

மன்னர் ஆட்சி முடிந்த பின்னும் மதுரையைத் தன் அருளாட்சியில் வைத்திருக்கும் மீனாட்சியம்மனின் சித்திரைத் திருவிழா, ஏப்ரல் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. மதுரையின் அரசிக்குத் திருமணம் என்றால் கேட்கவா வேண்டும்? காலை முதல் மாலை வரை திருக்கல்யாண விருந்தால், மதுரையே விழாக்கோலம் பூண்டு ஆர்ப்பரிக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (1.5.15) திருத்தேரோட்டம் நடைபெறும். விழா தொடங்கிய நாள் முதல் மாசி வீதியெல்லாம் மக்கள் வெள்ளம்தான் என்றாலும், தேரோட்டத்தன்று மாசி வீதியில் பூப்போட்டாலும் கீழே விழாது என்னும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் குவிந்துவிடும்.
அழகர் வாராரு...
மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா நடந்துகொண்டிருக்கும்போதே, அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவும் தொடங்கிவிடும் என்பது சிறப்பு. இன்று தோளுக்கினியான் திருக்கோலத்தில் அழகர்கோயில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுவார் சுந்தரராஜப் பெருமாள்.
சித்ரா பவுர்ணமி தினத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.
சிலம்பாறு என்னும் நூபுர கங்கை
108 வைணவத் தலங்களில் ஒன்றாகத் திகழும் அழகர் கோயில், மதுரை மாவட்டம் அழகர் மலை மீது அமைந்திருக்கிறது. இந்த மலை, திருமாலிருஞ் சோலை என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு ‘நூபுர கங்கை’ என்னும் புனித தீர்த்தம் உள்ளது. மகாவிஷ்ணு உலகை அளப்பதற்காகத் தன் திருவடிகளைத் தூக்கியபோது, அந்தத் திருவடியைக் கழுவி பிரம்மன் பூஜை செய்தார். அவ்வாறு கழுவியபோது, விஷ்ணுவின் கால் சிலம்பில் இருந்து கசிந்த நீர்த்துளிகள் அழகர் மலை மீது விழுந்து, புனித தீர்த்தமானது. கால்சிலம்புக்கு ‘நூபுரம்’ என்ற பெயரும் உண்டென்பதால், இந்த ஆறு சிலம்பாறு என்றும், நூபுர கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
மண்டூக விமோசனம்
பெருமாள் பக்தரான சுதபஸ் என்ற முனிவர் இந்தச் சிற்றாற்றின் கரையில் அமர்ந்து, விஷ்ணுவை நினைத்து தவமிருந்தார். அப்போது அவரைக் காண துர்வாச முனிவர் அங்கு வர, பெருமாள் நினைவில் மூழ்கியிருந்த சுதபஸ் முனிவரோ அதைக் கவனிக்கவில்லை.
வழக்கம் போல் கோபமடைந்த துர்வாச முனிவர் சுதபஸ் முனிவரைப் பார்த்து, “தவளையைப் (மண்டூகம்) போல கிடக்கும் நீ மண்டூகமாகவே மாறிப்போ” என்று சாபமிட்டார். தவளையாக மாறிவிட்ட சுதபஸ், “சுவாமி... என் பிழையைப் பொறுத்து சாப விமோசனம் தந்தருள வேண்டும்” என்றார்.
மனமிறங்கிய துர்வாசர், “வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அழகர் கோயிலில் இருந்து ஒரு நாள் ஆற்றுக்குப் பெருமாள் வருவார். அப்போது உனக்கு விமோசனம் கிடைக்கும்” என்றார்.
தன் பக்தனான மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காகவே அழகர் கோயிலில் இருந்து சித்ரா பவுர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்.
அழகரின் மதுரை வருகை குறித்து இன்னொரு கதை சொல்லப்படுகிறது. மதுரையில் அரசாளும் தன் தங்கை மீனாட்சிக்கும், சிவபெருமானுக்கும் (சுந்தரேஸ்வரர்) திருமணத்தை நடத்தி வைக்கவே அழகர் மதுரை வருகிறார்.
இடையில் பக்தர்களின் வரவேற்பை ஏற்று அருள் பாலித்துவிட்டு வரத் தாமதமாகிவிடுகிறது. முகூர்த்த நேரம் போய்விடக் கூடாதே என்று அவர் இல்லாமலேயே திருமணம் நடந்துவிடுகிறது. கோபமடைந்த அழகர், வைகை ஆற்றில் இறங்கி கோபத்தைத் தணித்துவிட்டு, கல்யாணத்துக்குப் போகாமல் மீண்டும் அழகர் மலைக்கே திரும்பிவிடுவதாகக் கூறுகிறார்கள்.
ஆனால், வரலாற்று ரீதியாக வேறொரு காரணம் சொல்லப்படுகிறது. அழகர் கோயில் திருவிழா வேறு, மீனாட்சியம்மன் கோயில் திருவிழா வேறு. மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில்தான் சைவ வைணவ ஒற்றுமைக்காக இவ்விருவிழாக்களும் ஒன்றாக்கப்பட்டனவா.
அதுவரையில் கள்ளழகர் சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில்தான் ஆற்றில் இறங்கினார். அதேபோல மீனாட்சித் திருக்கல்யாணமும், தேரோட்டமும் மாசி மாதம்தான் நடைபெற்றன. மாசி மாதம் அறுவடைக் காலம் என்பதால், மக்களுக்கு ஓய்வில்லாத வேலை இருக்கும். எனவே விவசாய வேலைகள் குறைவாக உள்ள சித்திரை மாதத்துக்கு மாசித் திருவிழாவை மாற்றினாராம் மன்னர்.
மதுரையின் அடையாளமாகவும் வளமையின் அடையாளமாகவும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் காலம்தோறும் நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமி அன்று அழகர் உடுத்தும் பட்டுடையின் நிறம் கொண்டே ஆண்டின் வளமையைக் குறிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் கொண்ட திருவிழா இது.