Last Updated : 08 May, 2014 01:34 PM

 

Published : 08 May 2014 01:34 PM
Last Updated : 08 May 2014 01:34 PM

பாவனை

ஒரு புத்த பிக்குவுடன் அவரது சீடன் நடந்து கொண்டிருந்தான். அன்று எளியவர்களுக்குப் பிட்சை இடும் தினம். சீடன் பிட்சையை சுமந்துகொண்டு வந்தான்.

வழியில் ஓரமாக மூன்று பிச்சைக்காரர்கள் கையேந்தி நின்றுகொண்டிருந்தார்கள்.. பிக்கு சீடனிடம் சொன்னார்:

“அவர்களுக்கு தானம் அளித்து விட்டு வா..”

சீடன் போய் முதல் பிச்சைக்காரனின் கைகளில் பிட்சையைப் போட்டு விட்டு நகர்ந்தான். பிக்கு அவனை உடனே அவசரமாக அழைத்தார்.

“சீடனே.. மற்றவருக்கு தானம் எவ்விதம் அளிக்க வேண்டும் என்று நீ அறிந்து கொள்ளவில்லையா? “

சீடன் மௌனமாக நின்றான்.

“ஒரு எளியவருக்கு தானம் அளிக்கும் போது நாம் மனதில் சற்றும் அகந்தையில்லாமல் அவரை பணிவுடன் வணங்கிப் பரிவுடனும் தாழ்மையுடன் பிட்சை வழங்க வேண்டும்.. ஒரு நற்செயல் செய்யும் வாய்ப்பை நமக்கு நல்கிய அந்த நல்லவருக்கு நாம் கடன் பெற்றிருப்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும் புரிந்ததா?...”

“புரிந்தது...குருவே...”

“சரி...இப்போது சென்று அந்த மூவருக்கும் தானம் அளித்து வா..” என்றார் புத்த பிக்கு

சீடன் போனான். குரு சொல்லியபடியே மிகவும் பணிவாக கைகூப்பி, வணங்கி விட்டு அன்புடன் முதல் பிச்சைக் காரனுக்கு தானம் அளித்தான்.

“ சபாஷ்..அவ்வாறு தான் செய்ய வேண்டும் தொடரட்டும் ” என்றார் குரு.

சீடன் இரண்டாமவனுக்கும் அவ்வாறே தானம் அளித்தான். குரு புன்னைகை பூத்தார்.

பிறகு மூன்றாவது பிச்சைக்காரனை அணுகிய போது சீடன் சற்று நேரம் அவனை உற்றுப் பார்த்து யோசித்தான். பிறகு ஏதோ தீர்மானத்துக்கு வந்தவனாய்.. அந்தப் பிச்சைக்காரனை பணிந்து வணங்காமல் பழையபடி சாதாரணமாக பிச்சையைப் போட்டு விட்டு நகர்ந்தான்..

குரு திகைத்துப் போய்.. சீடனே...ஏன் இப்போது இவனிடம் முறை தவறி நடந்தாய்? ”என்று சற்றுக் கடுமையாக கேட்டார்.

“குருவே...நான் தவறு ஏதும் இழைக்கவில்லை.. மூன்றாவது பிச்சைக்காரர் பார்வையற்றவராக இருக்கிறார்... நான் வணங்குவதும் பணிவதும் அவர் கண்டு உணர வாய்ப்பில்லை.என்னுடைய பணிவான பாவனை எதுவும் அவருக்கு எந்த வித நெகிழ்ச்சியையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. அதனால் அது தேவையில்லை என்று இப்படி செய்தேன்..” என்றான்

இந்த பதிலைக்கேட்டு குரு தீவிரமாக அவனைப் பார்த்து விட்டு ஆழ்ந்தக் குரலில் சொன்னார்.

“சீடனே இங்கே நீ இரண்டு விஷயத்தை ஊகிக்கத் தவறிவிட்டாய்.

ஒன்று, அந்தப் பிச்சைக்காரன் நிஜமாக அப்படி இல்லாமல் குருடனைப் போல் வெறுமனே பாவனை செய்து கொண்டிருக்கலாம்!

இரண்டு, அவன் பார்வையற்றவனாக இருந்தாலும் கடமையை ஆற்றுவதில் நீ நேர்மையற்றவனாக இருக்கக் கூடாது. அப்போது அதன் பயனை நீ இழந்து விடுவாய் அல்லவா?”

சீடன் திகைப்பும் வியப்புமாக குருவைப் பார்த்து நின்றான்.

அவர் சொன்ன வரிகளின் அர்த்தங்கள் அவனுக்குள் வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x