

திருவண்ணாமலை, பஞ்சபூதத் தலங்களுள் அக்னித்தலமாகக் கருதப்பெறும் திருத்தலமாகும். திருவண்ணாமலையை ‘ஞானியர் பூமி’, ‘ சித்தர் பூமி’ என்றும் அழைப்பது மிகவும் பொருத்தம். திருவண்ணாமலையிலேயே ஆசிரமம் அமைத்து, ஆன்மிக மழை பொழிந்த மகான்கள் பலர். அவர்களில் ஒருவர் யோகி ராம் சுரத் குமார் சுவாமிகள்.
தன்னைப்பிச்சைக்காரன், பைத்தியம் என்றெல்லாம் வர்ணித்துக்கொண்ட யோகி ராம் சுரத்குமார் எப்போதும் விசிறியுடன் காட்சி தந்ததால் விசிறி சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம், கங்கைக் கரையில் சிறு கிராமமான நார்தராவைச் சேர்ந்த ராம்தத் குன்வர், குஸும் தேவி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் ராம் சுரத் குன்வர். பிறந்த ஆண்டு 1918. ராமனிடம் பாசமிக்க குழந்தை என்று பொருள். ராம் சுரத் குன்வர், சிறு வயதிலேயே ஆன்மிக ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். எழுமை நோய்க்கும் மருந்தான மருத்துவன் ராமபிரான் மீது அளவற்ற பக்தி உடையவர் விசிறி சுவாமிகள்.
உடல் நலமாக இருந்திட நெல்லிக்கனி, உள்ளம் நலமாக வாழ்ந்திட ராம ஜபம் என்று அடிக்கடி சொல்வார் சுவாமிகள். தினமும் மறவாமல் முந்தைய நாள் ஊறவைத்த நெல்லிக்கனியின் சாறாகிய நீரை அருந்துவதே இவரது உணவுப் பழக்கம்.
கங்கையின் கரையில் சத்தியத்தின் பாதையைத் தேடி அலையும் சாதுக்களிடம் ராம் சுரத்துக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. எப்போதும் ராம நாம ஜபத்தை அவர் மனம் உச்சரித்துக் கொண்டே இருந்தது. தனக்குரிய குரு யார் என்ற தேடலில் அவர் பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்துக்கும், ரமணர் ஆசிரமத்துக்கும் வந்தார். 1952-ல் துறவி பப்பா ராமதாசை சந்தித்து அவரின் ஆனந்தாஸ்ரமத்திலேயே தங்கினார். இது அவரது ஆன்மிக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. ‘ஓம் ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை அவரது காதில் ஸ்வாமி ராம்தாஸ் உச்சரித்து தீட்சை அளித்தார். இதன் பின்னர் 1959 ஆம் ஆண்டு திருவண்ணாமலை வந்தார். தனது பெரும்பகுதி வாழ்நாளை திருவண்ணாமலையின் வீதிகளில் சாதாரணரிலும் சாதாரணமாகக் கழித்தார் ராம் சுரத் குமார். திருவண்ணாமலை ரயில் நிலையத்தைச் சுற்றி அலைந்தபடி வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு உணவருந்தி வானமே கூரையாக வாழ்ந்துவந்தவர் அவர். 1977-ம் ஆண்டு திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள ஒரு வீட்டை அவரது பக்தையான தேவகி ஒதுக்கிக் கொடுத்தார்.
எந்தக் காரியத்தை செய்யும்போதும், எங்கே இருந்தாலும் ராமனையே மனதில் துதித்தபடி இருக்கும் அனுமனைப் போல நாம் இருக்க வேண்டும் என்பதே ராம் சுரத் குமாரின் உபதேசம். “ஒருபோதும் கடவுளின் நாமத்தை மறந்துவிடாதீர்கள் என்பதே இந்தப் பிச்சைக்காரனுக்கு உங்களிடம் உள்ள வேண்டுதல்” என்று எப்போதும் புன்னகைத்தபடி கூறுவார். அது ஒருவருக்கு சிவனாக இருக்கலாம். இன்னொருவருக்கு கணபதியாக இருக்கலாம். இன்னொருவருக்கு இயேசுவாக இருக்கலாம், எந்த நாமங்களை உச்சரித்தாலும் கடவுளை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம் என்பதே அவரது மந்திரமாக இருந்தது.
“இந்த உலகில் வாழும் வரை பிரச்னைகளும் வரவே செய்யும். நாம் கடவுளின் பெயரை ஞாபகத்தில் இருத்தியிருந்தால் மனோபலத்துடன் இருப்போம். கனமழை பெய்யும்போது, வெளியே நாம் நனையாமல் இருப்பதற்காக குடையைக் கொண்டு செல்வது போன்றதுதான் இறைவனை ஞாபகத்தில் வைத்திருப்பது. குடை போல நம்மை இறைவன் காப்பார்” என்று கூறியுள்ளார் ராம் சுரத் குமார்.
இறைவனின் நாமத்தை உச்சரிப்பதே பிரார்த்தனை. இறைவனின் நாமத்தை மனோரூபமாக்கிக்கொள்வதே சமாதி. இறைவனின் நாமத்தை சதா சொல்லிக் கொண்டிருப்பதே தியானம். அதுவே சரணாகதி” என்று பக்தர்களிடம் தொடர்ந்து வலியுறுத்திவந்த ஞானி யோகி ராம் சுரத் குமார் புற்றுநோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் நாள் மரணம் அடைந்தார்.