விவிலிய வழிகாட்டி: மன்னிக்கத் தயங்கும் மனிதரா நீங்கள்?

விவிலிய வழிகாட்டி: மன்னிக்கத் தயங்கும் மனிதரா நீங்கள்?
Updated on
2 min read

சிறு தவறு செய்தால்கூட அதை ஊதிப் பெரி தாக்கும் மனோபாவம் நம்மில் பலருக்குண்டு. சம்பந்தப்பட்டவர்கள் மனைவியாகவோ, கணவ னாகவோ, பிள்ளை யாகவோ, உறவினராவோ, நண்பராவோ நம்முடைய ஊழியராகவோ இருக்கலாம். அவர்களைக் குற்றவாளிகளைப் போல் நடத்த விரும்பும் நாம், அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் கூறும்போது “அவனைப் போல் இருக்காதே.. அவளைப் போல் இருக்காதே!” என்று தவறான முன்மாதிரிகளைப் போல் அவர்களை உடனடியாகத் தீர்ப்பிட்டு விடுகிறோம்.

சிறு தவறுகளுக்கே நாம் மற்றவர்களை இப்படி நடத்துகிறோம் என்றால் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ தவறு செய்பவர்களை நாம் மன்னிக்க மறுக்கிறோம். அவர்கள் எத்தகைய மனநிலையில் சூழ்நிலையில் தவறுகளை இழைத்தார்கள் என்பதை நாம் எண்ணிப் பார்ப்பதே இல்லை. இதனால் அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்த அவர்களுக்கு நாம் வாய்ப்புத் தருவதே இல்லை.

மன்னிப்பதால் கிடைப்பது என்ன?

மன்னிப்பதால் மன உளைச்சல், கவலை, சோர்வு போன்றவை நம்மை விட்டு நீங்கிவிடும் என்று விவிலியம் சொல்கிறது. இது அறிவியல்பூர்வமான உண்மையும்கூட. “ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்; கிறிஸ்துவின் மூலம் கடவுள் உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல், நீங்களும் ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்” என எபேசியர் (4:32) எடுத்துக் கூறுகிறது.

நம்மைப் படைத்த கடவுளான பரலோகத் தந்தையை “சமாதானத்தின் கடவுள்” என்று விவிலியம் சொல்கிறது. பூமியிலுள்ள தம் பிள்ளைகள் சமாதானமாக வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார் “ஒருவர்மீது ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரையொருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள். பரலோகத் தந்தை உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்” என்று கொலோசெயர்(3:13) புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

முதலில் யார் முன்வருவது?

உங்களுக்கு மன்னிக்கும் குணம் இருக்கிறது. ஆனால் அவனே மனம் திருந்தி நம்மிடம் வரட்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் அது சரியா? ஒருவர் மீது நியாயமாகவே உங்களுக்கு மனக்குறை ஏற்பட்டிருக்கலாம். அவர் தான் செய்த தவறை இன்னும் உணரவில்லை. எனவே அவரோடு உள்ள உறவை முறித்துக்கொள்வதே சரி என நினைக்கலாம். ஆனால் தவறு செய்திருக்கிறோம் என்று அவருக்கே தெரியாமல் இருந்தால்? நீங்கள்தான் தவறு செய்தீர்கள் என்று அவர் நினைத்தால்? மனஸ்தாபம் இழுத்துக்கொண்டே செல்வது இப்படித்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே நீங்களே முன்வந்து அவருடன் பேசி மனஸ்தாபத்தின் மூலத்தை அறியுங்கள்.

“நாம் செய்யும் எல்லாத் தவறுகளையும் கடவுள் கணக்கு வைத்திருந்தால் நம் கதி என்னவாகியிருக்கும்” (சங்கீதம் 130:3)! “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை” என்ற பைபிளின் நீதிமொழியையும் (19:11) மனதில் நிறுத்துங்கள். விவேகமாக யோசித்துப் பார்த்தால் பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கலாம். தவறாக நடந்துகொண்டபோது அவர் களைப்பாக இருந்தாரா?

உடல்நிலை சரியில்லையா? ஏதாவது பிரச்சினையில் இருந்தாரா என்று யோசித்துப் பாருங்கள். மற்றவர்களுடைய சூழ்நிலைகளை, உணர்ச்சிகளை, புரிந்துகொண்டால் உங்கள் கோபம் குறையும், தவறைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள். சக மனிதர்களைக் கூடுதலாகப் புரிந்துகொள்ள சிரத்தை எடுப்பது உங்களை உயர்த்தும். நீங்கள் ‘காது கொடுத்துக் கேட்கும் மனிதராக’ அறியப்படுவீர்கள்.

தயக்கத்தை உடைத்தல்

மற்றவர்களை மன்னிப்பதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கிறதா? அப்படியானால் மன்னிக்கப்பட வேண்டியவரை உங்கள் உடன்பிறந்த சகோதரரைப் போல எண்ணிக்கொள்ளுங்கள். “உங்கள் சகோதரர் ஒரு பாவம் செய்தால், அவரிடம் தனியாகப் போய் அவருடைய தவறை எடுத்துச் சொல்லுங்கள்; அவர் உங்களுக்குச் செவிகொடுத்தால், உங்கள் சகோதரரை நல்வழிக்குக் கொண்டுவந்திருப்பீர்கள்” என்று மத்தேயு (18:15) எடுத்துச் சொல்வதைப் பாருங்கள்.

பிரச்சினையைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லி உங்கள் பக்கம் ஆள் சேர்க்கவும் நினைக்கலாம். அப்படிச் செய்தால், பிரச்சினை இன்னும் பெரியதாகி வெடித்துவிடும். பிரச்சினை பெரியது என்றால், உங்களால் மன்னிக்க முடியவில்லை என்றால் நேரில் பேசுங்கள். உடனடியாகக் காலம் கடத்தாமல் பேசுங்கள். காலம் கடத்தினால், பிரச்சினை இன்னும் மோசமாகிவிடும். உங்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சினையைப் பிறரின் காதில் போடுவது வேண்டவே வேண்டாம். “உங்களுக்குள் பேசி முடிவு செய்யுங்கள். அடுத்தவனின் இரகசியத்தை வெளியில் கூறாதீர்கள்” என்று நீதிமொழிகள் (25:9) எடுத்துக் கூறுவதைக் கவனியுங்கள்.

நான் நல்லவன் என்பதை எல்லார் முன்னிலையிலும் காட்ட வேண்டும் என்பதைவிட, சமாதானம் ஆக வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும். என் மனதைக் காயப்படுத்திவிட்டீர்கள் என்று சொல்லாமல், ‘இப்படிச் சொன்னது என் மனதுக்குக் கஷ்டமாக இருந்தது’ என்று சொல்லுங்கள்.

காத்திருத்தல்

“யாருக்கும் தீமைக்குத் தீமை செய்யாதீர்கள்; உங்கள் எதிரி பசியாக இருந்தால், அவனுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்; அவன் தாகமாயிருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுங்கள்” என்று ரோமர்(12:17) வழிகாட்டுகிறது

பொறுமையாக இருங்கள். எல்லாருடைய சுபாவமும் மனப்பக்குவமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலருடைய கோபம் தணிய நாட்கள், மாதங்கள் ஏன் சில வருடங்கள் கூட எடுக்கலாம். அவர்களிடம் மாற்றத்தைக் கடவுள் கண்டிப்பாக விதைப்பார். இந்தத் தருணத்துக்காகத்தானே காத்திருந்தீர்கள். “தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்” என்று (ரோமர் 12:21) விவிலியம் வழிகாட்டுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in