

நபிகள் நாயகம் மதினா நகரில் தங்கி இஸ்லாம் மதத்தை வளர்த்துவந்தார். ஆரம்ப காலத்தில் அவர் பல துன்பங்களைச் சந்தித்தார்.
மதினா நகரில் பல்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்களின் இறை நம்பிக்கையும் வேறுவேறாக இருந்தது. நபியை வெறுத்தவர்களில் ஒரு மூதாட்டியும் இருந்தார்.
அம்மூதாட்டி ஒரு வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தார். தினமும் காலையில் நபிகள் நாயகம் அவளது வீட்டைக் கடந்து செல்லும் போது அந்த மூதாட்டி மாடியில் இருந்து குப்பைக் கூடையைக் கவிழ்த்து நபிகள் நாயகத்தின் மீது கொட்டுவார்.
பல நாட்கள், பல மாதங்களாக இது தொடர்ந்தது. ஆனால், பொறுமையின் உருவமான நபிகள் அந்த மூதாட்டியின் இச்செயலைச் சகித்துக்கொண்டார். அவருக்குச் சிறு வருத்தம்கூட ஏற்படவில்லை.
நபிகள் தனது பாதையை மாற்றியோ குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக அவ்வீதியைக் கடந்தோ அம்மூதாட்டி தரும் துன்பத்தைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. அம்மூதாட்டியைத் தவிர்த்துச் சென்றால் அவள் மனம் ஏமாற்றம் அடையக்கூடும் என்று நினைத்து நபிகள் குறிப்பிட்ட அதே பாதையில் குறிப்பிட்ட அதே நேரத்தில் சென்றார்.
அந்த மூதாட்டியின் வீட்டருகே வந்தவுடன் அவள் குப்பையைச் சரியாகத் தம் மீது கொட்டுவதற்கு வசதியாக நபிகள் அசையாமல் நிற்பார். அவர் மீது குப்பையைக் கொட்டி அவமானப்படுத்துவதில் அந்தக் கிழவிக்குப் பேரானந்தம். அவர் அந்தப் பெண்ணின் மகிழ்ச்சியைக் குலைக்க விரும்பவில்லை. எனவே குப்பையை மலர்க் குவியலாகக் கருதிப் பெருமையுடன் ஏற்றுக்கொள்வார்.
ஒரு நாள் எப்போதும் போல நபிகள் அந்த வீட்டருகே வந்து நின்றார். குப்பை தூவப்படும் என்று எதிர்பார்த்தார்.ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அவர் முதல் முறையாக நிமிர்ந்து மேலே பார்த்தார். அம்மூதாட்டி அங்கு தென்படவில்லை. நபிகளுக்குப் பெரும் வியப்பு ஏற்பட்டது.
நபிகள் அருகே இருந்தவர்களிடம் அம்மூதாட்டியைப் பற்றி விசாரித்தார். முந்தைய தினத்திலிருந்தே அவர் தென்படவில்லை என்று அண்டைவீட்டார் பதில் தந்தனர். அந்த மூதாட்டியின் வீட்டை விசாரித்த நபி படியேறிச் சென்றார். அங்கே அந்தப் பெண்மணி நோயுற்றுப் படுக்கையில் கிடந்தார். நோயின் தன்மையால் அவள் வலுவிழந்து மிகவும் களைப்பாகக் காணப்பட்டாள். அவளது இந்த நிலையைக் கண்ட நபிகளின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
கருணை உள்ளம் கொண்ட நபிகள் அந்தப் பெண்ணுக்கு முதலில் தண்ணீர் கொடுத்தார். பின் மருந்துகள் கொண்டுவந்து கொடுத்தார். எழுந்து நடமாடும் வரை தினமும் அவளுக்குத் தொண்டுகள் செய்தார்.
பின் அந்த மூதாட்டி, நபிகளிடம், “தினமும் நான் உங்களை அவமதித்தேன். உங்கள் உள்ளத்தை நோகச் செய்தேன். நீங்கள் போதிக்கும் மதம் வேறு எனது மதம் வேறு என்பதால் நான் அவ்வாறு நடந்துகொண்டேன். ஆனாலும் நீங்கள் என்னைத் தேடி வந்து எனக்குச் சேவை செய்கிறீர்கள். என்னைச் சேர்ந்தவர்களே என்னைப் பற்றிக் கவலைப்படாத போது நீங்கள் என்மீது கருணை காட்டினீர்கள்.
உண்மையிலேயே நீங்கள் உயர்ந்தவர்தான். உயர்ந்தவராகிய நீங்கள் போதிக்கும் மதமும் உயர்ந்ததாகத்தான் இருக்கும்.என்னை மன்னியுங்கள்,”என்று கூறினார். அன்றிலிருந்து நபிகள் நாயகத்தின் உபதேசங்களைப் பின்பற்றி நடக்கலானார்.