

கருமையாய் பூமியில் படர்ந்திருந்தது மதீனா மாநகரின் பேரீத்தம்பழ மரங்களின் நிழல். கிழக்கில் உக்கிரமாய் பயணத்தைத் தொடங்கிவிட்ட சூரியனின் வெப்பத்தைத் தணிக்கப் போராடி கொண்டிருந்த ஒரு காலை நேரம் அது.
தோழர்கள் புடைசூழ நபிகளார் அமர்ந்திருந்தார். அப்போது சிலர் அங்கு வந்தார்கள்.
அவர்கள், முரட்டுக் கம்பளியை போர்த்திக் கொண் டிருந்தார்கள். அணியக்கூடப் போதிய ஆடை இல்லாமல் அரைநிர்வாணிகளாக இருந்தனர். அவர்களின் வறுமை நிலையைக் கண்டு நபிகளாரின் திருமுகம் வருத்தத்தால் வாடி விட்டது. நிலைக்கொள்ளாமல் பக்கத்திலேயே இருந்த தமது வீட்டுக்குள் செல்வதும், வெளிவருவதுமாய் இருந்தார். வந்தவர்களுக்கு உதவி செய்ய முடியாத தனது ஏழ்மை நிலைமை அவரை இன்னும் வருத்தமுறச் செய்தது.
இந்நிலையில் தொழுகை நேரம் வந்தது.
நபிகளார், நபித்தோழர் பிலாலை அழைத்தார். தொழுகைக்கான ‘அழைப்பு’ விடுக்கச் சொன்னார். தொழுகையை முன்னின்று ஒருங்கிணைத்தார்.
நபிகள் ஆற்றிய சிற்றுரை
தொழுகை முடிந்ததும் கூடியிருந்த மக்களிடையே நபிகளார் அறக்கொடைகளின் சிறப்பை வலியுறுத்தி, கேட்போரின் நெஞ்சைத் தொடும்வண்ணம், சிற்றுரை ஒன்றை நிகழ்த்தினார். மனிதர்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவிலிருந்து படைத்து, அதிலிருந்து துணையை உருவாக்கி அந்த இரண்டின் மூலம் உலகில் மனித உயிர்களைப் பரவச்செய்த இறைவனுக்கு அஞ்சும்படியும், ஒருவருக்கொருவர் உதவி வாழும்படியும் இறையச்சமூட்டும் திருக்குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டினார்.
“மக்கள் தான, தர்மங்கள் செய்ய வேண்டும். அதற்காக, இருப்போர் பொற்காசுகளையும், வெள்ளிக்காசுகளையும் வாரி வழங்கிட வேண்டும். துணிமணிகளை அளித்திட வேண்டும். தானியங்களை வைத்திருப்போர் ஒரு மரக்கால் அளவு, கோதுமை, பேரீச்சம் பழங்களை தர வேண்டும். எதுவுமே இல்லாதோர் பேரீச்சம் பழத்தின் பாதி துண்டையாவது வழங்கிட வேண்டும்!” என்று அறக்கொடைகளின் சிறப்பை அழுத்தமாக வலியுறுத்தினார்.
ஆர்வத்துடன் முன்வந்த மக்கள்
நபிகளின் உரையைக் கேட்டு, ஒருவர் சுமக்க முடியாத அளவு எடையுள்ள ஒரு பெரிய கோணி நிறைய தானியங்களை சுமந்து வந்தார். அதன்பின் மக்கள் ஒருவர் பின் ஒருவராக ஆர்வத்துடன் தர்மம் செய்ய ஆரம்பித்தனர். நபிகளாரின் நல்லுரையின் தாக்கத்தால் வெகு விரைவிலேயே அங்கு இரு குன்று அளவுக்குத் தானியங்கள் மற்றும் துணிமணிகள் சேர்ந்துவிட்டன.
மக்கள் பேரார்வத்துடன், தர்மம் செய்வதைக் கண்டு நபிகளாரின் திருமுகம் பொன்னிறமாய் பிரகாசித்தது. “மக்களே! நல்லதொரு வழிமுறையைச் செயல்படுத்தும் ஒருவருக்கு அதற்கான கூலி இறைவனிடம் கிடைக்கும். அதனால், தூண்டப்பட்டு நற்செயல் செய்வாரின் நன்மை களின் கூலியும் உபரியாக அவருக்குக் கிடைக்கும்.
அதேபோல, தீய வழிமுறையை நடைமுறைப்படுத்துவோர்க்கு அதற்கான பாவம் அவனைச் சாரும். அந்தத் தீமைகளைப் பின்பற்றி வழிகெட்டு போனவர்களின் பாவங்களும் அதை செயல்படுத்த ஆரம்பத்தில் தூண்டியவனின் வினைப்பட்டியலில் இன்னும் உபரியாக சேர்க்கப்படும். அதனால், நீங்கள் நல்லவற்றையே செய்யுங்கள்!” என்று உரத்துக் கூறினார் நபிகள்.
அதன் பின்னர் நபிகளார், மக்கள் வழங்கிய அறக்கொடைகளை வறுமையால் தம்மைத் தேடி வந்த வறியவர்களுக்கு கொடுத்து அவர்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.