காவிரிக் கரையில்  ஒரு கல்யாணம்

காவிரிக் கரையில் ஒரு கல்யாணம்

Published on

காவிரி நதி அகண்டு ஓடும், வாழைகள், வெற்றிலைத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள், வயல்வெளிகள் சூழ்ந்த கிராமமான நஞ்சை புகளூரைச் சேர்ந்தவர்கள் பிகே.நாரயணஸ்வாமி அய்யர் மற்றும் மீனாட்ஷி அம்மாள் தம்பதியினர். அவர்கள் இருவரும் சிறந்த ராம பக்தர்கள். ஒரு நாள் அவர்களுக்குத் தஞ்சாவூர் ராமசந்திரராவ் என்ற ஓவியர் வரைந்த ராமர் பட்டபிஷேக படம் ஒன்று கிடைத்தது. ராமரே நேரில் வந்தார் போல அந்தப் பரிசை எண்ணினார்கள்.

ராமசந்திர ராவ் வரைந்த கடவுளர் ஓவியங்கள், ரவி வர்மா வரையும் பாணியை ஒத்தது. அவர் அவற்றை வண்ணப் பிரதி எடுப்பதற்கு பம்பாய் அனுப்பி, பின்னரே அதை விற்பது வழக்கம். இதுவும் பம்பாயில் வண்ணப் பிரதி எடுக்கப்பட்டது. ஆனால் அவரால் ஒன்றைக்கூட விற்க முடியவில்லை. காரணத்தை ஆராய முற்பட்டார்.

அவர் பிரதியெடுத்த படங்கள் எல்லாவற்றிலும் ராமரின் கண்கள் சிவந்து, சினம் கொண்ட ராமராகக் காட்சி கொள்கிறார். மக்கள் அது போன்ற ராமரை வாங்க முற்படவில்லை. அவர் மறுபடியும் தான் எழுதிய மூல ஓவியத்தைப் பார்த்தார். அதில் ராமர் கருணையே வடிவாகக் காட்சி அளித்தார். இது விற்பனைக்குரிய வஸ்து அல்ல என்று முடிவெடுத்தார். ஒரு சிறந்த ராம பக்தரிடம் தான் இருக்க வேண்டுமென முடிவெடுத்து அதை நாராயணஸ்வாமி அய்யரிடம் தந்தார்.

வால்மீகியின் சொல்படி

வால்மீகி ராமாயணத்தில் எப்படியெல்லாம் ராமர் பட்டாபிஷேகம் விவரிக்கப்பட்டிருக்கிறதோ அந்த ஸ்லோகத்தின் ஒவ்வொரு சொல்லையும் உள்வாங்கி உருவாக்கப்பட்ட ஓவியம் அது.

ராமரின் ஓவியத்தை மகாபெரியவர் காஞ்சி பரமாச்சாரியாரும் பார்த்து ஏகபாதாசன கோலத்தில் வணங்கி தீபாராதனை செய்துள்ளதாக நாராயணஸ்வாமி அய்யரின் மகன் வக்கீல் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

இந்த இல்லத்தில்தான் சீதா கல்யாணத்தை 83 ஆண்டுகள் நடத்துகிறார்கள். மூன்று நாட்கள் நடக்கும் இந்த வைபவம் கடந்த ஏப்ரல் மாதம் 24,25,26 தேதிகளில் நடைபெற்றது. முதல் நாள் ராம சகஸ்ரநாம அர்ச்சனை, இரண்டாம் நாள் ஸ்ரீ ராம ஜனனம், மூன்றாம் நாள் சீதா கல்யாண திவ்ய நாமமும் ஆஞ்சனேய உத்சவமும் நடைபெற்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in