விவேகானந்தர் மொழி- கருணைக்கு எது அவசியம்?

விவேகானந்தர் மொழி- கருணைக்கு எது அவசியம்?
Updated on
1 min read

ஸ்ரீ கிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி, யுதிஷ்டிரரிடம், `அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும்?’ என்று கேட்டாள்.

அதற்கு யுதிஷ்டிரர், `தேவி, இதோ இந்த இமயமலையைப் பார். எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது! நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன்.

அதுபோலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே எல்லா அழகுக்கும் கம்பீரத்துக்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்பட வேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம்போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால் முடியாது’ என்றார்.

ஆன்மா தெய்வீகமானது, ஆனால் ஜடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும்போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலையே முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை. மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.

கடவுளின் கருணையால்தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத்தான் கிடைக்கும். எனவே அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in