தத்துவ ஞானங்களின் மூலபாடம்

தத்துவ ஞானங்களின் மூலபாடம்
Updated on
1 min read

இயற்கையின் சக்தியை உற்றுக் கவனித்த ஆதிகாலத்து அறிஞர்கள், இயற்கையையே தெய்வங்களாக்கி, மந்திரங்களால் புகழத் தொடங்கினார்கள். காற்று, தீ, சூரியன், சந்திரன், இடி, மின்னல், மழை அனைத்துமே தெய்வங்களாக்கப்பட்டன. சோமபானம் என்ற மதுகூடத் தெய்வத்தின் ஸ்தானத்தைப் பெற்றுவிட்டது! சோம பானம், சிந்தனையைத் தூண்டும் ஒரு கடவுளாக மதிக்கப்பட்டது!

இயற்கையின் அற்புத சக்திகளை இப்படித் தெய்வமாக்கித் தொழுவதே ஆதிகாலத்து ஆரியர்களின் மதமாக இருந்தது. வேதக் கடவுள்கள் அனைத்தும் மனிதர்களைப் போல் குறைபாடுகள் உள்ளவைதாம். கடவுள்களிலும் புரோகிதர்கள் உண்டு, வீரர்கள் உண்டு, குடிகாரர்கள் உண்டு, காமாந்தகாரர்கள் உண்டு. மனிதர்கள் தங்களுக்கு வேண்டியவற்றைப் பெறுவதற்காக இந்தத் தெய்வங்களை ஆராதித்தார்கள்.

நரபலியை வேதங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், நரபலி கொடுத்தால் தெய்வங்கள் திருப்தி அடைந்து நன்மைகள் செய்யும் என்னும் நம்பிக்கை வேத காலத்தில் இருந்திருக்கிறது. சுனசேபன் என்பவனை நரபலிக்காக அழைத்துச் சென்ற கதை ஒன்றுண்டு. யாகங்களில் குதிரைகளைப் பலியிட்டு வந்தார்கள்.

கடவுள்களுக்கு மனிதர்களைப் போல் உருவம் கொடுத்தாலும், வேத காலத்தில் விக்கிரக வழிபாடு இல்லை. கடவுள்களுக்கென்று கோயில்கள் இல்லை. மனிதனுக்கும் கடவுளுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் பூசாரிகளும் இல்லை. மனிதனே நேரடியாகக் கடவுளை ஆராதிக்கலாம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விதமான தொழிலும் சக்தியும் உண்டு. எந்தெந்த விஷயத்தில் உதவி தேவையோ அந்தந்தக் கடவுளைப் பிரார்த்தித்து, நன்மைகளை அடைந்துகொள்ள வேண்டும்.

அதர்வ வேதம் காலத்தால் பிந்தியது. காலப்போக்கின் அளவை வேதங்களுக்குள் உள்ள வித்தியாசங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். ஆதி இந்தியர்களின் நம்பிக்கைகளுக்கும், ஆரியர்களின் நம்பிக்கைகளுக்கும் தொடர்பாக அமைந்ததுதான் அதர்வ வேதம்.

இயற்கை வழிபாட்டில் தொடங்கிய ஆரிய மதம், கடைசியில் கிரியைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, படாடோபத்துக்குள் மூழ்கிவிட்டது. வாழ்க்கையில் வெறும் சடங்குகள் முக்கியத்துவம் பெற்றனவே தவிர, உண்மைப் பொருளை உணரும் ஆர்வம் தணிந்துவிட்டது. இந்தச் சிக்கலிலிருந்து விடுபட்டு, உண்மைப் பொருளை அறியும் ஞானத்துக்குப் பாதையாக அமைந்தவைதாம் உபநிஷதங்கள். பிற்காலத்திய ஞானிகள் சடங்குகளைப் பற்றி ஆராய்வதை விட்டுவிட்டு, வேதங்களில் புதைந்து கிடக்கும் உண்மைத் தத்துவத்தை மட்டும் வெளிக்கொணரப் பாடுபட்டதனால் தோன்றியவையே உபநிஷதங்கள். உபநிஷதங்கள்தாம் இந்தியத் தத்துவ ஞானங்கள் அனைத்துக்கும் மூலபாடம்.

(பிரும்ம இரகசியம் நூலிலிருந்து)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in