

கீதா வாக்கியத்தில் ஒரு சின்ன இடறல், இந்தப் புதுச் சூழ்நிலையில் ஏற்பட்டது. அவதாரம் பண்ணி தர்மத்தை நிலைநாட்ட வேண்டியதுதான். அதில் சந்தேகம் இல்லை, இடறல் இல்லை. பின்னே எதில் என்றால், ``பரித்ராணாய ஸாதூநாம், விநாசாய சதுஷ்க்ருதாம்`` என்றாரே, அதிலேதான் இடறல்.
“சத்துக்களுடைய ரக்ஷணைக்காகவும், அசத்துக்களுடைய அழிவுக்காகவும், அவதாரம் எடுக்கிறேன்” என்று கீதையில் சொன்னார். சங்கராவதார சமயத்தில், முதலில் சொன்ன சாது ரக்ஷணையைப் பற்றி சிரமமிருக்கவில்லை. மற்ற பூர்வ அவதாரங்களின்போது இருந்த அளவு சிரமம் கூட அப்போது இருக்கவில்லை.
ஏனென்றால், முன்னெல்லாம் பொதுவாக ஜனங்கள் எல்லாருமே சத்துக்களாகத்தான் இருந்தார்கள். எனவே அத்தனை பேரை ‘பரித்ராணம்' என்பதாகக் கட்டி காப்பது என்றால் சிரமமான காரியமாகத்தான் இருந்திருக்கும். எதையும் சாதிக்க வல்லவனான ஈச்வரனின் அவதாரமானதால் அவனால் இதைச் செய்ய முடிந்தது.
இப்போது கலியிலே அவதரிக்கும்படியான இந்த சந்தர்ப்பம் வந்தபோது சத்துக்கள் பூர்வயுகங்களைவிட ரொம்பக் குறைவாகவே இருந்தார்கள். அதனால் இப்போது ஏற்பட வேண்டிய அவதாரத்திற்கு சாது ரக்ஷணை - “பரித்ராணாய ஸாதூநாம்” என்ற பாதி, முன்னளவுகூட சிரமமில்லாமல் சுலப சாத்தியமான காரியமாகவே இருந்தது.
ஆனால் இன்னொரு பாதி, “விநாசாய சதுஷ்க்ருதாம்” என்று தப்புப் பண்ணுபவர்களை அழிப்பதைச் சொன்னாரே, அதிலேதான் பரமாத்மாவுக்கே கிருஷ்ணாவதாரத்தில் சொன்ன வாக்குப்படிப் பண்ணுவதென்பது 'ப்ராப்ள'மாகிவிட்டது.
அந்த அவதாரத்திலேயும் அதற்கு முன்னேயும் தப்புப் பண்ணுபவர்கள் அசுரர்கள், ராக்ஷசர்கள், சில துஷ்ட ராஜாக்கள், அவர்களைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பாகச் சில கோஷ்டிகளாக இருந்தனர். பொதுவான ஜன சமூகத்திலிருந்து பிரித்து அவர்களை ‘ஐஸொலேட்' பண்ண முடிந்தது. அப்படிப் பண்ணி அந்தப் பூர்வ அவதாரங்கள் தப்புப் பண்ணிய வர்களை சம்காரம் செய்தன. “விநாசாய சதுஷ்க்ருதாம்” என்று சொன்னபடி செய்ய முடிந்தது.
ஆனால் இப்போது ஆசார்யாள் காலத்தில் எப்படியிருந்தது? அசுரர், ராக்ஷசர் என்று எவரும் வெளிப்படத் தெரியவில்லை. கம்சன், ஜராசந்தன், காலநேமி போல அசுரர் மாதிரியே நன்றாகத் தெரிந்தவர்களும் இப்போது இல்லை. துரியோதனன் பரிவாரம் போல மனுஷர் மாதிரியே நன்றாக இருந்துகொண்டு, ஆனால் அசுரத்தனமாக இருந்தவர்கள் கிருஷ்ணர் காலத்தைவிட, ரொம்ப நிறையப் பரவிவிட்டார்கள்.
அதோடுகூட, துரியோதனப் பட்டாளம் வெளிப்படவே கொடூரமாக நடந்து கொண்டதுபோல இல்லாமல், வெளியிலே பார்த்தால் நல்லது மாதிரி இருந்துகொண்டே, நல்லதைச் சொல்லிக்கொண்டும், செய்துகொண்டும் இருக்கிற மாதிரி தோன்றிக்கொண்டே, ஏராளமான பேர் அதர்மமாகப் பண்ணுவதென்பதும் இந்த யுகத்துக்கே ஸ்பெஷலாகச் சேர்ந்தது.
மொத்தத்தில் ‘துஷ்க்ருத்'கள் என்று கீதையில் சொல்லி யிருக்கும் ‘கெட்டது செய்கிறவர்'களை ஜன சமூகத்திலிருந்து பிரித்து நாசம் செய்துவிட்டு சாதுவான ஜன சமூகத்தை ரக்ஷிப்பது என்பதற்கு இந்த யுகத்தில் இடமில்லாமல் அபூர்வமான சில சத்துக்களைத் தவிர ஜனசமூகம் முழுவதுமே அதர்மப் பிரவாகத்தில் முழுகித் தப்புப் பண்ணிக் கொண்டிருந்தன.
இந்த நிலையில் “விநாசாய சதுஷ்க்ருதாம்” என்று செய்வதனால் அத்தனை பேரையும் ஹதம் பண்ணி விடுவது என்றுதான் ஆகும். இப்படியொரு “யுனிவர்ஸல் ஹாலோகாஸ்ட்” - சர்வ ஜீவ சர்வ நாசம் - செய்வதா தர்ம சம்ஸ்தாபனம்?
பின்னாடி எப்போதோ வர வேண்டிய பிரளயத்தை உண்டு பண்ணுவதா அவதார லட்சியம்? மனுஷர்களோடு ஈச்வரனும் அன்பிலே பழகுவது, அப்படியே தர்மத்துக்கு வழிகாட்டி அழைத்துப் போவது என்று எதுவுமில்லாமல் சர்வ நாசம் செய்வதென்றால் அப்போது தர்மமும் சம்ஸ்தாபனமாகாமல் நசித்துப் போக வேண்டியதுதான். இப்படி ஒரு அவதாரம் பண்ணவே முடியாது. அவதார ‘பர்ப' சுக்கே அது விரோதம்.
இதைத்தான் பரமாத்மாவுக்கு ‘ப்ராப்ளம்' என்று சொன்னது. அசுரன் என்று வெளியில் யாருமில்லாமல் சர்வ ஜனங்களுக்குள்ளேயும் புகுந்து கொண்டிருக்கும்போது எப்படி சம்கரிப்பது? ஒரு அவதாரத்தைக் கொண்டு துஷ்ட சிக்ஷணம், சிஷ்ட ரக்ஷணம், தர்மோத்தாரணம் ஆகியவற்றைச் செய்வதென்றால் எப்படி?
நம்மாலானால் இதற்கு சொல்யூஷன் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கும். பரமாத்மாவானதால் சுலபமாகக் கண்டுபிடித்துவிட்டார். கலிகால அவதாரங்களில் துஷ்ட ஜனங்களை சம்கரிப்பதில்லை. ஜனங்களுக்குள்ளே புகுந்துகொண்டிருக்கும் துஷ்டத்தனத்தையே சம்கரிக்க வேண்டும். இப்படிப் பண்ணி ஜனங்களை நல்லவர்களாக்கிவிடவேண்டும்.
‘விநாசாய சதுஷ்க்ருதாம்' - ‘கெட்டகாரியம் செய்பவர்களுடைய அழிவின் பொருட்டு' என்பதற்கு ஒரு அமென்ட்மெண்ட் போட்டுவிட்டால் போதும். ‘துஷ்க்ருதாம்' கெட்ட காரியம் செய்பவர்களுடைய- என்பதை ‘துஷ்க்ருத்யானாம்' கெட்ட காரியங்களுடைய- என்று ‘அமென்ட்' செய்துவிட்டால் போதும் என்று பரமாத்மா சொல்யூஷன் கண்டுபிடித்துவிட்டார்.
லோகம் பூரா நடக்கும் கோடி கோடி தப்புக் காரியங்களை எப்படி அழிப்பது, அது மட்டும் முடியுமா என்றால், அந்தக் காரியங்களை அழிக்க வேண்டாம். அவை விளைவுதான். இந்த விளைவுக்குக் காரணமுண்டு. வித்து உண்டு. வித்தை ஊன்றினால்தானே விளைச்சல் வரும்?
காரியத்துக்கு வித்து எண்ணம். கெட்ட எண்ணம் முதலில் தோன்றி, அதன் நிறைவேற்றத்திற்காகவே அப்புறம் கெட்ட காரியம் தோன்றுகிறது. ஆனபடியால் ஜனங்களுடைய கெட்ட எண்ணம் போகும்படியாக, அதாவது அவர்களுடைய அறிவு திருந்தும்படியாகப் பண்ணிவிட்டால் போதும். அவதார நோக்கமான தர்ம சமஸ்தாபனம் நடந்துவிடும்.
'அறிவு திருந்தும்படி எப்படிப் பண்ணுவது? வேறே எப்படி? எல்லாருக்கும் தெரிந்ததுதான். நல்லதை நல்லபடியாக எடுத்துச் சொல்வதால்தான். ஞானோபதேசத்தினால்தான். வாய் உபதேசம் மட்டும் போதாது. வாழ்க்கை உதாரணத்தோடு அது கலந்து வந்தால்தான் பலன் தரும், அதனால் ஞானியாக அவதாரம் செய்யணும். ஞானி என்றால் சந்நியாசியாக அவதாரம் செய்யணும் என்றிப்படி பகவான் தீர்மானம் பண்ணிவிட்டார்.
தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)
ஸ்ரீ சங்கர சரிதம்.