நின்ற திருக்கோலம்'தான். 'இருந்த திருக்கோலம்' என்பதாக உட்கார்ந்த நிலையில் ஓரிரண்டு பெருமாள் இருக்கலாம். திருவெஃகாக்காரரோ 'கிடந்த திருக்கோலம்'. அதாவது ரங்கநாதர், பத்மநாபஸ்வாமி, சாரங்கபாணிப் பெருமாள் ஆகியவர்களைப் போலப் பள்ளி கொண்டிருப்பவர். இவரைப் பற்றி ஒன்று குறிப்பிட்டுப் பெருமையாகச் சொல்வார்கள்.
என்னவென்றால், எந்த க்ஷேத்ரத்திலுள்ள சயனக் கோலப் பெருமாளானாலும் சரி, அவருடைய சரீரம் மல்லாக்க (மல்லாந்து) படுத்திருந்தாலும், சிரசையும் அந்தப்படியே வைத்து ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார். முக மண்டலத்தை சன்னிதிப் பக்கம் கொஞ்சமாவது திருப்பி பக்த ஜனங்களைக் கடாக்ஷித்துக் கொண்டுதானிருப்பார்.
ரங்கநாதர் தெற்குப் பார்த்த திருமுக மண்டலத்தோடு மேற்குப் பக்கம் சிரசை வைத்துக்கொண்டு கிழக்கே பாதத்தை நீட்டிக்கொண்டிருப்பவர். நாம் அவருடைய சன்னிதிக்கு எதிரே நின்று பார்க்கும்போது நமக்கு இடதுகைப் பக்கம் அவருடைய சிரசும், வலது கைப்பக்கம் பாதமுமாக இருப்பார்.
திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி கிழக்குப் பார்த்த திருமுக மண்டலத்தோடு இருக்கிறார். அவர் தெற்கே சிரசும் வடக்கே பாதமுமாக சயனித்துக்கொண்டிருப்பதால் அவரையும் நாம் எதிரேயிருந்து பார்க்கும்போது நமக்கு இடதுகைப் பக்கம்தான் சிரசு, வலதுகைப் பக்கம் பாதம் என்று இருக்கும்.
கும்பகோணத்தில் ஆராவமுதன் என்கிற சாரங்கபாணியும் அப்படித்தான் இருக்கிறார். திருவெஃகாவில் மாத்திரம் எப்படியிருக்கிறதென்றால், பெருமாள் தெற்கு, வடக்காக சிரசு, பாதங்களை வைத்து சயனித்திருந்தாலும் சன்னிதி மேற்குப் பார்த்தது. அதாவது அவருடைய திருமுக மண்டலம் மேற்குப் பார்க்கிறது. இதனால் என்னவாகிறதென்றால் நாம் அவருக்கு எதிரே நின்று தரிசிக்கும்போது நம்முடைய வலதுகைப் பக்கம் அவர் சிரசும் இடதுகைப் பக்கம் பாதமும் இருக்கின்றன.
திருவெஃகாவில் சுவாமி மற்ற சயன மூர்த்திகளைப் போல இல்லாமல், வித்தியாசமாக, தெற்கே சிரஸ், வடக்கே பாதம். மேற்குப் பார்த்த திருமுக மண்டலம் என்று இருப்பதால் எல்லாம் மாறிப்போகின்றன. இந்த விதமான அமைப்பில் (Posture -ல்) என்ன விசேஷமென்றால், நம் பார்வையில் அவருடைய திருமேனிக்கு மறுபுறம் இருக்கும் வலது கையை அவர் நன்றாகத் தூக்கி அபயம் சாதித்தாலும் அது நமக்கும் பிம்பத்துக்கும் குறுக்கே வந்து மறைக்காது.
முன்னே சொன்ன சயன மூர்த்திகளுக்கெல்லாம் விசேஷமுள்ள வித்தியாசமாக, இந்த யதோக்தகாரி நமக்கெல்லாம் நன்றாக வலது கையை உயர்த்தி அபயம் சாதித்தபடி சயனித்துக்கொண்டிருக்கிறார்.
தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)