

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ரமலான் மாதம் பத்தாம் நாள் நபிகள் அவர்கள் சுமார் 10,000 தோழர்களுடன் மக்காவிற்கு புறப்பட்டார். எந்த மண் தம்மை வெறுத்து ஒதுக்க நினைத்ததோ, அதே மண்ணில் ஒரு வெற்றி வீரராகத் தடம்பதித்தார். ஆனால் அவரிடம் சிறிதும் வெற்றிச் செருக்கு இல்லை.
“எவர் தன் வீட்டினுள் கதவை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறாரோ அவருக்குப் பாதுகாப்பு உண்டு; எவர் அபுசுஃப்யானின் இல்லத்தினுள் புகுந்திருக்கிறரோ அவருக்கும் பாதுகாப்பு உண்டு. இறையில்லம் கஅபாவினுள் அடைக்கலம் தேடிக்கொண்டவருக்கும் பாதுகாப்பு உண்டு” என்ற பொதுமன்னிப்பைப் பிரகடனப்படுத்தினார்.
அரண்டுபோய் ஆங்காங்கே மறைந்திருந்த எதிரிகள் இதைக் கேட்டதும் மெல்ல மூச்சுவிட ஆரம்பித்தனர். வீட்டின் ஜன்னல்களும் வாசற்கதவுகளும் ஒவ்வொன்றாக மெல்லத் திறந்தன. நபிகள், இறையில்லம் கஅபாவினுள் தம் தோழர்களுடன் நுழைந்தார். அந்த இறையில்லம் ஒளிமயமானது.
நபியே! நன்மையும் தீமையும் சமமாக மாட்டா. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையை அழிப்பீராக! அப்போது கடும் பகைவரும் உற்ற நண்பராய் மாறுவதைக் காண்பீர். இப்பேறு பொறுமையாளர்களைத் தவிர மற்ற எவருக்கும் கிடைக்காது; பாக்கியவான்களைத் தவிர மற்றவருக்குக் கிடைப்பது அரிது (41:34- திருக்குர் ஆன்)
நபிகள் நிகழ்த்திய உரை
“ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் தன் வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தான். அவன் தன் அடியாருக்கு உதவினான். அவன் ஒருவனே தன்னந்தனியாக சத்தியத்தின் பகைவர்களைத் தோற்கடித்துவிட்டான்.”
“ஆம்! கேட்டுக்கொள்ளுங்கள். அஞ்ஞான காலப் பெருமைகள் அனைத்தும் கடந்த காலக் கொலைகளுக்கான பழிவாங்கல்கள் அனைத்தும், ரத்த இழப்பீட்டுத் தொகைகள் அனைத்தும் என் காலடிகளுக்குக் கீழே உள்ளன. குறைஷிகளே! அஞ்ஞான காலக் குலப் பெருமைகளையும், ஆணவங்களையும் இறைவன் அழித்துவிட்டான்.”
“மக்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம்; மேலும் உங்களைப் பல கோத்திரங்களாகவும், கிளைகளாகவும் ஆக்கினோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் பொருட்டே இவ்வாறு ஆக்கினோம். ஆயினும் எவர் இறையச்சம் உடையவராக இருக்கிறாரோ அவரே இறைவனிடத்தில் மிக்க கண்ணியத்திற்குரியவர் ஆவார். இறைவன் மிக அறிந்தவனும் மதிநுட்பமுடையவனுமாவான். (49:13)” எனும் குர்ஆனின் வசனத்தை ஓதிக்காட்டினார்.
நபிகளின் உரையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் அவுருடைய எதிரிகளும் இருந்தனர். “சொல்லுங்கள்! இன்று நான் உங்களிடம் எப்படி நடந்துகொள்ளப் போகிறேன் தெரியுமா?” என்று நபிகள் கேட்டார். அதுவரை அண்ணல் நபிகள் நடந்துகொண்ட முறையினைப் பார்த்த அம்மக்கள் சற்றுத் தைரியமாக, “நீர் கண்ணிய மிக்க சகோதரர் ஆவீர். கண்ணியமிக்க சகோதரரின் மகனாவீர்.” என்றனர். இதைக் கேட்ட நபிகள் கூறினார். “செல்லுங்கள்! இப்போது உங்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. நீங்கள் அனைவரும் சுதந்திரமானவர்கள்” என்றார்.
மேலும் மக்காவில் தம் சொத்து சுகங்களை விட்டுவிட்டு மதீனாவுக்குச் சென்ற தம் தோழர்கள் அனைவரையும் அவற்றைப் பறித்த மக்கத்து குறைஷிகளுக்கே விட்டுக் கொடுக்கச் சொன்னார்கள். அப்படியே நபித்தோழர்களும் விட்டுக் கொடுத்தார்கள்.
குற்ற உணர்வில் கூனிக் குறுகிய பகை உள்ளங்கள் உருக ஆரம்பித்தன. அவை கண்ணீர் ஊற்றுக்களாகப் புனித மக்கா நகரையே நனைத்தன.