

ஒரு வேடன் புறா ஒன்றைப் பிடித்தான். அதை அறுத்துக் கறி சமைத்து சாப்பிட எண்ணினான். அப்போது புறா அந்த வேடனிடம், “ நீ, என்னைக் கறி சமைத்து சாப்பிட்டால் உன் பசி நீங்கிவிடப் போவது இல்லை. உன் மனமும் நிம்மதியடையாது. நான் மூன்று அறிவுரைகள் கூறுகிறேன். அது என்னை அறுத்து கறி சமைத்துச் சாப்பிடுவதை விட ஆயிரம் பங்கு உயர்வானது” என்றது.
வேடன் புறாவின் ஆலோசனைக்கு சம்மதித்து, தனக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டான்.
“இப்படிக் கேட்டால் முடியுமா? முதல் அறிவுரையை நான் உன் கையில் இருக்கும்போது சொல்கிறேன். இரண்டாவதை என்னை நீ விடுதலை செய்த உடன் கூறுகிறேன். மூன்றாவதை நான் பள்ளத்தாக்கில் இருக்கும்போது சொல்கிறேன்” என்று புறா கூறியது.
வேடன் புறாவைக் கையில் வைத்துக் கொண்டான்.
“ உனது கையை விட்டு நழுவியதைப் பற்றிக் கவலைப்படாதே” என்று கூறி சிறகடித்துப் பறந்து மரக்கிளையில் அமர்ந்துகொண்டது.
வேடன் செய்வது அறியாது சமாளித்து, இரண்டாவது அறிவுரையைக் கூறச் சொன்னான்.
“சாத்தியமில்லாத ஒன்றினை நம்பாதே” என்று கூறியது. பின்னர், “நீ என்ன இவ்வளவு துரதிர்ஷ்டசாலியாக இருக்கிறாய்? நீ என்னை அறுத்து இருந்தால் என் வயிற்றில் இருந்து இருபது தோலா எடையுள்ள இரண்டு பொன் நகைகளை எடுத்திருக்கலாம்” என்றது.
இது கேட்டு வேடன் தன் விதியை நொந்து வருந்தினான். புறா பறந்து சென்று பள்ளத்தாக்கில் அமர்ந்தது. வேடன் மீண்டும், மூன்றாம் அறிவுரையைக் கூறச் சொன்னான்.
“கையை விட்டு நழுவிவிட்டதைப் பற்றி கவலைப்படக் கூடாது. சாத்தியமில்லாத ஒன்றை நம்பக் கூடாது என்றும் நான் உன்னிடம் கூறினேன் அல்லவா? என் ரத்தம், இறைச்சி, இறக்கை எல்லாவற்றையும் சேர்த்து நிறுத்துப் பார்த்தால் இருபது தோலாவுக்கு மேல் வராதே? அப்படியெனில் எனது வயிற்றில் இருபது தோலா எடையுள்ள இரண்டு பொன் நகைகள் எப்படி இருக்க முடியும்? இதனை நீ நம்பலாமா? நம்பி உன் விதியை நொந்து வருந்தலாமா?” என்று இடித்துரைத்துவிட்டு அவ்விடத்தை விட்டுப் பறந்து சென்றது.
நூல்: நெஞ்சில் மலர்ந்த பூக்கள்
ஆசிரியர்: நாகை ஜி. அஹ்மது
வெளியீடு: மாஹின் பப்ளிஷர்ஸ்
20/14, சுல்தான் தெரு, சென்னை - 01
தொலைபேசி: 044- 25225143
விலை: ரூ.100/-
ஆன்மிக நூலகம்