

இந்திய நதிகளில் கங்கைக்குத் தனி இடம் உண்டு. கங்கா மாதா என்று கங்கை பெண் தெய்வமாகப் போற்றப்படுகிறாள்.
பூமி தாங்கும் வேகத்தில் கங்கோத்ரி என்ற இடத்தில் இருந்து புறப்பட்டாள் கங்கை. அன்னை பிறந்த இடம் கங்கோத்ரி. மாதம் வைகாசி. அழகாய் சுழித்து சிற்றாடை உடுத்திய சிறு பெண் போல் சலசலத்து ஓடி வரும் கங்கையைக் கொண்டு, தன் முன்னோர்களை மோட்சமடையச் செய்தார் பகீரதன். தங்களின் முன்னோர்களும் மோட்சமடைவர் என்ற அதே நம்பிக்கையில் பாரத மக்கள் பலரும் தங்கள் முன்னோர்கள் சாம்பலை இன்றும் கங்கை நீரில் கரைக்கின்றனர்.
ஆரத்தி
ஹரித்துவார், புனித நதி கங்கைக்கு பூசைகள் நடக்கும் இடங்களில் ஒன்று. ஒவ்வொரு நாளும் மாலை ஆறு மணிக்கு இந்த இடத்தில் நதியின் இருபுறங்களிலும் உள்ள நீண்ட படித்துறையில் ஆரத்தி காட்டப்படும்.
சுற்றுப்புறத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய மற்றும் பெரிய கோயில்களில் இருந்து ஆரத்தி எடுத்து வந்து தீபத்தால் கங்கை அன்னையைப் போற்றுவர். நீரில் பூக்களை இடுவர். அந்தத் தீப ஒளி, நீரில் தங்கப் பட்டாடை போல் ஒளிர அதனை அணிந்து தளிர் நடையிடுவாள் அன்னை கங்கை.
பக்தர்கள் `கங்கா மாதாகீ ஜெய்` என்று உரக்கக் கூறி பக்தியில் கண்ணில் நீர் மல்கக் கரம் குவிப்பார்கள். அனைத்தையும் உள்வாங்கியபடி அமைதியாகப் பயணித்தபடி இருப்பாள் அன்னை கங்கை.