Published : 30 Apr 2015 12:47 PM
Last Updated : 30 Apr 2015 12:47 PM

வார ராசி பலன் 30-04-2015 முதல் 06-05-2015 வரை துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 8-ல் புதனும் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். மன மகிழ்ச்சி பெருகும். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவிகளின் திறமை வெளிப்படும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். பெண்களின் நிலை உயரும். ஆன்மிகப் பணியாளர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். இடமாற்றமும் நிலைமாற்றமும் சிலருக்குக் கிடைக்கும்.

வார முன்பகுதியில் பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. வார நடுப்பகுதியில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். முக்கியமான எண்ணங்களில் ஒன்றிரண்டு ஈடேறும். வாரப் பின்பகுதியில் பொருளாதார நிலை உயரும். பல வழிகளில் வருமானம் வந்து சேரும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடவும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 1, 3, 6.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை, இளநீலம், வெண்மை.

எண்கள்: 5, 6, 7.

பரிகாரம்: துர்க்கா கவசம் படிப்பது நல்லது. சூரிய காயத்ரி சொல்லவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாயும், 9-ல் குருவும், 11-ல் ராகுவும் உலவுவது விசேஷமாகும். எடுத்த காரியத்தில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புதிய பொருட்கள் சேரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். பெரியவர்களும் தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள். மேலதிகாரிகளின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள்.

அரசியல், நிர்வாகம், ஆன்மிகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாரம், தளவாடம் பணியில் லாபம் தரும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் பெருகும். புதியவர்கள்கூட உதவி புரிவார்கள். சுபச் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 1, 6.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், சிவப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 9.

பரிகாரம்: சனி, கேதுவுக்கு ஆராதனைகளைச் செய்வது நல்லது. ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சூரியனும் செவ்வாயும் 6-ல் புதனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். தர்ம சிந்தனை உருவாகும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காண வழி பிறக்கும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் உண்டாகும். பயணம் பயன்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். நிலபுலங்கள் லாபம் தரும்.

வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். நண்பர்கள், உறவினர்களது தொடர்பு நலம் தரும். 4-ல் கேதுவும், 6-ல் சுக்கிரனும், 8-ல் குருவும், 12-ல் சனியும் இருப்பதால் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அலைச்சல் கூடும். வேலைப்பளு அதிகமாகும். எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் உண்டாகும். தாய், வாழ்க்கைத்துணையின் நலனில் கவனம் தேவை. கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 1, 3.

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, புகை நிரம். ஆரஞ்சு, பச்சை.

எண்கள்: 1, 4, 5, 9.

பரிகாரம்: வயோதிகர்கள், ஏழைப் பெண்களுக்கு உதவுவது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 5-ல் சுக்கிரனும் 7-ல் குருவும், 11-ல் சனியும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். கலைஞர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். பெண்களின் எண்ணம் ஈடேறும். கேளிக்கை, உல்லாசங்கள்; விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய பொருட்கள் சேரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும்.

கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். தொலைதூரப் பயணம் நலம் தரும். தொழிலாளர்களுக்கு முன்னேற்றமான போக்கு நிலவும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். தொழிலில் அபிவிருத்தி காணலாம். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 1, 3, 6.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, மெரூன், பச்சை.

எண்கள்: 3, 5, 6, 7, 8.

பரிகாரம்: சூரியனுக்கு செந்தாமரை மலர் அணிவித்து, அர்ச்சனை செய்வது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் செவ்வாயும், 4-ல் புதனும் சுக்கிரனும், 10-ல் சனியும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகள் விலகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இப்போது கிடைக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம்.

நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கலைத் துறை ஆக்கம் தரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசுப் பணியாளர்களது எண்ணம் ஈடேறும். பொதுநலப் பணிகளுக்கு வரவேற்பு கூடும். எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளால் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 3, 6.

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை. சிவப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 6, 8, 9.

பரிகாரம்: நாகரை வழிபடவும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி, அவர்களது ஆசிகளைப் பெறவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாயும் 3-ல் சுக்கிரனும், 5-ல் குருவும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகளைச் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். புத்திசாலித்தனம் பிரகாசிக்கும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். தெய்வப் பணிகள் நிறைவேறும். ஜலப்பொருட்கள் லாபம் தரும்.

ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். சூடான வார்த்தைகளை உதிர்க்கலாகாது. கண், வாய், முகம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு நஷ்டம், ஏற்படக்கூடும். எச்சரிக்கை தேவை. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். கேளிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 1, 6.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: இளநீலம், சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்: 3, 6, 9.

பரிகாரம்: சூரியன், ராகு, கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. திருமாலை வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x