Last Updated : 11 Jun, 2015 01:27 PM

 

Published : 11 Jun 2015 01:27 PM
Last Updated : 11 Jun 2015 01:27 PM

பார்த்தசாரதி தரிசனம்

ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் சம்ப்ரோக்ஷணம்- ஜூன் 12

ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் சம்ப்ரோக்ஷணம் வரும் ஜூன் 12 அன்று நடைபெறுகிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கோவில் பல விதங்களிலும் புதுப்பிக்கப்படும் இந்தச் சமயத்தில் இந்தக் கோயிலைப் பற்றிய சில முக்கியமான தகவல்கள் இங்கே தரப்படுகின்றன:

ஒன்பது அடி

108 வைணவ திவ்ய தேசங்களுக்குள் 61-ம் திவ்ய தேசமாகப் போற்றப்படும் பார்த்தசாரதி கோயில் மூலவர் ஒன்பது அடி உயரமானவர்.

வெண் மீசை

வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத அதிசயமாகப் பெருமாள் இங்கே வெண்மீசைக்காரராகக் காணப்படுகிறார்.

உற்சவர் தந்த பெயர்

மூலவர் பெயர் வேங்கடகிருஷ்ணன் என்றாலும் உற்சவர் பார்த்தசாரதியின் பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது. பார்த்தசாரதி என்று சொன்னாலே திருவல்லிக்கேணி கோயில் பெருமாளே பக்தர்களால் நினைவு கொள்ளப்படுகிறார்.

முக வடுக்கள்

இந்தக் கோயிலில் உள்ள பார்த்தசாரதியின் முகத்தில் வடுக்கள் காணப்படும். பார்த்தனுக்குச் சாரதியாய்த் தேர் ஓட்டியபோது எதிரிகளின் அம்புகள் பட்டதால் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் அவை. இந்த வடுக்கள் நீங்க வேண்டும் என்பதற்காகவே பெருமாளுக்கான நிவேதனத்தில் பெருமளவு நெய் சேர்க்கப்படுகிறதாம்.

தனிச் சன்னிதி

பிருகு முனிவரின் மகளாகப் பிறந்த வேதவல்லித் தாயாருக்கு இந்தக் கோயிலில் தனிச் சன்னிதி உள்ளது. பிருகு முனிவரின் வேண்டுதலுக்கிணங்க அப்படி அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேதவல்லித் தாயார் தனிச் சன்னிதியில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.

இரண்டு கரங்கள்

பொதுவாக நான்கு கரங்களுடன் காட்சி தரும் பெருமாள், இங்கே இரண்டு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். மனித வடிவில் கிருஷ்ணனாகப் பிறந்ததால் இரண்டு கைகள் மட்டுமே அவருக்கு உண்டு.

ஐந்து சன்னிதிகள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பஞ்ச மூர்த்தித்தலம். இங்கு வேங்கட கிருஷ்ணர், ரங்கநாதர், ராமபிரான், கஜேந்திர வரதர், யோக நரசிம்மர் என்று ஐந்து சன்னிதிகளும் பிரதானமாக இருக்கின்றன. திருக்கச்சிநம்பி, வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் சன்னிதிகள் பிராகாரத்தில் இருக்கின்றன.

ஞானமும் வளமும்

பார்த்தசாரதி திருக்கோயிலில் குடி கொண்டுள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம். பார்த்தசாரதி பெருமாளை வேண்டினால் கல்யாணம், குழந்தை, குடும்ப ஐஸ்வர்யம் ஆகிய வரங்களை அள்ளி அருளுபவர் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

பாரதியார்

ஆழ்வார்கள் பாசுரங்கள் மூலம் பார்த்தசாரதி பெருமாளை பாடிப் பரவியுள்ளனர். தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் பார்த்தசாரதியின் மீது இயற்றிய பாடல்கள் இன்றும் கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன. பாரதியார் தினமும் பார்த்தசாரதிப் பெருமாளை வழிபட்டிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

சர்க்கரைப் பொங்கல்

இக்கோயிலில் சர்க்கரைப் பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதம். 2 கிலோ அரிசியில் சக்கரைப் பொங்கல் தயாரிக்கப்பட்டால், 1 கிலோ 400 கிராம் முந்திரிப் பருப்பும் 700 கிராம் நெய்யும் சேர்க்கப்படுகின்றன.

கொண்டல் வண்ணனின் கொண்டைகள்

மகாபாரதப் போரில் அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டியது மட்டுமல்லாமல் பாஞ்ச சன்னியம் என்ற தனது சங்கை எடுத்து ஊதி போரைத் தொடக்கிவைத்தவர் கிருஷ்ணர். போர்க்களத்தில் பெரிய மீசை வைத்துக் கொண்டு காட்சி அளிக்கிறாராம் பார்த்தசாரதி. இப்படி மீசையுடன் காட்சியளிக் கும் பார்த்தசாரதியை வேறு எங்கும் பார்க்க முடியாது. அதுபோலவே பிற திருத்தலங்களில் காணக் கிடைக்காத காட்சியாகக் குடும்ப சமேதராக இங்கு காட்சி அளிக்கிறார். மேலும் கஜேந்திர வரதர் கருடர் மீது காட்சி அளிப்பதால் `நித்திய கருட சேவை பெருமாள்` என்று அழைக்கப்படுகிறார்.

பார்த்தசாரதி கோயிலில் பிரதான உற்சவங்களாக பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இவற்றைத் தவிர ஆண்டு முழுவதும் தினந்தோறும் பார்த்தசாரதிப் பெருமாள் பல பூஜைகளால் கொண்டாடப்படுகிறார். இப்பெருமாளை மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் பேயாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசை ஆழ்வார் ஆகியோர் ஆவர்.

பெருமாள் அலங்காரங்களில் விதவிதமான கிரீடங்களை அணிந்து காட்சி அளிக்கிறார். பார்த்தசாரதிப் பெருமாள் தேருக்கு எழுந்தருளும்போது அணிந்திருக்கும் சிகித்தாடு கொண்டை, புஷ்பக் கொண்டை, தொப்பாரம் என்ற கொண்டை, வேங்கடாத்ரி கொண்டை, பாண்டியன் கொண்டை ஆகியவை அவற்றுள் சில.

வேதவல்லித் தாயார்

பிருகு முனிவருக்குப் பெருமாளைத் தன் மருமகனாக அடைய ஆசை. அப்படியானால் தாயார் மகளாக வேண்டும். அவரது விருப்பத்துக்கு ஏற்பத் தாயார் பிருகு முனிவரின் மகளாகப் புஷ்கரணி மலரில் தோன்றினாள். பிருகு முனிவர் வேதவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். இங்கு பெருமாள் ரங்கநாதானாகத் தோன்றி வேதவல்லியை மணந்து பிருகு முனிவருக்கு மருமகனார். தனிச் சன்னிதி கொண்ட தாயார் கோயிலை விட்டு வெளியே வருவது இல்லை. உத்திர நட்சத்திரத்தன்றும், வெள்ளிக்கிழமைகளிலும் அலங்காரத் திருக்கோலத்தில் ஊஞ்சல் சேவை சாதிக்கிறாள்.

தலம் பற்றி

மூலவர் : பார்த்தசாரதி

உற்சவர் : வேங்கடகிருஷ்ணன்

தாயார் : ருக்மிணி

தல விருட்சம் : மகிழம்

தீர்த்தம் : கைவிரணி புஷ்கரணி

ஆகமம் : வைகானசம்

தொன்மை : சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது

காரணப் பெயர் : பிருந்தாரண்ய ஷேத்திரம்

ஊர்ப் பெயர் : திருவல்லிக்கேணி.

நேரம் : கோயில் திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x