மனத்துக்கு இனியன் சந்திரன்

மனத்துக்கு இனியன் சந்திரன்
Updated on
1 min read

நவ கைலாயத் தலங்களில் இரண்டாவது தலம் சேரன்மகாதேவி. அகத்திய மாமுனி காட்டிய நவகிரகத் தலங்களில் இத்தலம் சந்திரனைக் குறிப்பதாக அமைந்துள்ளது. மனதுக்கு உரியவன் சந்திரன். கடல் அலை வேகம் அதிகமாக இருப்பது பெளர்ணமி நாளன்றுதான். அதுபோல எண்ண அலைகள் எழுவதும் வீழ்வதும் சந்திரனின் ஆதிக்கத்தைப் பொறுத்தது என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ஆவுடைய நாயகி அம்மையாகவும். ஸ்ரீஅம்மநாதன் சுவாமியாகவும் விளங்கும் சேரன்மகாதேவி திருக்கோயில் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் புண்ணியத் தலமாகும். இத்திருக்கோயிலில் உள்ள ஸ்ரீஅம்மநாதர் சுயம்புத் திருமேனி. இங்கு சிவகாமி சமேத நடராஜ சுவாமி காரைக்கால் அம்மை வழிபட சன்னிதி கொண்டுள்ளார்.

தன் குரு அகத்திய முனிவரின் அருளாணைப்படி நவ கைலாய சிவனை வழிபட்ட உரோமச முனிவரும், இரண்டு பெண்கள் உரல் உலக்கையுடன் நெல்குத்தும் காட்சியும் தூணில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த இரு காட்சிகள்தான் தலபுராணத்தில் விவரிக்கப்படுகின்றன.

உரோமச முனிவர் கைலாய மலையை அடைந்து நித்தியத்துவம் வேண்டுமென்று கேட்டு ஆலமரத்தின் அடியில் கண்டெடுத்த சிவலிங்கத்தைப் பூஜை செய்துவந்தார். சிவன் இம்முனிவருக்கு இத்தலத்தில் காட்சி அளித்தார் என்பர். ஆலமரம் தல விருட்சமாகக் கருதப்படுகிறது.

சகோதரிகளின் இல்லம் வந்த சிவன்

இப்பெருமானின் மூலஸ்தானத்தைக் கட்ட இரு சகோதரிகள் விரும்பியுள்ளனர். இந்தச் சேவையைச் செய்து முடிக்க நெல் குத்தும் தங்கள் தொழில் மூலமே பணம் சேர்த்தனர். ஆனாலும் போதுமான பணம் கிடைக்காததால், இங்குள்ள சிவனை பக்தி சிரத்தையுடன் வழிபட்டனர்.

இந்த நிலையில் ஒரு நாள் மாலை அந்தணர் உருவில் இவர்கள் இல்லம் நோக்கி வந்தார் சிவபெருமான். சகோதரிகள் இருவரும், அந்த அந்தணருக்கு இலை போட்டு உணவு பரிமாறியுள்ளனர். அந்தணர் உருவில் வந்த சிவபெருமானும் விருந்துண்டு அமுதிட்ட சகோதரிகளை வாழ்த்தினார். அன்றிலிருந்து சகோதரிகள் வீட்டில் செல்வம் பெருகியது. இதனால் மூலஸ்தானம் கட்டும் பணியும் நிறைவுற்றது என்கிறார்கள்.

கல்வெட்டுச் சான்றுகள்

இத்திருக்கோயிலை ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் கட்டியதாகக் கல்வெட்டுச் சான்று உள்ளது. சேரன்மகாதேவி மங்கலம் என்ற இவ்வூரின் பெயர் கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது.

சேர மன்னன் மகளின் பெயர் மகாதேவி என்றும், சேரன் என்ற குலப்பெயரைச் சேர்த்து, இவ்வூரின் பெயர் சேரன்மகாதேவி ஆயிற்று என்கின்றனர். வேறொரு கல்வெட்டில் சிவபெருமான் பெயர் கைலாயத்து ஆழ்வார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது சிந்திக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in