

இந்தப் புற உலகம் வெறும் நிமித்தம் மட்டுமே. நாம் காண்பன எல்லாம் நம் உள்ளங்களிலிருந்து வெளிப்படுத்தப்பட்டவை. முத்துச் சிப்பிக்குள் நுண்ணிய மணல் புகுந்துவிடுகிறது. அது அந்தச் சிப்பியை உறுத்துகிறது. அந்த உறுத்தலின் விளைவாகச் சிப்பியில் ஒருவிதத் திரவம் சுரக்கிறது. அது அந்த மணலை மூடிக் கொள்கிறது. அதன் இறுதி விளைவே அழகிய முத்து.
நாம் எல்லோரும் செய்வதும் இதுதான். புறப்பொருட்கள் நமக்கு சூசகங்களை மட்டுமே தருகின்றன. அவற்றின்மீது நாம் நமது லட்சியங்களை ஏற்றி நமக்கான பொருட்களை உண்டாக்கிக் கொள்கிறோம். இந்த உலகைத் தீயவர்கள் முழு நரகமாகக் காண்கின்றனர். நல்லவர்கள் பூரண சொர்க்கமாகக் காண்கின்றனர்.
காதலர்கள் காதல் நிரம்பியதாகவும், வெறுப்பவர்கள் வெறுப்பு நிரம்பியதாகவும் காண்பார்கள். போராளிகளுக்கு இந்த உலகில் போரைத் தவிர எதுவும் தெரியாது. அமைதியை நாடுவோர் அமைதியைத் தவிர வேறெதையும் காண மாட்டார்கள். அவ்வாறே நிறைமனிதன் இறைவனைத் தவிர வேறு எதையும் காணமாட்டான்.
எனவே நாம் மிக உயர்ந்த நமது லட்சியத்தையே எப்போதும் வணங்குகிறோம். லட்சியத்திற்காகவே லட்சியத்தின்மீது அன்பு செய்யும் நிலையை நாம் அடையும்போது எல்லா வாதங்களும் சந்தேகங்களும் என்றென்றைக்குமாக அழிந்துவிடும்.
கடவுள் இருப்பதை நிரூபிக்க முடியுமா, முடியாதா? அதுபற்றி யாருக்குக் கவலை? ஆனால் லட்சியம் ஒருநாளும் என்னைவிட்டுப் போகாது. ஏனெனில் அது எனது சொந்த இயல்பின் ஒரு பகுதி. நான் இருக்கிறேனா என்ற சந்தேகம் எழுந்தால் மட்டுமே லட்சியத்தைப் பற்றிய சந்தேகமும் எழும். அதைப் பற்றிச் சந்தேகம் வராதபோது இதைப் பற்றியும் சந்தேகம் வர வழியில்லை.