

நபிகளாரைச் சந்திக்கும் பொருட்டு அவருடைய திருச்சபைக்குப் பார்வையாளர் வருவார்கள். அவரைச் சந்திக்க, நீண்ட தொலைவிலிருந்து வருபவர்கள் நபிகளுடன் விருந்தினராய் தங்கிச் செல்வார்கள்.
அன்றும் அப்படித்தான் நீண்ட தொலைவிலிருந்து நபிகளைச் சந்திக்க ஒருவர் வந்திருந்தார். அவரைத் தம்முடன் விருந்தினராகத் தங்கவைக்கும் ஏற்பாடாகத் தமது வீட்டில் கலந்துரையாடியபோது, உண்ணுவதற்கு நீரைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று தெரிந்தது.
“தோழர்களே! இன்று எனது இந்த விருந்தினரை உபசரித்து பெரும் பேற்றை அடையப் போவது யார்?” என்று நபிகள் நாயகம் தன் தோழர்களிடம் கேட்டார்.
“இறைவனின் தூதரே! நான் அந்த பாக்கியத்தை ஏற்றுக்கொள்கிறேன்!” என்றார் நபித் தோழர் அபூதல்ஹா. மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த விருந்தினரை வீட்டுக்கு அழைத்துச் சென்றவர், நடந்ததைத் தன் மனைவியிடம் தெரிவித்தார்.
விருந்தினரை இன்முகத்துடன் வரவேற்று அமரவைத்த அபூதல்ஹாவின் மனைவியார் வீட்டில் குறைந்த அளவே உணவு இருப்பதை அறிந்து வருத்தமுற்றார்.
“விருந்தினரை உபசரிப்பது நற்பேறுக்குரிய செயல். அதுவும், நபிகளாரின் விருந்தினர் என்பது என்பது பெரும் சிறப்புக்குரிய விஷயம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று நாம் உண்பதற்கே போதுமான உணவு இல்லை. அதுவும் குழந்தைகளுக்காக என்று சிறிதளவு உணவே உள்ளது. என்ன செய்வது?” என்று கையைப் பிசைந்து நின்றார். தமது வருத்தத்தைக் கணவரிடமும் பறிமாறிக்கொண்டார்.
அபூதல்ஹா சொன்னார். “இந்த அரும்பேற்றை நாம் நழுவவிட முடியாது. நான் சொல்வதைக் கேள். குழந்தைகளைச் சமாதானப்படுத்தி சீக்கிரமே தூங்க வைத்துவிடு. குழந்தைகளுக்கான உணவை நாம் நமது விருந்தினருக்குப் படைப்போம்”
கணவரின் யோசனைப்படி, குழந்தைகளுக்குக் கதைகளைச் சொல்லி தூங்கவைத்துவிட்டு வந்த அபூதல்ஹாவின் மனைவி, “நீங்கள் சொன்னபடி செய்தாகிவிட்டது. இருக்கும் உணவு ஒருவருக்கு தான் போதுமானது. விருந்தினர் நம்மைத் தன்னோடு சாப்பிட அழைத்தால் என்ன செய்வது?” என்று கேட்டார்.
“கவலைப்படாதே! அதற்கும் ஒரு திட்டம் இருக்கிறது. விருந்தினருக்குச் சோறு பரிமாறிவிட்டு எதேச்சையாக அணைவது போல விளக்கை அணைத்துவிடுவோம். அந்த இருட்டில், நாமும் விருந்தினரோடு உணவு உண்பதைப் போல நடிப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றார் அபூதல்ஹா.
விருந்தாளி வயிராற உணவு உண்ணும்வரை கணவன், மனைவி இருவரது நடிப்பும் தொடர்ந்தது. உபசரிப்பும் முடிந்தது. நடந்ததை அறியாத விருந்தினரும் வயிறார உண்டு நிம்மதியாக உறங்கலானார்.
அபூதல்ஹா, மனைவி மக்களோடு அன்றைய இரவைப் பசியுடன் கழித்தார்.
அடுத்த நாள் காலை. நபித் தோழரின் உன்னதமான விருந்தோம்பும் பண்பால் இறைவன் மகிழ்வுற்றான். அதன் அடையாளமாக நபிகளுக்கு, “தாங்களே தேவையுள்ளவர்களாக இருந்தாலும், தங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்!”. ‘வஹி’ எனப்படும் வேத வெளிப்பாட்டை, திருக்குர்ஆனின் திருவசனமாக இறக்கியருளினான்.
நபித் தோழர் அபூதல்ஹாவையும் அவருடைய குடும்பத்தையும் காலம் உள்ளவரை சிறப்புறச் செய்தான்.