

ஆலய கும்பாபிஷேகம்
கும்பகோணம் காரைக்கால் வழித்தடத்தில் எஸ்.புதூரிலிருந்து தெற்கே உள்ள கோனேரிராஜபுரம். இத்தலத்துப் பெருமானை நந்திகேசுவரர் சனத்குமாரர், கன்னுவார் ஆகியோர் வழிபட்டு நலம்பெற்றனர். அப்பர் பெருமான், ஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற தலம் இது.
இத்தலத்தில் சோழப் பேரரசின் மாதரசியாக விளங்கிய செம்பியன் மாதேவி, தனது கணவர் கண்டராதித்த சோழனின் நினைவாக கற்றளியாக எடுப்பித்த பெருமையுடைய அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
மூலவர் சுயம்புலிங்கமாக உமாமகேஸ்வரர், பூமிஸ்வரர், பூமிநாதர் என்ற திருநாமங்களுடனும் அம்மன் அங்கவளநாயகி, தேக சௌந்தரி என்ற திருநாமங்களுடனும் அழைக்கப்படுகிறார்கள்.
பூரூரவ மன்னனின் தொழுநோயைத் தீர்த்த பெருமானாக அருள்மிகு வைத்தியநாதர் இங்கே எழுந்தருளியுள்ளார். இத்திருத்தலத்தில் உள்ள தனி சனீஸ்வரர் சன்னிதி விசேஷமானது. இவருக்கு வெள்ளை நிற வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது.
இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய நடராஜ பெருமான் மிகப்பெரிய வடிவில் காண்போரைச் சுண்டி இழுக்கும் நர்த்தன சுந்தர நடராஜனாகவும் விளங்குகிறார். சோழ மன்னர் ஒருவரது கனவில் இத்தலத்து இறைவன் தோன்றிக் கலைநுட்பத்துடன் கூடிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை அமைக்கக் கட்டளையிட்டார். அதன்படி அமைக்கச் சிற்பி ஒருவர் பணிக்கப்பட்டார்.
அச்சில் வார்க்கும்போது ஏதேனும் ஒரு குறை தோன்றி தடங்கல் ஏற்பட்டதால் சிற்பிக்கு சிரச்சேத தண்டனை அளிக்கப்பட்டது. தண்டனைக் கெடு நெருங்க இறைவனையே தியானித்து அமர்ந்திருந்தார் சிற்பி. அப்போது அங்கு வயதான சிவனடியார் வேடத்தில் இறைவன் வந்தார். அவர் சிற்பியிடம் தாகத்துக்குத் தண்ணீர் கேட்க, சிற்பியோ குழப்பத்தில் அறையில் கொதித்துக்கொண்டிருந்த ஐம்பொன் உலோகக் குழம்பைக் காண்பித்தார்.
முதியவர் வேடத்தில் வந்த இறைவனும் திரவ வடிவில் இருந்த கூழை அருந்துகிறார். அந்தக் கணத்தில் முதியவர் மறைந்தார். அடுத்த கணமே அழகிய கூத்தபிரான் வடிவமாகக் காட்சியளித்தார்.
மே மாதம் 29-ம் தேதி இத்திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த சிவகாமி சமேத நடராஜ பெருமான் வழிபாட்டுக் குழுவினரும் கோனேரி ராஜபுரம் கிராமத்து மக்களும் முடிவுசெய்துள்ளனர். ஆடல்வல்லானின் அற்புதத் திருக்கோலத்தை இத்தலத்தில் சென்று தரிசிக்க இது அற்புத வாய்ப்பு.