

ஒவ்வொரு யாகத்துக்கும் ஒவ்வொரு பலன் இருப்பதாக நம்முடைய புராணங்கள் சொல்கின்றன. தங்கள் ராஜ்ஜியத்தின் எல்லைகளை விரிவுபடுத்த, அரசர்கள் அஸ்வமேத யாகம் செய்வர்.
ராமன் இப்படிப்பட்ட அஸ்வமேத யாகம் செய்ததை, ராமாயணம் தெரிவிக்கிறது. இன்னும் சத்ரு சம்ஹார யாகம், புத்திரப் பேறு யாகங்களும் பலரால் அனுஷ்டிக்கப்பட்டதைப் பல புராணங்களின் வழி அறியலாம்.
பெரும் பொருட்செலவில் நடத்தப்படும் இத்தகைய யாகங்களின் மார்க்கமாக இறைவனின் அருளைப் பெறுவது ஒருவழி என்றால், தம்முடைய யாகத்தை, வேண்டுதலை தாயுமானவரின் வழியில் இறைவனுக்குத் தெரிவிப்பது இன்னொரு வழி.
நெஞ்சகமே கோயில்
நினைவே சுகந்தம்
அன்பே மஞ்சன நீர்
பூசை கொள்ள வாராய் பராபரமே
என்று பாடுவார் தாயுமானவர்.
இப்படி மனதாலேயே இறைவனுக்கு வேண்டுதலை வைப்பது, யாகங்களை வளர்ப்பதற்கு ஆன்மிகத்தில் வழங்கப்படும் பெயர் - யோக தீக்கை.