

‘எனக்கு உன் நமஸ்காரமே போதும்' என்று சொல்லும் ஆசார்யாள், ‘அது தன்னாலேயே எனக்கு ஒரு நிறைவைத் தருகிறது. அதனால் அதுவே போதும்' என்று சொல்வதுகூட அவ்வளவு அடக்கமாக இல்லை.
“நான் ரொம்பப் பக்வியாக்கும் (பக்குவம் பெற்றுவிட்டவனாக்கும்). மற்றவர்கள் தனம், தான்யம், ஆரோக்யம், சந்தானம் என்றிப்படிக் காம்யமாக எட்டுவித ஐச்வர்யங்களை அஷ்டலக்ஷ்மியாக உள்ள உன்னிடம் பிரார்த்தித்து நமஸ்கரிக்கும்போது, நான் மாத்திரம் அதில் எதையும் பொருட்படுத்தாமல், எதையோ கொடுத்து நான் கீழே நின்று வாங்கிக் கொள்கிறவனாக இல்லாமல், நானாகவே நமஸ்காரம் செய்து, நானாகவே அதில் நிறைந்து விடுகிறேனாக்கும் என்று சொல்கிற தோரணையில் இருக்கிறது” என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.
அதனால் நமஸ்கார க்ரியையே ஒருவரை நிறைவித்துவிடுவதாகச் சொல்லாமல் அது இன்னின்ன பிற பலன்களைத் தருகிறது, ‘ஆனபடியால் இத்தனை பலனைத் தரும் நமஸ்காரமே எனக்குப் போதும்' என்கிறார். லக்ஷ்மிக்குச் செய்யும் நமஸ்காரம் இந்தப் பலன்களைத் தருகிறதென்று சொன்னால் லக்ஷ்மியே தருகிறாளென்றுதான் தாத்பர்யம்.
அதாவது அவள் கொடுத்தே இவர் வாங்கிக்கொள்கிறாரென்று அடக்கத்துடன் காட்டுகிறார். அவை என்னென்ன பலன்கள்? “ஸம்பத்கராணி” நிறைய சம்பத்தைக் கொடுக்கிறது. “ஸகலேந்த்ரிய நந்தநாநி” எல்லா இந்திரியங்களுக்கும் இனியவற்றை அளிக்கிறது. அதாவது சகல போக போக்யங்களையும் அளிக்கிறது.
“ஸாம்ராஜ்ய தான நிரதாநி” - பக்தர்களுக்குப் பெரிய சாம்ராஜ்யத்தையே வழங்கவேண்டுமென்று உத்சாகத்தோடு ஈடுபட்டிருக்கிறது. “ராஜராஜேச்வரீ, ராஜ்யதாயிநீ”, அப்புறம் “ராஜபீட நிவேசித நிஜாச்ரிதா” (மெய்யடியார்களை அரியணையிலே ஏற்றுவிப்பவள்) என்றெல்லாம் “லலிதா ஸஹஸ்ரநாம”த்திலும் வருகிறது.
மற்ற காரணங்களோடு, லௌகிகமான பலன்களைச் சொன்னால்தான் ஜனங்களுக்கு நமஸ்காரம் செய்யத் தோன்றுமென்று ஆசார்யாளுக்குப்பட்டதால் இப்படியெல்லாம் சொல்ல ஆரம்பித்தார். இப்படி (சுலோகத்தின்) முதல் பாதியில் சொல்லி முடித்து, இவ்விதமான பலன்களைத் தரும் நமஸ்காரங்கள் - த்வத் வந்தநாநி - உனக்குரிய நமஸ்காரங்கள் என்று சொன்னவுடன் அவருக்கு ஒரு யோசனை வந்துவிட்டது.
நிறைய சம்பத், சகலேந்த்ரிய, சந்துஷ்டி, பெரிய ராஜ்யாதிகாரம் ஆகியவற்றை மட்டும் சொல்லி நிறுத்தி விட்டால், எல்லாம் இகலோக அநுக்ரகங்களாகவே அல்லவா ஆகிவிடுகிறது? “இவற்றைத் தருவதான நமஸ்காரங்கள் என்னை வந்தடையட்டும்” என்று ஆசார்யாளால் - சொந்த வாழ்க்கையில் கொஞ்சங்கூட உலகப்பற்றில்லாத ஆசார்யாளால் - எப்படி பிரார்த்திக்க முடியும்? இதைப்பற்றி ஆலோசித்துப் பார்த்தார்.
மகாமதியான ஆசார்யாளுக்கு ஆலோசனை, யோசனை எல்லாம் க்ஷணமாத்திரம்தான் அல்லது அவ்வளவுகூட இல்லை. சுலோகம் கவனம் பண்ணிக்கொண்டு போகிறபோதே அடுத்த வார்த்தை போடுவதற்குள்ளே பதில் வந்துவிடும். நிறுத்தாமலே, தங்கு தடையில்லாமல் முழுக்கப் பூர்த்தி பண்ணிவிடுவார்.
இப்போது சம்பத்து முதலான பலன்களைச் சொல்லி இவற்றைத் தரும் நமஸ்காரங்கள், 'த்வத் வந்தநாநி' என்று பின்பாதியை ஆரம்பித்தவுடன், “என்னடாது! எல்லாம் லௌகிகமாகவே சொல்லிவிட்டோமே!” என்று நினைத்த ஆசார்யாள், உடனேயே குறையை நிவர்த்தி செய்வதாக, அடுத்தாற்போல் “துரிதோத்தரணோத்யதாநி” என்று மின்னல் வெட்டுகிற வேகத்தில் போட்டுவிட்டார்.
“வந்தநாநி” என்ற வார்த்தைக்கு முன்னால் லௌகிகமான பலன்களாக இரண்டு மூன்று சொன்னவர், அந்த வார்த்தைக்குப் பின்னால் ஆத்மார்த்தமாக “துரிதோத்தரணோத்யதாநி” என்று ஒரு பலனைச் சேர்த்துவிட்டார்.
கவிதைகளில் வசன நடைபோல இல்லாமல் முன்னே பின்னே வார்த்தைகளை மாற்றிப் போடலாம். அப்படிப் போடுவதே ஒரு அழகு. அதிலும் சம்ஸ்க்ருத பாஷையிலோ வார்த்தைகளைப் பல தினுசிலே கோத்து வாங்கி விளையாடும் ஸ்வாதந்திரியம் ஜாஸ்தி. ஆகையால் ச்லோக ரூபத்திற்குக் கொஞ்சங்கூட பங்கம் ஏற்படாமலே, த்வத் வந்தநாநி துரிதோத்தரணோத்யதாநி என்று போட்டுவிட்டார் ஆசார்யாள் .
“இன்ஸ்பிரேஷன்” என்று பொதுவாகச் சொல்லுவதன் உசந்த நிலையில், ஒரு திவ்ய ஆவேசத்தில்தான் கடகடவென்று கவிதையாகக் கொட்டியது.
தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)