

எட்டு எட்டா உலக வாழ்வை பிரிச்சுக்கோ என்பார்கள். தள்ளிப்போயிட்டே இருக்கும் என்மகளுக்கு திருமணம் நடந்தா 108 தேங்காய் உடைக்கிறேன் சாமி என்று வேண்டிக் கொள்வார்கள்.
கோயில்களில் வடிக்கப்படும் தெய்வ சொரூபங்களை பூஜிக்கும்போது, மந்திரங்களை 108 முறை ஜபிப்பார்கள். திருவிளக்கின் சுடரில் சுவாமியை ஆவாகம் செய்யும் தருணங்களிலும் 108 முறை மந்திரங்களை ஜபிப்பார்கள்.
பரமாத்மாவை, ஜீவாத்மா சென்று தரிசிக்கும் ஆன்மிக வாய்ப்பை 108 வைணவத் தலங்கள் அருளுகின்றன. இறைவனுக்கும் அவனால் படைக்கப்பட்ட உயிர்களுக்கும் இடையேயான அன்பை, உறவை, நேசத்தைப் பிரதிபலிக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். இதன் எதிரொலியே நம்முடைய வேண்டுதல்களை 108 முறை செய்ய வேண்டும் என்னும் மரபார்ந்த நம்பிக்கையாகத் தொடர்கிறது.
ஒருவனே தெய்வம் என்பதற்குக் குறியீடாக 1. அவனை அடைவதற்கு முழுமையான முயற்சியை நாம் கைக்கொள்ள வேண்டும் என்பதை விளக்க 0 (சுழி). எட்டுத் திக்குக்கும் பொதுவானது இந்த நியதி என்பதற்காக 8. இதுவே 108 எண்ணுக்கான முக்கியத்துவம் என்கின்றனர் சிலர்.
வேதத்தில் 108 உபநிடதங்களைக் காணலாம். திவ்ய க்ஷேத்திரங்கள் 108. சிலப்பதிகாரத்தில் வெளிப்படும் கரணங்கள் 108. தாளங்கள் 108. அர்ச்சனை செய்யப்படும் நாமங்கள் 108.
நம் உடலில் 108 உயிர் புள்ளிகள் இருக்கின்றன என்கிறது வர்மக்கலை. இத்தனை முக்கியத்துவம் 108-க்கு இருப்பதால்தானோ என்னவோ, நமக்கு உடல் ரீதியான பாதிப்பு ஏற்படும்போது அவசர சிகிச்சைக்கு நாம் அழைக்கும் எண்ணும் 108 என வைத்துள்ளனர்.