

வைகாசி விசாகம் ஜூன் 1
தொண்டை மண்டலத்தின் தலைநகரான காஞ்சியில், வரதராஜப் பெருமாள் வைகாசி விசாகத்தன்று அதிகாலை கருட வாகனத்தில் நகர் வலம் வருவது முக்கியமான நிகழ்வாகும். அதிகாலை நான்கு மணியளவில் புறப்பாடு தொடங்கி, ஆழ்வார் பிராகார வலம் முந்தவுடன், ஐந்து மணியளவில் கோபுர வாசலில் கற்பூர ஆரத்தி நடக்கும். இது, ‘தொட்டையாசாரியர் சேவை’ என்று அறியப்படுகிறது.
பெயர் வந்த காரணம்
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சோளசிம்மபுரத்தில் வசித்து வந்த தொட்டையாசாரியர் என்ற பக்தர் வருடம் தவறாது கருட சேவைக்கு வருபவர். முதுமையினால் அவரது வருகை தடைப்பட்டது. இதற்காக அவர் வருந்திக் கடவுளிடம் புலம்ப, அவரது அகக் கண்களுக்குப் புலப்படும் வண்ணம், தொட ஸ்ரீ வரதராஜன் கோபுர வாசலிலிருந்து அருள்புரிந்த வைபவத்தை முன்னிட்டு, இந்த ஆராதனை பக்த கோடிகள் பரவசமாகும் வண்ணம் ஆண்டுதோறும் நடந்தேறுகிறது.
உற்சவ தினங்களில் ஏழு கிலோமீட்டருக்குக் குறைவின்றி (கருட சேவையன்று சில கிராமங்கள் கூடவே) புறப்பாடு கண்டருளும் வழக்கம் கிருஷ்ண தேவராயர் காலம் தொட்டே முறைப்படுத்தப்பட்டுத் தொடரும் ஒன்றாகும். பெரிய குடைகள், பரிவாரங்கள் சகிதம் தோள்களிலேயே வாகனம் ஆரோகணித்து எழுந்தருள்வது வேறு எந்த ஊரிலும் காணமுடியாதது.
நம்மாழ்வாரின் ஞானமுத்திரை
வைகாசி விசாகம், ஆழ்வார்களுள் தலையாய நம்மாழ்வார் அவதரித்த தினம். அவர் இயற்றிய, திருவாய்மொழியின் தொடக்கப் பாசுரமே ‘உயர்வற உயர்நலம் உடையவன்’ எனத் தொடங்கி, ‘அயர்வறு அமரர்கள் அதிபதி யவனவன் துயரறு சுடரடி தொழுதெழன் மனனே’ என முடிவதால், இப்பாடல் ஸ்ரீதேவராஜனையே குறிக்குமெனப் பெரியோர் கூறுவர்.
இப்பாசுரத்துக்கு ஏற்றாற் போல், வேறு எத்தலத்திலும் இல்லாதபடி, இங்கு எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வாரின் வலதுகை விரல்கள் ஞான முத்திரையாய் இதயம் நோக்கிக் கவிந்திருப்பது சிறப்பாகும்.
திருமங்கை ஆழ்வாருக்குத் தேவைப்பட்ட நிதி கிடைக்க உதவியருளிய தேவராஜன் உறையும் இடமாக இத்தலம் திகழ்கிறது. ராமாநுஜர், கூரத்தாழ்வான், திருக்கச்சி நம்பிகள், வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் போன்ற சான்றோருக்கு உத்வேகம் அளித்த மூலஸ்தானம் என்பதால், இத்திருகோயில் ‘தியாக மண்டபம்’ என்றும் போற்றப் படுகிறது.
யானை, குதிரை, வாண வெடிகள், பாண்டு, நாதஸ்வர இசையோடு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தையும், வடமொழி வேதத்தையும் சந்தம் சேரும் பொலிவுடன் இசைத்து வருவது வேறு எந்தத் தலத்திலும் நிகழாத அநுபவமாகும். இப்பெருமாளுக்கு ‘அருளிச் செயல் பித்தன்’ என்றே ஒரு பரிவுப் பெயருண்டு.
காஞ்சி மடத்துடன் தொடர்பு
பிரம்மோற்சவத்தில் ஒரு முக்கிய அங்கம், பெரிய காஞ்சிபுரத்திலுள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் வாகனத்துடன் இறங்கி அப்பகுதி மக்களுக்கு அருள் பாலிப்பதாகும். நேரெதிரே இருக்கும் காமகோடி சங்கர மடத்துடன் உள்ள தொடர்பு குறிப்பிடத் தக்கது. மகான் சந்திர சேகர சரஸ்வதியின் பிறந்த தினம் வைகாசி அநுஷம், வைகாசி விசாக கருட சேவைக்கு அடுத்த நாள்.
விசாகத் திருநாள் ஆன்மிகச் சேவையில் ஓராண்டு பூர்த்தியைச் சுட்டும். அதை முன்னிட்டுக் காஞ்சிப் பெரியவர் அன்று கங்கை கொண்டான் மண்டபத்தில் கருட சேவையைச் சேவித்து, பிறந்த தின ஆசியை முன்னரே, கோயில் மரியாதைகள் மூலம் பெற்றுக் வந்துள்ளதைப் பல ஆண்டுகள் நேரில் கண்டுகளித்தார்.