பிரணவத்தின் பெருமை பேசும் எண்கண்!

பிரணவத்தின் பெருமை பேசும் எண்கண்!
Updated on
2 min read

தகப்பன் பேரில் ஆலயம். ஆனால் அங்கு தகப்பன்சாமியே பிரதானம். இந்தப் பெருமைக்கு உரியது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். இங்கு சுப்பிரமணிய சுவாமி என்ற திருநாமத்துடன் மயிலேறும் முருகனாக பக்தர்களுக்கு அருள்புரியும் இத்தலம் எண்கண் முருகன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

பிரம்மனைச் சிறையில் அடைத்த முருகன்

பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே… அதனால் சிறையினிலே அடைத்தான் முருகனே என்னும் பாடலை நம்மில் பெரும்பாலானவர்கள் கேட்டிருப்போம். இந்த வரிகளின் பின்னுள்ள சரித்திரத்தைச் சொல்லும் ஊர் இது.

பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை முருகன், பிரம்மனிடம் கேட்கிறார். பிரம்மனுக்கோ பதில் தெரியவில்லை. கோபம் கொண்ட முருகன், பிரம்மனைச் சிறையில் அடைக்கிறார்.

பிரபஞ்சத்தில் சிருஷ்டி தடைபடுகிறது. சிருஷ்டித் தொழிலையும் முருகனே பார்க்கிறார். ஆனால் சிறையிலிருந்து பிரம்மனை விடுவிக்கிறார் முருகன். விடுதலையான பிரம்மன், இழந்த தன்னுடைய பதவியைத் திரும்பப் பெற, சிவபெருமானைத் தனது எட்டுக் கண்களால் பூஜித்தார்.

சிவபெருமானின் கருணையால் மீண்டும் படைப்புத் தொழில் பிரம்மனுக்கு வழங்கப்படுகிறது. பிரம்மன் எண்கண்களால் பூஜித்ததால் இத்தலம் `பிரம்மபுரம்’ என்று வழங்கப்பட்டது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார் என்கிறது இத்தலத்தின் தல புராணம். பிரம்மன் எட்டுக் கண்களால் பூஜித்த தலம் என்பதால் அஷ்ட நேத்திரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதத்தில் மூன்று நாட்களில் மட்டும் பிரம்மபுரீஸ்வரரின் மீது சூரியனின் ஒளி விழும். ஆலயத்தின் மூலவரான, மயில் வாகனத்தில் காட்சி தரும் முருகன் சிலையின் எடை முழுவதையும் மயிலின் ஒற்றைக் கால் தாங்கி நிற்கும்.

இழந்த பார்வை திரும்பக் கிடைக்கும்

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் விசாக நட்சத்திரம் வரும் நாளில், முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, இத்தலத்தின் குளத்தில் குளித்துவந்தால், இழந்த பார்வை திரும்பக் கிடைக்கும் என்பது ஐதீகம். அங்காரக தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது எண்கண். எதிரிகளின் பயம் நீக்கி பக்தர்களைக் காக்கும் தலமாகவும் இது விளங்குகிறது.

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் விசாக நட்சத்திரம் வரும் நாளில், முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, இத்தலத்தின் குளத்தில் குளித்துவந்தால், இழந்த பார்வை திரும்பக் கிடைக்கும் என்பது ஐதீகம். அங்காரக தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது எண்கண். எதிரிகளின் பயம் நீக்கி பக்தர்களைக் காக்கும் தலமாகவும் இது விளங்குகிறது.

பாடல்பெற்ற தலம்

எண்கண் ஆலயத்தைப் போற்றும் பாடல் ஒன்றைத் திருப்புகழில் அருணகிரிநாதர் எழுதியுள்ளார். தண்டை முழங்க, குழந்தையான கந்தக் கடவுள் ஓடிவரும் அழகை விளக்கும் வகையில் அமைந்திருக்கும் பாடல் அது.

காஞ்சிபுரம் சிதம்பர முனிவரின் ஷேத்திரக் கோவை பிள்ளைத் தமிழ்ப் பாடலிலும் இத்தலத்தின் பெருமையை விளக்கும் பாடல்கள் உள்ளன.

ஞானசபை தேவசபை

மயில் வாகனத்துடன் முருகன் சன்னிதியுடன், பிரம்மன் வழிப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் சன்னிதி, பெரியநாயகி அம்மன் சன்னிதிகள் உள்ளன. முருகனின் ஞானசபை (மூலவர்), தேவசபை (உற்சவர்) ஆகியவை பிரம்மபுரீஸ்வரர், பெரியநாயகி சன்னிதிகளுக்கு இடையில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு.

தலத்தின் தெற்குப்புற வாயிலில் தனிக்கோயில் கொண்டுள்ளார்  ஆதி நாராயணப் பெருமாள். கருடாழ்வாரின் மேல் அமர்ந்த அற்புதக் கோலத்தில் மூலக் கருவறையில் காட்சி தருகிறார். வன்னி மரம் தல விருட்சமாகும்.

“ஓங்காரத்துள்ளே முருகன் திருவுருவம் காண வேண்டும்” என்கிறது கந்தரலங்காரம்.

ஆதிசங்கரர் தனது சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரத்தில், “மயில் வாகனத்தில் வருபவர், மகான்களின் மனதை வீடாகக் கொண்டவர்” என்றெல்லாம் போற்றுகின்றார்.

தோகை விரித்த மயிலின் தோற்றம் ஓங்காரத்தின் குறியீடு. பிரணவ அம்சத்தின் பின்னணியில் காட்சி தரும் முருகனின் அழகை இத்தலத்தில் காணக் கண் கோடி வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in