

விரிந்து பரந்த வளாகம் அது. வெயில் கொளுத்தும் மதிய வேளையிலும் சில்லென்ற காற்று வாழைத் தோப்புக்குள் நுழைந்து, அதன் இலைகளைச் சிலுப்பி விளையாடுகிறது. புல்வெளியின் மீது நெளிந்து ஓடும் காற்று, இங்கு வருவோரை வட்டமிட்டுச் செல்கிறது. இந்தக் காற்றுப் பட்டதும் மனம் லேசாகிப் பறக்கத் தொடங்கிவிடுகிறது. இந்த இடத்தில்தான் ராமானுஜர் அமர்ந்து யோகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. வேடந்தாங்கல் செல்லும் வழியில் உள்ள காஞ்சீபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீஅம்ருதபுரி ஸ்ரீஇராமானுஜ யோகவனம்.
இறை வழிபாட்டில் ஒளிவு மறைவு எதுவுமில்லை என்றவர் ராமானுஜர். ஜாதி மத இன மொழி வர்ண பேதம் எங்கும் இருக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர் அவர். இறைவனால் படைக்கப்பட்ட அனைவருக்கும் பொதுவானது இறைவன் நாமம் என்று கருதியவர். பிறப்பின் அடிப்படையில் யாரையும் இதில் விலக்கிவைப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை. ஓம் நமோ நாராயணா என்ற மந்திர உபதேசம் பெற்றவுடன், கோவில் கோபுரம் மீதேறி ஊரிலுள்ள அனைவருக்கும் கேட்கும் வண்ணம் உரக்கச் சொல்லிய ஆன்மிகப் புரட்சியாளர் இவர். அவர் பெயரில் அமைந்துள்ள இந்த யோகவனத்தில் சர்வ மதத்தைச் சேர்ந்தவர்களும் வந்திருந்து மன அமைதி பெற்றுச் செல்ல பிரதானமாக தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
பிராகாரக் கற்சுவர் மிக நீளமானது. அதன் மேல் 1008 அனுமார் சிலாரூபங்கள் வர இருப்பதாக கூறிய கோவிந்த உபாசகர், ஸ்வாமி ஸீதாராம ஸ்வாமிகள் தனது குருவான காஞ்சி மகா பெரியவரின் உத்தரவின் பெயரில் அம்ருதபுரி இராமாநுஜ யோகவனத்தை இங்கே அமைத்ததாகத் தெரிவித்தார். அவர் சுவாமிகளிடம், சைவ வைணவ பேதம் பார்க்கக் கூடாது. ஆத்ம சரணாகதியை முன்னிறுத்திச் செய்ய வேண்டும் என்று சொன்னார் என்கிறார் அர்ச்சகர் சீனிவாசன்.
கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு அப்பாலும் கற்சுவர் பிராகாரம் நீண்டு விரிந்து பரந்து செல்கிறது. இச்சுவரை ஒட்டித்தான் பதினெண் சித்தர்கள் உலா வருவதாக அர்ச்சகர் தெரிவிக்கிறார்.
சிறப்பு வாய்ந்த சன்னதிகள்
இங்குள்ள சன்னதிகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. முதலில் இருப்பது வேழ முகத்தோன் ஆன ஆனைமுகத்தான் சன்னதி. நவகிரகங்களைப் பூஜித்த பலன் விநாயகரை வேண்டினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம். இதனை மெய்ப்பிப்பது போல பிரம்மாண்ட விநாயகரின் உடலில் தெளிவாகத் தெரியும் வண்ணம் இங்கு நவக்கிரக நாயகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தனித் தனியே வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டுள்ளது. விநாயகரின் திருவுருவில் நவக்கிரகங்களும் அமைந்துள்ளன. வெவ்வேறு திசையில் திரும்பிக்கொண்டிருக்கும் நிலை இல்லாமல் கிழக்கு திசை நோக்கியே அருள்பாலிப்பது அபூர்வமாக இருக்கிறது.
ராமானுஜ யோகவனம் என்பதன் தத்துவமே பேதமற்ற சரணகதி என்பதுதான். பறவைகள் சரணாலயம் அருகே உள்ள பக்தர்கள் சரணாலயம் என்று இதைச் சொல்லலாம். அமிருதபுரி என்றால் உலக காரியங்களில் தடை நீக்குதல் மட்டுமல்ல அவ்வுலக வாழ்வையும் சிறப்புறப் பெறுதல்தான். ராமானுஜர் இவ்விடத்தில் தங்கி யோகத்தில் ஆழ்ந்தார் எனக் கூறப்படுவதால் இது ராமானுஜர் யோகவனம் என்று சீனிவாசன் தெரிவிக்கிறார்.
சைவ வைணவ பேதம் நீங்க வேண்டும் என்பதற்காகவே விநாயகரை முன்னாலும் அவருக்குப் பின்புறம் யோக நரசிம்மரையும் கொண்டு இச்சிலாரூபம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. விநாயகர் சாந்த சொரூபி, அவருடன் நரசிம்மர் ஒத்துப் போனால் தான் கஜகேசரி யோகம் கிடைக்கும். பொதுவாக ஜாதகத்தில் லட்சத்தில் ஒருவருக்குத்தான் கஜகேசரி யோகம் அமையும். அனைவரும் தம் வாழ்நாளில் கஜகேசரி யோகம் பெற, நரசிம்மருடன் கூடிய இந்த விநாயகரை வணங்கலாம். கஜம் என்றால் யானை; கேசரி என்றால் சிங்கம். யானை பொறுமைக்கும் பலத்துக்கும் உதாரணம். சிங்கம் அஞ்சாமையின் அடையாளம். பொறுமை, பலம், வீரம் இருந்தால் அதுவே கஜகேசரி யோகம் என்பார்கள். இதனைப் பெற இந்த நவகிரக விநாயகரை, நரசிம்மர் மற்றும் நாகருடன் வழிபடலாம் என்கிறார் அவர்.
அடுத்து, கன்னம் ஜொலிக்கச் புன்னகைக்கும் நிவாச பெருமாள். பேசும் பெருமாள் என்று இங்கு வரும் பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். நேரடியாகப் பேசுவது போலவே இருக்கிறது இவரது திருமுக மண்டலம்.
திருப்பதியில் மூலவருக்கு எப்படியெல்லாம் ஆராதனை செய்கிறார்களோ, அதே மாதிரி இங்கே பூஜைகள் செய்யப்படுகின்றன. தாயார் மற்றும் பெருமாள் பெயர் மதுரவல்லி நாயிகா சமேத நிவாச பெருமாள். இங்கு உற்சவர் வைகுந்த ராமர் சீதா லட்சுமண ஆஞ்சனேயர் சமேதராகக் காட்சி அளிக்கிறார். இங்கு ராமரின் வில் போலவே ஹோம குண்டம் அமைத்து ஹோமம், திருமஞ்சனம் ஆகியவை நடைபெறும். இந்த சன்னதியில் 108 சாலிக்கிராமம் இருக்கிறது. இவற்றை வணங்கினால் 108 திவ்விய தேசப் பெருமாளை ஒரே நேரத்தில் வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு ஏகாதசியன்றும் இந்த சாலிக்கிராமங்களுக்குத் திருமஞ்சனம் நடைபெறும். அருகிலேயே மதுரவல்லித் தாயார் சன்னதி. கார்த்திகைப் பஞ்சமி தாயாரின் அவதார திருநட்சத்திரம். அன்றைய தினம் ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் கோசாலையில் உள்ள உப்பிலியப்பன் பெருமாள் ஆகியோர் சீர்வரிசை எடுத்துக்கொண்டு வருவார்கள்.
ஆண்டுதோறும் தை மாதம் மூன்றாம் வெள்ளியன்று, தாயார் ஊஞ்சலில் வீற்றிருக்க, உலக நன்மையை முன்னிட்டு 1008 விளக்கு பூஜை தமிழகம் (அமிர்தபுரி), கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சுமார் இருபது இடங்களில் நடைபெற்றுவருகிறது. இதனால் திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம், வாழ்வாதாரம் ஏற்ப்படும் என்பது நம்பிக்கை. இந்த தாயார் அருகிலேயே மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பெருமாள் சன்னதியை ஒட்டியே உள்ளது பதினெண் சித்தர் சன்னதி.
பதினெண் சித்தர்கள்:
ஆதிசேஷன் அம்சமாக லட்மணன், ராமானுஜரைச் சொல்வது போல் பதஞ்சலி முனிவரும் அவரது அம்சம் என்று சொல்கிறார்கள். பதஞ்சலி முனிவர் உட்பட பதினெண் சித்தர்களும் இந்த ஸ்ரீ அம்ருதபுரி ஸ்ரீ ராமானுஜ யோகவன தியான மண்டபம் எனும் வேதாந்த, சித்தாந்த, ஸர்வ சமய சமரச சன்மார்க்க சமுதாயக் கூடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்கள். இச்சித்தர்கள் இம்மண்டபத்தை வலம் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. பக்தர்கள் ஜாதக ரீதியான பரிகாரங்கள் எடுபடாதபோதும், தீராத நோய் தீருவதற்காகவும் இந்த பிரதான பதினெண் சித்தர்களை நம்பிக்கையுடன் வணங்குகிறார்கள்.
இதனை அடுத்துள்ள அன்னபூரணாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று லட்டுத் தேர் அமைத்து அதில் மஹாதேவரை எழுந்தருளச் செய்வது வழக்கமான விசேஷம். இங்கு மற்றொரு விசேஷம் என்னவெனில் ஒரே கல்லில் முன்னும் பின்னுமாக அமைந்துள்ள ஆஞ்சனேய, கருட சிலாரூபம்.
பறவைகள் சரணாலயம் அருகே உள்ள இந்த பக்தர்கள் சரணாலயத்திற்கு எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த பக்தர்கள் வந்துபோகிறார்கள்.