சித்தர்கள் அறிவோம்: தன்னை உணர்வதே பேரறிவு- காமாட்சி மௌன குரு சுவாமிகள்

சித்தர்கள் அறிவோம்: தன்னை உணர்வதே பேரறிவு- காமாட்சி மௌன குரு சுவாமிகள்
Updated on
2 min read

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

தன்னை அறியும் அறிவை அறிந்தபின்

தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே..”

நாம் யார் என்று உணர்ந்துகொள்வதே பேரறிவாகும் என்று அனைத்து ஞானிகளும் கூறியிருக்கின்றனர். அதனையே திருமூலரும் தன்னை அறிந்து கொண்டால் தனக்கு எப்போதுமே அழிவில்லை என்று கூறுகிறார்.

தன்னை அறிந்துகொள்ளாதவர்கள் இவ்வுலகத் துன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கின்றனர். தன்னை அறிந்து அறிவைப் பெறுவதற்குத் தேடல் மிகவும் அவசியம். அப்படித் தேடிப் பெற்ற அறிவினால் தன்னை அறிந்துகொண்ட பின், தன்னைப் பிறர் பூசிக்கும் நிலையை அடைகிறோம்.

“என்னிலே இருந்த ஒன்றை யானறிந்த தில்லையே

என்னிலே இருந்த ஒன்றை யானறிந்து கொண்டபின்

என்னிலே இருந்த ஒன்றை யாவர்காண வல்லரோ

என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டேனே”.

என்ற சிவவாக்கியரின் பாடலும் இந்தக் கருத்தையே உணர்த்துகிறது.

“உனக்குள்ளேயே இறைவனைக் காண்” என்று கூறும் ஆதிசங்கரர், ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான் என்று கூறுகிறார். ஆகவே,தன்னை அறிந்து கொண்டவர்களே பரமாத்மாவாக இருக்கின்றனர். அவர்களே ஞானிகள் என்றும் சித்தர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இல்லறத்தில் நாட்டமின்மை

அந்தச் சித்தர்களின் வழிவந்த காமாட்சி மௌன குரு சுவாமிகள், திருமலைக்கேணி மலைச் சரிவில், மரக் கூட்டங்களுக்கு நடுவே, குளிர்ச்சியான சூழலில் ஜீவசமாதி கொண்டு, தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள்புரிந்துகொண்டிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி கிராமம், வல்லம்பட்டி என்ற ஊரில் குப்புசாமி, குப்பாயி அம்மாள் தம்பதியருக்கு முதல் குழந்தையாக அவதரித்த காமாட்சி சுவாமிகள், சிறு வயதில் ஆன்மிகத்தில் மிகவும் நாட்டம் கொண்டிருந்தார்.

அவரது பெற்றோர் உரிய காலத்தில் அவருக்குத் திருமணமும் செய்துவைத்தனர். இல்லறத்தில் நாட்டமில்லாத சுவாமிகள் 1905-ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 12-ம் தேதி, துறவறத்தை நாடித் தம் இல்லத்திலிருந்து வெளியேறினார்.

அருகிலிருந்த கரந்தமலை அய்யனார் கோயிலில் எவரும் அறியாமல் சுமார் ஆறு மாதங்கள் தங்கித் தவமியற்றினார். அங்கு அவருக்கு ஞானம் கிடைத்தது. அங்கிருந்து திருமலைக்கேணிக்கு வந்து நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

அவர் இங்கே வந்து தங்கியதற்கும் ஒரு காரணம் உண்டு. இங்கு மிகப் பழமையான சுப்ரமணியர் ஆலயம் ஒன்று இருக்கிறது. அங்குள்ள மூலவர், பாண்டிய மன்னர் ஒருவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த ஆலயத்தைப் பற்றி வெளியுலகுக்கு அதிகமாகத் தெரியாததால், சித்தரை இங்கு வந்து தங்கியிருந்து மூலவருக்கு மீண்டும் சக்தியைப் பெருக்கிப் பிரபலமடையச் செய்ய வேண்டுமென்று முருகப் பெருமான் ஆணையிட்டதாகக் கூறப்படுகிறது.

(1981-ம் ஆண்டு திருமுருகக் கிருபானந்த வாரியாரின் ஆலோசனையின்படி, இந்தக் கருவறையின் மீது மற்றொரு தளம் எழுப்பப்பட்டு, அங்கும் ஒரு மூலவர் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருக்கிறார்.)

சுப்ரமணியரின் திருவிளையாடல்

காமாட்சி சுவாமிகள் சுப்பரமணியர் ஆலயத்திற்கு வடபுறம், ஒரு அத்தி மரத்தின் அடியில் தங்கித் தவமியற்றிக்கொண்டிருந்தார். ஒரு ஆணும், இரு பெண்களும், தினைமாவு சாப்பிட்டதால்,தொண்டை காய்ந்துவிட்டது, கொஞ்சம் தீர்த்தம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

காமாட்சி சுவாமிகளுக்கு வந்திருக்கும் நபர்கள் யாரென்று தெரிந்துவிட்டது. இருப்பினும் அவர்களுடைய நோக்கம் என்னவென்று தெரிந்துகொள்வதற்காகக் கோயிலின் தென்புறம் உள்ள சுனைக்குச் சென்று நீர் அருந்தக் கூறினார். ஆனால் அவர்களோ, சுவாமிகளே நீர் தர வேண்டும் என்று வற்புறுத்தினர்.

காமாட்சி சுவாமிகள் தான் தவமியற்றிய இடத்தின் அருகில் ஒரு சிறு பள்ளம் தோண்ட, அதிலிருந்து நீர் கொப்பளித்து வந்தது. அவர்கள் அதனை அருந்திய பின், தங்கள் உண்மை சொரூபத்தைக் காட்டினர். முருகப் பெருமான்,வள்ளி தெய்வானையாகக் காட்சியளித்துச் சித்தரை வாழ்த்திவிட்டு மறைந்தனர்.

சித்தர் தியானம் செய்த இடத்தில் ஒரு மண்டபம் அமைக்கப்பட்டுச் சித்தரின் சொரூபமும் வைக்கப்பட்டிருக்கிறது. முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சியளித்த இடத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.

காமாட்சி சுவாமிகளின் விருப்பப்படி, சுப்ரமணியர் ஆலயத்திற்கு அருகில் மடம் ஒன்று அமைக்கப்பட்டது. அங்கு துறவிகள் பலருக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது.

அன்னதானப் பிரியரான காமாட்சி சுவாமிகள், ஒரே நேரத்தில் இரு பக்தர்களின் இல்லங்களுக்குச் சென்று உணவருந்தியது, தமது பக்தர்களின் விருப்பப்படி தூல உடல்கள் மடத்திலிருக்க, ஆன்ம உடல்களுடன் காசி யாத்திரைக்கு அழைத்துச் சென்றது போன்ற சித்துக்களையும் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

சமாதியான சுவாமிகள்

இந்தப் பூவுலகில் தமக்கு அளிக்கப்பட்டிருந்த காலம் முடிந்துவிட்டதை அறிந்த காமாட்சி சுவாமிகள், மடத்தினுள் தமக்கென்று ஒரு சமாதிக் குழியைத் தோண்டச் செய்தார். பிங்கள வருடம் (1917) ஆடி மாதம்,17-ம் தேதி,செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணிக்குப் பூராட நட்சத்திரத்தில் சமாதிக் குழிக்குள் சென்று அமர்ந்தார். சமாதிக் குழி மூடப்பட்டு, மேலே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்குப் பின்புறம் அவரது திருஉருவச் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சுவாமிகளின் ஜீவசமாதியைத் தரிசிக்க திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து செந்துறை செல்லும் பேருந்தில் திருமலைக்கேணியை அடையலாம். பேருந்து நிறுத்தத்திலிருந்து மலைச் சரிவில் கீழ் நோக்கி இறங்கினால் சற்று தூரத்தில் சுப்ரமணியர் ஆலயத்தையும், சுவாமிகளின் ஜீவசமாதியையும் தரிசிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in