கேமரா கண்கள் வழியாக காஞ்சி மாமுனிவர்

கேமரா கண்கள் வழியாக காஞ்சி மாமுனிவர்
Updated on
2 min read

ஸ்ரீசங்கர பக்த ஜன சபை அறக்கட்டளை, மகா பெரியவாளின் யாத்திரைகள் தொடர்பாக வெளியிட்ட 2 புகைப்படத் தொகுப்புகள் நினைவிருக்கின்றனவா? “ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமியின் திவ்ய தரிசனம்” என்ற அந்த புகைப்படத் தொகுப்புகளைப் பார்த்தால் புனிதமான பல விஷயங்கள் கண் வழியே புகுந்து நெஞ்சினில் நீங்கா இடம் பெறும் என்பதால் பக்தர்கள் அனைவரும் ஆவலோடு வாங்கிக்கொள்கிறார்கள்.

அதில் கிடைக்கும் வருமானம் தேனம்பாக்கத்தில் சிவஸ்தானத்தில் உள்ள பாடசாலை அறக்கட்டளைக்குச் சென்றது.

பரமாச்சாரிய ஸ்வாமிகள் பட்டத்துக்கு வந்த நாள் முதல் அவருடைய நூற்றாண்டு வரையிலான காலத்து முக்கிய சம்பவங்களை விளக்கும் 550 அரிய புகைப்படங்கள் அவற்றில் இடம் பெற்றுள்ளன. ஸ்வாமிகளின் நூற்றாண்டு விழா மிகுந்த பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்பட்டது.

திண்டிவனத்தில் உள்ள ஆர்க்காடு அமெரிக்கன் மிஷன் உயர் நிலைப் பள்ளியில் ஸ்வாமிகள் பூர்வாசிரமத்தில் ஸ்வாமிநாதன் என்ற திருப்பெயர் தாங்கி மாணவனாக இருந்த காலம் தொடங்கி புகைப்படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. காஞ்சி காமகோடி பீடத்துக்கு 68-வது ஆசாரியராக ஸ்வாமிகள் தேர்வான வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆனால் அதை ஸ்வாமிகளின் சொந்த வாக்கியத்திலே படிக்கும்போது அலாதி ஆனந்தம் உண்டாகிறது.

அவரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களுக்கும் அவரைத் தரிசித்தவர்களுக்கும் அவருக்கு நேரடியாகத் தொண்டு புரிந்தவர்களுக்கும் அவ்விரு தொகுப்புகளும் அரிய பொக்கிஷங்கள். பக்கம் பக்கமாகப் புரட்டும்போது அவர்கள் அந்தக் காலத்துக்கே போய் பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவார்கள்.

அவருடைய ஆசியால்தான் நல்ல முறையில் வாழ்கிறோம் என்று நம்பும் பிற்காலச் சீடர்களுக்கு அந்த நடமாடும் தெய்வத்தின் பல்வேறு கோலங்களும் காட்சிகளும் நினைக்க நினைக்க நெஞ்சில் உவகையும் கண்களில் ஆனந்த பாஷ்பத்தையும் ஊட்டுவன. பல புகைப்படங்கள் பெரிதாக்கப்பட்டு தியான கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கொதிக்கும் வெயிலிலும், கொட்டும் பனியிலும் இடி, மின்னல் மழையிலும் அந்த மகான் எப்படி இந் நாட்டின் எல்லா திசைகளிலும் எல்லா பகுதிகளிலும் நடந்தே சென்று வந்தார் என்ற மலைப்பு ஏற்படுகிறது. மாலை சூட்டி மலர்க் கிரீடம் வைத்து அந்த மகா ஸ்வாமிகளை வணங்கியுள்ளனர். மாட மாளிகையும் மண் குடிசையும் தனக்கு ஒன்றே என்ற வகையில் உதிர்க்கும் புன் சிரிப்பை மட்டுமே இன்றைக்கெல்லாம் பார்த்துப் பரவசப்படலாம். நதிக்கரைகளில், மலை உச்சியில், சாதாரண கூரை வேய்ந்த குடிசைகளில், கோயில் குளங்களின் படிகளில் என்று எல்லா இடங்களிலும் ஸ்வாமிகள் இருப்பதைப் படம் பிடித்த அந்த கேமரா காலாகாலத்துக்கும் பார்க்கவும் பக்திபூர்வமாக ஆராதிக்கவும் வழி செய்துவிட்டது.

எல்லா இடத்திலும் எல்லாரிடத்திலும் ஸ்வாமிகளைக் கண்டால் பக்தியும் பரவசமும் ஏற்பட்டதை கேமரா துல்லியமாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. இரும்பை இழுக்கும் காந்தத்தைப் போல அவரது தெய்வீக ஆளுமை அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. காசி மகாராஜா, ஆன்மிகத் துறவி தலாய் லாமா, ஆதீன கர்த்தர்கள், அருளாளர் பால் ஈடுபாடு கொண்ட தொழிலதிபர்கள் அவருடன் உரையாடி மகிழ்ந்திருக்கின்றனர். ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் அவருடன் சேர்ந்திருப்பது கண்கொள்ளாக் காட்சி.

ரூ.2,000 நன்கொடை தருகிறவர்களுக்கு அறக்கட்டளை விலை மதிப்பற்ற இந்த அரிய புகைப்பட பொக்கிஷங்களை அனுப்பிவைக்கும். அந்தத் தொகை பாடசாலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

மேற்கொண்டு தொடர்புக்கு:

ஜி. வைத்யநாதன், செயலாளர்,

ஸ்ரீ சங்கர பக்த ஜன சபை அறக்கட்டளை,

044-24996823, 9003076823.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in