Published : 04 Jun 2015 12:10 PM
Last Updated : 04 Jun 2015 12:10 PM

கதிரவனுக்கொரு காணிக்கை

சூரிய பகவான் பாரத தேசத்தில் தொன்றுதொட்டு பூஜிக்கப்பட்டு வருகிறார். நம் வாழ்வுக்கு ஆதாரமான ஆற்றல் மற்றும் உள்ளுரத்தைத் தருபவர் சூரிய பகவான். ராமாயணத்தில் அகத்தியர் ராமனுக்கு ராவணாதிகளை வெற்றிகொள்வதற்காக ஆதித்ய ஹ்ருதயம் போதித்தார். இந்தியாவில் சூரியனுக்கென மூன்று ஆலயங்கள் பிரதானமாகக் கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் குஜராத்தில் மோதேராவில் இருக்கும் கோவில். மற்ற இரண்டு ஆலயங்கள் ஒரிசாவின் கோனார்க்கிலும், காஷ்மீரத்தின் மார்த்தாண்டிலும் உள்ளன.

அர்க்க தேவனுக்கு அஞ்சலி

மோதேரா சூரியக் கோவில் புஷ்பவதி நதியின் கரையில், வட குஜராத்தில் மெஹ்சேனாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் , அகமதாபாத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

பண்டைய காலத்தில் இது தர்பாரண்யம் என்ற பெயர் கொண்டிருந்தது. இங்கு ராமபிரான், ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவதற்காகப் பெரிய வேள்வி செய்தார். பின் அங்கே மோதரக் என்ற இடத்தை நிர்மாணித்தார். அது நாளடைவில் மோதேரா என்றாகியது. அதிலிருந்து யாத்ரிகர்கள் அங்கு அர்க்க தேவனுக்கு அஞ்சலி செய்வதற்குத் திரள்திரளாக வரத் தொடங்கினர்.

இந்தச் சூரியக் கோவில் 1026-ம் ஆண்டு பீம தேவன் என்ற சோலங்கி வம்சத்தைச் சேர்ந்த மன்னனால் கட்டப்பட்டது. சோலங்கியர் சூரியனுடைய வழித்தோன்றல்களாகக் கருதப்பட்டனர். இந்தக் கோவில் சோலங்கியரின் கட்டிடக் கலைத் திறன்களைப் பறைசாற்றுவது மட்டுமல்லாது அவர்களின் ஆன்மிக ஈடுபாட்டையும் பிரதிபலிக்கிறது.

பிரம்மாண்டமான குளம்

இங்கே சூரியகுன்ட் என்ற அழகிய குளம் உள்ளது. நளினமான வடிவியல் வரைவுகளைக் கொண்ட இந்தப் பெரிய குளம் (54x37 மீட்டர்) பிரமிட் வடிவமுள்ள படிக்கட்டுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. படிகளிடையே நான்கு நிலைகளில் 108 சிறிய கோவில்களும் கடவுளர்களின் விக்கிரகங்கள் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சற்றே பெரிய கோவில்களும் உள்ளன. ஒரு காலத்தில் இந்த நீர்த்தேக்கம் நிலத்தடி வழி மூலமாக எப்போதும் சுத்தமான தண்ணீரையே வழங்கிக்கொண்டிருந்தது. சபா மண்டபம் எண்கோண வடிவில் உள்ளது.

இங்கே உள்ள 52 தூண்களில் (வருடத்தின் வாரங்களைக் குறிப்பது) ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. இது ரங்க மண்டபம் என்றும் சீதா சாவடி என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து நாம் வெளி வந்த உடனேயே நுழைவது குடா மண்டபம். இங்குதான் கோவிலின் கருவறை உள்ளது. இது சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டதாகும். வவ்வால்கள் நம்மை வரவேற்கின்றன. கோவிலின் வெளிப்புறம் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளது. அடிப்பக்கத்திலிருந்து மேல்வரை புராணக் காட்சிகள் சிற்பங்களாக மிளிர்கின்றன. இந்தக் கோவிலில் வழிபாடு இல்லையென்றாலும் இந்த வளாகத்திலேயே ஒரு சிறிய கோவில் உள்ளது. அங்கு பூஜைகள் செய்து பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம்.

செங்கதிரோனின் கண்வீச்சு

இந்தக் கோவிலுக்குச் சம இரவு (equinox ) நாட்களில் செல்வது மிகச் சிறப்பு. மார்ச் 20-ம் தேதி முதல் செப்டம்பர் 21-ம் தேதி வரையான நாட்களில்தான், செங்கதிரோனின் கண் வீச்சு நேராக கர்ப்பக்கிரகத்தின் மேல் விழுந்து கோவில் முழுவதும் ஜொலிக்கும். எல்லா மூலை முடுக்குகளிலும் வெளிச்சம் பாய்ந்து ஆலயமே பொன்னொளியால் மிளிரும். இடிபாடுகளுடன் இருந்தாலும் இந்த ஆலயத்தின் மேன்மையும் கம்பீரமும் குறையவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x