

தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டியில் சித்தர்கள் அமைதியாக வழிபடுவதற்காகவென்றே பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சித்தர்கள் பல திருத்தலங்களைத் தரிசித்திருந்தாலும், மதுரை மீனாட்சியிடமும், சுந்தரேஸ்வரரிடமும் மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டிருந்தனர். எனவே இவர்கள் நினைத்தபோதெல்லாம் அன்னை மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தரிசிக்க விரும்பினர்.
பாண்டியர்களின் தலைநகராக மதுரை விளங்கியதால் அங்கு இரவும் பகலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் சித்தர்களால் மாநகர் மதுரையில் அமைதியாகத் தங்கி மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்க இயலவில்லை.
இதனையடுத்து அமைதியான முறையில் தியானம் செய்ய மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலைத் தேடி அலைந்தபோது ஆண்டிப் பட்டியில் அமைதியான சூழ்நிலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இருப்பதை அறிந்து அவர்கள் ஆண்டிக் கோலத்தில் அங்கு சென்று தங்கி தியானம் செய்வது, சிவபூஜை செய்வது என்று சிவத்தொண்டில் ஈடுபட்டதாகத் தல வரலாறு உள்ளது.
சக்திவாய்ந்த சந்தான விநாயகர்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள சந்தான விநாயகரை வழிபடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. இந்த திருத்தலத்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்வில் எவ்விதக் குறைபாடுகளும் இன்றி நிம்மதியாக வாழலாம் என்ற நம்பிக்கை சுற்றியுள்ள கிராமங்களில் நிலவுகிறது.