

ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி உதவிகள், ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், கிராம வளர்ச்சி இயக்கம், சுதேசி ஜாக்ரன் போன்ற சமூகத் தொண்டுகளை 40 ஆண்டுகளாகச் செய்துவருபவர் சர்மா சாஸ்திரிகள். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர், தற்போது சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்துவருகிறார்.
பல முன்னணி இதழ்களிலும் ஆன்மிகக் கட்டுரைகள், ஆன்மிகம் சார்ந்த கேள்விகளுக்கு பதில்களை எழுதிவரும் சர்மா சாஸ்திரிகள் பயண அனுபவங்கள் உள்பட பல்வேறு ஆன்மிகத் தலைப்புகளில் ஏறக்குறைய 10-க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியிருப்பவர். சர்மா சாஸ்திரிகளின் முதல் நூல் The Great Hindu Tradition. 2010-ல் சுவாமி தயானந்த சரஸ்வதியால் வெளியிடப்பட்ட இந்த நூல், ஆன்மிக அன்பர்களின் பரவலான வரவேற்பைப் பெற்றது.
இதன் தமிழாக்கமாக 2012-ல் வெளியான `வேதமும் பண்பாடும்’ நூல் மூன்றே ஆண்டுகளில் ஏழு பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இதுதவிர, க்ஷேத்ராடனம், பஞ்சாயதன பூஜை, சமிதாதானம், ப்ரஹ்ம யக்ஞம், பரிசேஷனம் ஆகிய நூல்களும் ஆன்மிக பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை.
தற்போது யக்ஞோபவீதம் (பூணூல்) என்னும் நூலினை எழுதியிருக்கும் சர்மா சாஸ்திரிகள், அதன் முக்கியத்துவத்தைக் குறித்துக் கூறும்போது, “உபநயனத்தின்போது ஒருவனுக்கு இயல்பாக வந்துசேரும் இந்தப் பூணூல், பிறகு அவனுடைய வாழ்வில் ஒன்றிவிடுகிறது. அனைத்துச் சடங்குளும் அனுஷ்டானங்களும் பூணூல் இல்லாமல் நடக்காது. உபநயனம் ஆன பிறகு பூணூல் இல்லாமல் செய்யும் எந்தக் கர்மாவும் பயன் தராது. இந்தப் பூணூலை யக்ஞோபவீதம், ப்ரம்ம சூத்ரம் என்றும் அழைப்பார்கள்” என்றார்.
96 திரிகள்
பூணூலில் 96 திரிகள் உள்ளன. தமிழில் முப்புரி நூல் என அழைக்கப்படும் பூணூலைப் பற்றிய குறிப்புகள் புறநானூறு, கந்த சஷ்டி கவசம், விநாயகர் அகவல் போன்ற பல நூல்களிலும் காணப்படுகின்றன என்று தெரிவிக்கிறார்.
பால பெரியவரின் கட்டளை
“இரண்டு ஆண்டுகளுக்கு முன், பால பெரியவரிடம் ஆசி பெறும்போது, பூணூலைப் பற்றி ஒரு புத்தகம் எழுதேன் என்றார். பூணூலைப் பற்றி எழுதும் அளவுக்கு என்ன விஷயம் இருக்கப் போகிறது என்று நினைத்தேன். இது தொடர்பாக ஆராய்ந்தபோதுதான், வேதத்தில், கிரந்தங்களில் ஏகப்பட்ட தகவல்கள் கொட்டிக் கிடப்பதை உணர்ந்தேன். தொல்காப்பியம் போன்ற பழைய ஆதார நூல்களிலும் இது குறித்த குறிப்புகள் உள்ளன. இந்த ஆதார நூல்களில் இருந்த முத்துக்களைச் சேதாரமில்லாமல் மாலையாகத் தொடுக்கும் பணியைத்தான் அடியேன் செய்திருக்கிறேன்.
பூணூல் எப்படித் தயாரிக்கப்படுகிறது, எந்தெந்த சந்தர்ப்பங்களில் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்று எழுதியுள்ளேன். பொதுவாக உரிமைகளைப் பற்றிப் பேசுபவர்கள் தங்களின் கடமைகளை உணர்வதில்லை. கடமை இல்லாமல் உரிமை இல்லைதானே! அதனால், பூணூல் அணிபவரின் கடமைகள், உரிமைகள் என்ன? என்பதையும் இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளேன்” என்கிறார் சர்மா சாஸ்திரிகள்.