சிவனுக்குக் கட்டுப்பட்ட பைரவர்

சிவனுக்குக் கட்டுப்பட்ட பைரவர்
Updated on
1 min read

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் இருக்கும் முருகப்பெருமானிடம் ‘ஓம்’ என்னும் பிரணவத்தின் உட்கருத்தை உபதேசம் பெற சிவன் புறப்பட்ட போது, பைரவரை ஒரு இடத்தில் தங்கியிருக்கச் சொன்னார். அதுவே வைரவன் கோவில் என்னும் திருத்தலமாகும்.

சிவன் சொல்லுக்குக் கட்டுப்பட்ட பைரவர் வைரவன்கோயில் தலத்தில் காவிரி நதியின் வடகரையில் தெற்குமுகமாக அமர்ந்தார். ஆலயத்தின் வலதுபுறம் ஒரு வாய்க்கால் உத்தரவாகினியாக ஓடுகிறது. பைரவர் நோக்கிய தெற்கு முகத்தில் ஒரு மயானம் உள்ளது. காசிக்குச் சமமான பெருமையுடைய கோவில் என்று இத்தலம் கருதப்படுகிறது.

காசி காலபைரவருக்கு சமமானவர்

காசியில் உள்ள காலபைரவரின் அத்தனை சக்திகளையும் உள்ளடக்கியவராக இந்த பைரவர் எழுந்தருளியிருக்கிறார். பைரவரை ஸ்தாபித்து ஈசன் தங்கிய இடம் ஈசன் குடியாக ஆயிற்று. இது தற்போது ஈச்சங்குடியாயிற்று. தேவர்களை நிறுத்திச் சென்ற இடம் தேவன் குடியாகவும், கணபதியைப் பூஜித்துப் புறப்பட்ட இடம் கணபதி அக்ரஹாரமாகவும் உள்ளது.

சிவனால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட காலபைரவருக்கு ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியிலும் அர்த்தசாமத்தில் உலகநலன் கருதி சுவர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் செய்யப்படுகிறது. ஹோமத்துடன் 108 வலம்புரிசங்காபிஷேகம், கலசாபிசேகம் ஆகியவையும் சிறப்புற நடைபெறுகிறது.

காலபைரவரை வணங்குவதால் வியாதிகள் தீரும். பணத்தட்டுப்பாடு நீங்கும், திருமணத்தடை விலகும், காரியங்கள் வெற்றிகரமாக முடியும் என்று சொல்லப்படுகிறது.

தகவல்: முத்து வெங்கட்ரமணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in