

தேனி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலைவாரம் அல்லிநகரத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இயற்கை சூழ்ந்த வனப்பகுதியில் வீரப்ப அய்யனார் அருள்பாலிக்கிறார். இவர் சுயம்பு வடிவானவர் என்பதுதான் இத்தலத்தின் தனிமகிமை.
மேற்கூரை இல்லாத மூலஸ்தானம்
தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்த கிராமவாசிகள், 500ஆண்டுகளுக்கு முன்பு அல்லிநகரத்திற்கு பால் விற்பனை செய்ய அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்று வந்துள்ளனர்.
வனப்பகுதி வழியாக செல்லும் போது தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் தொடர்ந்து கால் இடறி பால் தரையில் கொட்டியதாகக் கூறப்படுகிறது. ஒரு நாள் பால் கொண்டு வந்த ஒரு கிராமவாசிக்கு வனத்தின் நடுவில் அசரீரி ஒன்று கேட்டது.
அந்த அசரீரி, “அய்யனார் எழுந்தருளியுள்ளேன். உங்களை காக்க வந்துள்ள எனக்கு ஆலயம் கட்டி வழிபடுங்கள். ஆலயத்திற்கு மேற்கூரை இடக் கூடாது. ஆகாய கங்கை மூலம் எனக்கு அபிஷேகம் இருக்கட்டும்” என்று கூறியது.
இதனால் மூலஸ்தானத்தில் மேற்கூரையில்லாமல் திறந்தவெளியில் கோவில் கட்டப்பட்டுள்ளது. அய்யனார் என்றாலே பேசும் தெய்வம், கண் கண்ட தெய்வம் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
சுவாமி புறப்பாடு
தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்களில் திருவிழாக்களின் போது மட்டும் உற்சவமூர்த்தி புறப்பாடு இருக்கும். ஆனால் இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதம் கார்த்திகையின் போது சுவாமி புறப்பாடு இருக்கிறது. வேறு எங்கும் இதுபோல் சிறப்பு இல்லையென பக்தர்கள் கூறுகின்றனர்.
பங்குனி 15-ம்தேதி கொடியேற்றப்பட்டு தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பங்குனி 30-ம்தேதி நள்ளிரவில் சுவாமிக்கு மருந்து கலந்து எண்ணெய் காப்பு சாத்துதல் நடைபெறுகிறது.
சித்திரை முதல்நாள் திருவிழா நடைபெறுகிறது. இது தவிர வைகாசி விசாகம், மாசி திருவிழா, சிவராத்திரி, தைப்பூசம் போன்ற காலங்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.