

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் பத்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது கிருஷ்ணாபுரம். சிற்பக் கலைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடாச்சலபதி கோவில் இங்கு தான் அமைந்துள்ளது.
தரிசனத்திற்கு வரும் உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கை ரொம்பவும் சொற்பம் தான்.ஆலயத்தில் மூலவராக வெங்கடாச்சலபதியும்,உற்சவராக ஸ்ரீனிவாசபெருமாளும் உள்ளனர். ஒன்பதாம் நூற்றாண்டில் சதாசிவ தேவராயர் என்னும் மன்னர் கோவிலை கட்டியதாக செவி வழிச் செய்தி சொல்லப்படுகிறது.16ம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசின் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் இந்த கோவிலை புனரமைப்பு செய்து,சிற்பங்களையும் செய்து வைத்துள்ளனர்.
கல்யாண வரம்,குழந்தை வரம் இந்த ஆலய வெங்கடாச்சலபதியை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.திருப்பதி வெங்கடாச்சலபதிக்கு தலை முடி காணிக்கை செலுத்துவதாக நேர்ந்து போக முடியாத சுற்றுவட்டார பகுதி மக்கள் இங்கு வந்து முடி காணிக்கை செலுத்தி வந்தனர். கோவிலின் தல விருட்சமாக செண்பக மரம்,தாயாராக பத்மாவதி அம்மன். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் 11 நாள்கள் பிரமோற்சவ விழா இங்கு வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலில் கொடி இறங்கும் நாளில் இங்கு கொடி பட்டம் ஏறும் மரபு காலம்,காலமாக இருந்து வருகின்றது.ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக புரட்டாசி மாத பிரமோற்சவ விழாவும் நடைபெறவில்லை.
கலை மிளிரும் சிற்பங்கள்
கருட வாகனம்,சிம்ம வாகனம்,ஆஞ்சநேயர் வாகனம்,ஆதிசேச வாகனம்,யானை வாகனம்,பின்ன மர வாகனம்,குதிரை வாகனம்,சந்திர பிரபை வாகனம் என திருவிழாவின்போது சாமி விக்கிரகங்களை சுமந்து வரும் வாகனங்கள் 2 ஆண்டுகளாக தெரு வீதிகளைப் பார்க்கவில்லை. கிருஷ்ணாபுரம் வெங்கடாச்சலபதி கோவிலின் நிலை குறித்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரிடம் கேட்ட போது,“கும்பாபிஷேகப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஐந்து மாதங்களில் கும்பாபாபிஷேகத்தை நடத்தி விடுவோம்”என்றார்.
மூலவரை தரிசிக்கும்போது பெருமைமிகு சிற்பங்கள் பேச முற்படுவதைப் போல ஓர் உணர்வு நம்மை தொற்றிக் கொள்கிறது.