கிரியாயோகம் என்ற ராஜயோகத்தின் தந்தை

கிரியாயோகம் என்ற ராஜயோகத்தின் தந்தை
Updated on
2 min read

சத்குரு பரம பூஜ்ய லாஹிரி மஹாசயர் கிரியா யோகம் எனும் ராஜ யோகத்தின் தந்தை ஆவார். இவர் மூலம் உலகிற்கு அறியப்பட்டு பலராலும் பயிலப்படுகின்ற இந்த யோகமானது பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய ‘ஒரு யோகியின் சுயசரிதை’ மூலம் எல்லோருக்கும் தெரியவந்தது. இவர் இல்லறத் துறவியாக எளிய வாழ்க்கையை காசியில் கழித்தார். இவருடைய குரு பாபாஜி ஆவார். இவர் பல ஆன்மீக விஷயங்களை டைரிக் குறிப்புகளாக எழுதி பலருக்கும் கிரியா யோக தீட்சை அளித்துள்ளார்.

மக்களின் பார்வைக்கு வந்த லாஹிரி

காசியில் வாழ்ந்த சியாமசரண் லாஹிரியின் சீடர்கள் தன் குருவைப் பற்றி வங்காளமொழியில் சிறு நூலை வெளியிட்டனர். ஆனால் சியாமசரண் லாஹிரியை உலகம் முழுதும் உள்ள மக்கள் தெரிந்துகொள்ளும் அளவிற்கு லாஹிரி மஹாசாயரின் வாழ்க்கை, அவர் சந்தித்த குருக்கள், லாஹிரியின் மீது பக்தி கொண்ட விசுவாசமுள்ள சீடர்கள் பற்றிய விஷயங்கள் இவற்றை அழகாக விளக்கிக் கூறியவர் ஸ்ரீபரமஹம்ச யோகனந்தர் தான்.

லாஹிரி மஹாசயர் தான் வாழும்போது எந்த ஒரு நிறுவனத்தையும் தொடங்கவில்லை. அதேபோல் நூல் வெளியிடவும் இல்லை. தன்னுடைய யோக அனுபவங்களையும் வேத சாஸ்திர உண்மைகளையும் தன் ஞானத்தால் 26 டைரிகளாக எழுதினார்.

காசியில் பொங்கிய அருள் அருவி

கி.பி. 1828-ம் வருடம், செப்டம்பர் 30-ம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று வங்காளத்தில் குர்ணி கிராமத்தில் வசிக்கும் கௌர்மோஹன் லாஹிரி என்பவருடைய குடும்பத்தில் அவருடைய இரண்டாவது மனைவி முக்தகேசி தேவிக்கு குழந்தை பிறந்தது. அவர்தான் சியாமாசரண் லாஹிரி ஆவார்.

சிறுவயதில் லாஹிரி வேதங்களை மிக எளிதாக கற்று தேர்ச்சி பெற்றார். பிறமொழிகளும் கற்றார். ஒருமுறை தேவி முக்த கேசி, தன் குழந்தையுடன் சிவன் கோயிலில் அமர்ந்திருந்தார். குழந்தையும் தன் தாயைப்போல் பொறுமையாகத் தியானத்தில் ஈடுபட்டான். திடீரென ஓர் திடகாத்திரமான சன்னியாசி அவர்கள் முன் தோன்றி, “மகளே உன்னுடைய இந்தக் குழந்தை சாதாரணக் குழந்தையல்ல, நான்தான் இவனை என் யோக பலத்தின் மூலம் இங்கு அனுப்பினேன்.

ஆயிரக் கணக்கான மக்கள் இல்லற வாழ்க்கையால் வஞ்சிக்கப்பட்ட வர்களுக்காகவும், சம்சார வாழ்வில் மூழ்கி வேதனையை அனுபவிப்பவர்களாகவும் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வண்ணம் ரகசியமான இறை சாதனை செய்யும் மார்க்கத்தை கற்பிப்பதற்காக இவனை அனுப்பினேன். இவன் இல்லற வாழ்வில் இருந்துகொண்டே மாபெரும் யோக ரகசியங்களை வெளிப்படுத்துவான்.

நான் நிழலைப் போல் இந்த குழந்தையுடனேயே இருப்பேன். இவன் தன் வாழ்நாள் முழுவதும் என்னுடைய நிழலிலேயே வாழ்ந்து தன்னுடைய ஆத்ம ஜோதியை எங்கும் பரப்புவான்” என்று கூறி மகாமுனி மறைந்தார்.

1846-ல் சியாமாசரண் லாஹிரி, தேவ நாராயண் வன்மால் என்பவரின் மகளான ஸ்ரீமதி காசிமணியுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டார். குர்ணி கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த கிராமத்தில் கௌர் மோஹனின் சொத்து மட்டும் அல்லாமல் குலதெய்வமான சிவன் கோவிலும் நதியில் மூழ்கிவிட்டது.

கி.பி. 1850-ம் ஆண்டு, அங்கு வாழ்ந்த சிவபக்தர் நதியில் உள்ளே இருந்த சிவன் சிலையை வெளியே எடுத்துக் கோயில் கட்டினார். அந்த கோயிலின் பெயர் ‘ஜலேஸ்வரர்’. இப்பொழுது அந்த இடம் குர்ணி கிராமத்தில் ’சிவதல்லா’ என்ற பெயரில் பிரசித்தமாக இருக்கிறது. இது பொதுமக்களின் கோயில்.

கி.பி. 1868-ம் ஆண்டு சியாமா சரண் லாஹரி, உத்தியோக காரியமாக வெகுதொலைவில் உள்ள ராணி கோத்திற்கு கிளம்பினார். அப்பொழுது அப்பகுதிக்கெல்லாம் புகைவண்டி சேவை இல்லை.

கிரியா யோக தீட்சை

அங்கிருந்து 15 மைல் தூரத்தில் துரோணகிரி மலை உள்ளது. அங்குதான் லாஹரி மஹாசயர் தன் மகாகுரு பாபாஜியை சந்தித்து கிரியா யோக தீட்சை பெற்றார். தன் குருவுடன் 21 நாட்கள் அந்த மலைப் பகுதியில் தங்கினார். ஒவ்வொரு நாளும் சிறு குழுவிடம் மகாகுரு பாபாஜி சத்சங்கம் செய்வார்.

“ஆன்மீகத் தேடல் உள்ள சாதகர்கள் உன் வரவை எதிர் நோக்கி இருக்கிறார்கள். எல்லா இல்லறவாசிகளுக்கும் நீ முக்தி மார்க்கத்தை காட்டுவாய். உலக வாழ்வில் மயங்கிய காலத்தில் பயன்தரும் யோக சாதனை அவசியம் தேவை. எனவே இந்த யோக சாதனை மார்க்கத்தை நீ எல்லோரிடமும் கூறு. நீ பிறந்ததே அதற்காகத்தான்” என்றார் பாபாஜி.

(இப்பகுதி அடுத்த வாரம் முடியும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in