விவேகானந்தர் மொழி: எழுச்சி வீழ்ச்சி அலை

விவேகானந்தர் மொழி: எழுச்சி வீழ்ச்சி அலை
Updated on
1 min read

நம்மால் இந்த உலகத்தின் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியாது. அதுபோலவே வேதனையையும் அதிகப்படுத்த முடியாது. இந்த உலகத்தில் காணப்படுகின்ற இன்ப துன்பங்களின் மொத்த அளவு எப்போதும் ஒன்றுபோலவே இருக்கும்.

நாம் செய்வதெல்லாம் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும், அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்திற்கும் அதைத் தள்ளுவதுதான். ஆனால் அது எப்போதும் ஒரே அளவாகத்தான் இருக்கிறது. ஏனெனில் அப்படி இருப்பது அதன் இயல்பு. ஏற்றமும் இறக்கமும், எழுச்சியும் வீழ்ச்சியும் உலகத்தின் இயல்பு.

அப்படியில்லை என்று கருதுவது, சாவே இல்லாமல் வாழ்வோம் என்று கூறுவதைப் போன்றது. சாவே இல்லாத வாழ்வு என்பது சிறிதும் பொருளற்றது. ஏனெனில் வாழ்வு என்றால் அதில் சாவு என்பதும் அடங்கியே உள்ளது. அதுபோலவே இன்பம் என்றால் அதில் துன்பமும் அடங்கியே உள்ளது.

விளக்கு எரியும்போது அழிந்துகொண்டே இருக்கிறது. அதுதான் அதனுடைய வாழ்க்கை. நீங்கள் வாழ்வை விரும்பினால், அதற்காக ஒவ்வொரு கணமும் செத்துக்கொண்டே இருக்க வேண்டும். வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்பட்ட ஒரே பொருளின் வெவ்வேறு தோற்றங்களே வாழ்வும் சாவும்.

ஒரே அலையின் வீழ்ச்சியும் எழுச்சியுமே ஒன்றாகச் சேர்ந்து ஒரு முழுமையாகின்றன. ஒருவன் `வீழ்கின்ற’ பக்கத்தைப் பார்த்துவிட்டு துன்ப நோக்கு உடையவனாகிறான். மற்றொருவன் `எழுகின்ற’ பக்கத்தைப் பார்த்துவிட்டு இன்ப நோக்கு உடையவனாகிறான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in