யானை வழிபட்ட சிவன்

யானை வழிபட்ட சிவன்
Updated on
1 min read

முன்வினையின் காரணமாக தேவர்களாகிய இந்திரனும் ஜெயந்தனும், வேடுவர்களாகப் பிறப்பெடுத்து, கரிவலம்வந்தநல்லூர் என்னும் தலத்தில் பால்வண்ணநாதரை வழிபட்டு வந்தனர்.

வேடுவர்களாகப் பிறப்பெடுத்த அவர்களின் பெயர் காரி மற்றும் சாத்தன். திருநெல்வேலி மாவட்டத்தின் வடகோடிப் பகுதியில் இருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் பால்வண்ணநாதராக அருள்புரிகிறார். இவருக்குக் களாவீசர் என்றும் பெயர் உண்டு.

இந்திரனின் வாகனமான ஐராவதமும் இப்பூவுலகில் காட்டானையாகப் பிறந்து களாவீசரை வழிபட்டுவந்தது. வேடுவர்களாக இருந்த காரியும் சாத்தனும் காட்டானையாக இருந்த ஐராவதத்தைக் கொல்ல முயன்ற போது, அது இறைவனை வேண்ட, சிவபெருமான் உமாதேவியோடு ரிஷப வாகனத்தில் காட்சிகொடுத்து வேடுவர்களுக்கு சாபவிமோசனம் தந்ததாகத் தல புராணத்தில் உள்ளது. கரி இந்த ஆலயத்தை வலம் வந்து வழிபட்டதால் இதற்குக் கரிவலம்வந்த நல்லூர் என்று பெயர் ஏற்பட்டது.

ஆவணித் தபசு

இங்கு எழுந்தருளியுள்ள பால்வண்ணநாதர் சுயம்பு லிங்கமாகும். சுவாமியின் இயற்கை நிறம் வெள்ளை. இங்கு எழுந்தருளியுள்ள இறைவியின் பெயர் அதுல சௌந்தராம்பிகை. இவருக்கு நான்கு கரங்கள். இத்தகைய உருவமைப்பை மதுரைக்கு வடக்கே உள்ள ஆலயங்களில் மட்டுமே காண முடியும்.

திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சங்கரன்கோவிலில் சங்கரலிங்கனார், கோமதி அம்பிகைக்கு ஆடிமாத உத்திராட நட்சத்திரத்தன்று சங்கர நாராயணராகக் காட்சி கொடுப்பது போல, பால்வண்ணநாதரும் சௌந்தராம்பிகைக்கு ஆவணி மாதத்தில் வரும் பூராட நட்சத்திர தினத்தில் லிங்கோத்பவராகக் காட்சி அளிக்கிறார். கரிவலம்வந்தநல்லூரில் ஆவணித் தபசு விசேஷமானதாகும்.

தலவிருட்சம்

இத்தலத்தின் விருட்சம் களாமரம். இதன் சிறப்பு, பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. இத்தலம் சுக்கிர பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது. ராவணனுடைய மூத்த மகன் இந்திரஜித்தைக் கொன்ற பாவம் நீங்க லட்சுமணன் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.

பஞ்ச பூதத் தலங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் இந்த ஆலயம் ராஜபாளையத்தி லிருந்து சங்கரன் கோவில் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in