

மீனைப் பிடித்துக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கத்துக் கொடுப்பதே சிறந்தது. இது இன்றைய சுயமுன்னேற்ற சிந்தனையாளர்களின் கண்பிடிப்பு. ஆனால் இதை தங்களது பிள்ளைகளிடம் பரிசோதனை செய்துபார்க்க இன்றைய பெற்றோர்கள் தயாரா என்று பார்க்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உடைமைகளைச் சேர்த்து வைப்பது இயல்பானதே.
பிற இனத்தவரின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படும் புனித பவுல்(சின்னப்பர்), “பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே உடைமைகளைச்சேர்த்து வைக்க வேண்டும்” என்று அவருடைய காலத்திலிருந்த(கி.பி.7ம் நூற்றாண்டு) பெற்றோர்களுக்குச் சொன்னார். மேலும், பிள்ளைகளைக் கவனிப்பது பெற்றோர்களின் முக்கிய கடமையாக இருக்கிறதென்றும் பவுல் சொன்னார். அது இன்றைய காலத்துக்கும் பொருந்தக் கூடியதுதான். “ஒருவன் தன் சொந்த பிள்ளைகளையும் ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் அன்புசெலுத்தி கவனித்துக் கொள்ளாமல்போனால், அவன் பரலோகத் தந்தை மீதான விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
இது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல; பெற்றோர்களின் சொத்துக்களை நல்ல முறையில் செலவு செய்யவும் அவற்றை பன்மடங்கு நேர்மையான வழியில் பெருக்கவும் செய்ய வேண்டிய கடமைகொண்ட பிள்ளைகளுக்கும் பொருந்தும். அதன்பொருட்டு கிறிஸ்து இயேசு மக்கள் மத்தியில் போதிக்கும்போது கூறிய கதை பிள்ளைகள் பெற்றோர்கள் ஆகிய இரு தரப்புக்கும் வழிகாட்டியாக அமைவதைப் பாருங்கள்.
ஊதாரி மகன்
ஒரு யூதருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். இளைய மகன் தன்னுடைய தகப்பனிடம் வந்து, “அப்பா, சொத்தில் எனக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுத்து விடுங்கள்” என்று கோரினான். அதனால், அவர் தன்னுடைய சொத்தை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். இளைய மகன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அந்நிய தேசமொன்றுக்குப் புறப்பட்டுப் போனான். அங்கு அவன் ஒழுக்கக்கேடான வாழ்க்கை வாழ்ந்தான். தன்னிடமிருந்த சொத்துகள் அனைத்தையும் ஊதாரித்தனமாகச் செலவழித்தான்.
எல்லாவற்றையும் அவன் செலவழித்து முடித்திருந்தபோது, அந்தத் தேசம் கடும் பஞ்சத்தை எதிர்கொண்டது. அவன் வறுமையில் வாடினான். அதனால் அந்தத் தேசத்தைச் சேர்ந்த ஒரு செல்வந்தரிடம் போய் கெஞ்சி மன்றாடி வேலை கேட்டான். அவர் தன் பன்றிகளை மேய்க்கச் சொல்லி அவனைத் தன்னுடைய வயல்களுக்கு அனுப்பினார். பன்றித் தீவனம் சாப்பிட்டாவது தன் வயிற்றை நிரப்ப அவன் விரும்பினான்.
ஆனால், அவனுக்கு யாரும் அதைக்கூட கொடுக்கவில்லை. அவனுக்குப் புத்தி வந்தது. “என் தகப்பன் வீட்டில் எத்தனையோ பணியாட்கள் வயிராற உண்ணும்போது நான் இங்கே பசியால் செத்துக்கொண்டிருக்கிறேன். அதனால் நான் என் தகப்பனிடம் போய் மன்னிப்புக் கேட்பேன் என்று புறப்பட்டுப் போனான்.
விருந்து
வெகு தூரத்தில் மகன் வந்துகொண்டிருந்தபோதே அவனுடைய அப்பா அவனைப் பார்த்துவிட்டார். மனதுருகி, ஓடிப்போய் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தமிட்டார். அப்போது அந்த மகன், “அப்பா, கடவுளுக்கும் உங்களுக்கும் எதிராக நான் பாவம் செய்துவிட்டேன். உங்கள் மகன் என்று சொல்வதற்குக்கூட இனி எனக்குத் தகுதியில்லை. உங்களுடைய கூலியாட்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கைகூப்பி வேண்டினான்.
அவனுடைய தகப்பனோ தன் பணியாட்களிடம், “சீக்கிரம் போய் முதல்தர அங்கியைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய விரலுக்கு மோதிரமும், காலுக்குச் செருப்பும் போட்டுவிடுங்கள். விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். அனைவரும் உண்டு மகிழ்வோம்; ஏனென்றால், என்னுடைய மகன் செத்துப்போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துவிட்டான்; காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான்” என்றார். அப்படியே அவர்கள் மகிழ்ந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
மூத்தமகனின் கோபம்
அவருடைய மூத்த மகன் அப்போது வயலில் இருந்தான். அவன் வேலைமுடித்து வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களின் ஓலியைக் கேட்டான். அதனால், பணியாட்களில் ஒருவனை அழைத்து, என்ன நடக்கிறதென்று கேட்டான். அதற்கு அவன், ‘உங்கள் தம்பி வந்துவிட்டார்; அவர் பத்திரமாக வீடு திரும்பியிருப்பதால் உங்கள் தகப்பன் கொழுத்தக் கன்றை அடித்து விருந்து வைத்திருக்கிறார்’ என்றான். அதைக் கேட்டு அவன் கடுங்கோபம் அடைந்தான்; வீட்டிற்குள் போகவே அவனுக்குப் பிடிக்கவில்லை.
அப்போது, அவனுடைய தகப்பன் வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தார். அதற்கு அவன் “இதோ, இத்தனை வருடங்களாய் நான் உங்களுக்காக உழைத்து வந்திருக்கிறேன்; உங்களுடைய பேச்சை ஒருபோதும் நான் மீறியதில்லை, என்றாலும், என் நண்பர்களோடு விருந்து கொண்டாட இதுவரை நீங்கள் எனக்கு ஓர் ஆட்டுக்குட்டியைக்கூடத் தந்ததில்லை.
ஆனால், பாலியல் தொழிலாளர்களுடன் உல்லாசமாயிருந்து உங்கள் சொத்துகளை விழுங்கிவிட்ட உங்களுடைய மகன் வந்தவுடன் அவனுக்காகக் கொழுத்தக் கன்றையே அடித்து விருந்து வைத்திருக்கிறீர்கள்” என்று கோபம் பொங்க சொன்னான். அதற்கு அவர், “மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னிடம் இருப்பதெல்லாம் உன்னுடையதுதான்; உன் தம்பியோ செத்துப்போயிருந்தான்; இப்போது உயிரோடு வந்துவிட்டான்; காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான்; அதனால் மகிழ்ந்து கொண்டாடுவது அவசியம்தானே” என்றார்.
எத்தகைய மகன்?
இந்தக் கதை நமக்குச் சொல்லவருவது என்ன? ஊதாரி மகனாக நாம் இருந்துவிடக் கூடாது என்பதை எடுத்துக் காட்டத்தான். மேலும் உங்கள் பிள்ளைகளில் நடைமுறையும் பொருளின் அருமையும் தெரியாதவரிடம் நீங்கள் எச்சரிக்கை கொண்ட தந்தையாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவுமே இயேசு இக்கதையைச் சொன்னார்.