

எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தாலும், சில இடங்களில், சில முக்கிய பிரமுகர்களுக்கென்று பிரத்யேகமாக சில வசதிகள் கிடைக்கும். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாமான்யமானவர்கள், அவர்களுக்கும் அத்தகைய வசதிகளை சலுகை களைக் கேட்கும்போது, `இதென்ன பெருமாள் கோயில் சடாரியா’ எல்லாருக்கும் கொடுக்கிறதுக்கு? என்று பதில் வரும்.
எல்லாருக்கும் கிடைக்கும் சடாரிக் கென்று ஒரு மகத்துவம் இருக்கின்றது. உலகின் அனைத்து உறவுப் பற்றிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள இறைவனின் ஆசியை அளிப்பதே சடாரியின் மகத்துவம்.
நிறையப் பேர், சடாரியில் பொறிக்கப் பட்டிருப்பவை பெருமாளின் பாதங்கள் என்று நினைப்பார்கள். அவை பெருமாளின் பாதங்கள் அல்ல, பெருமாளால் பிறக்கும்போதே உலக மாயைகளை வென்றவரான நம்மாழ்வாரின் பாதங்கள்.
நம்மாழ்வாரின் பாதங்கள் பொறிக்கப்பட்ட சடாரியை பக்தர்களின் தலையில் சார்த்துவதின் மூலம் இவ்வுலகத்தின் பாசப் பிணைப்புகளில் இருந்து விடுபட்டு, பரமாத்வை அடையலாம் என்பதே சடாரி வைப்பதின் ஐதீகம்.