

மலைகளின் ராணியாகத் திகழும் உதகையின் குன்னூரில் உள்ள முக்கியக் கோயில்களில் ஒன்று தந்தி மாரியம்மன். பங்குனியில் தொடங்கி சித்திரையில் 36 நாட்கள் வரை இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய அன்பர்களால் இங்கே திருவிழா கொண்டாடப்படுவது இக்கோயிலின் சிறப்பம்சம்.
கோவில் வரலாறு
இப்போது கோயில் உள்ள இடம் சில நூற்றாண்டுகளுக்கு முன் குதிரை லாயமாக இருந்தது. அங்கு லாந்தர் விளக்கு வைப்பது வழக்கம். அதன் அருகில் பெண் குழந்தையொன்று காலில் கொலுசோடும், ஜொலிக்கும் ஆபரணங்களோடும் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. அருகில் மல்லிகைப்பூ மணம் கமழ்ந்தது.
குதிரை லாயக் காவலர், குழந்தையைப் பற்றி அருகில் இருந்தவர்களிடம் கூற யாரும் நம்பவில்லை.தொடர்ந்து சில நாட்களாய்க் குழந்தையைப் பார்த்த காவலர் ஊர்ப் பெரியவரிடம் அதைக் கூற, அவரும் குதிரை லாயத்தில் இரவு தங்கி, லாந்தர் மரத்தில் ஊஞ்சலாடும் குழந்தையைப் பார்த்தார். மறுநாள் இரவு பெரியவரின் கனவில் ஒரு குழந்தை தோன்றி, ''நான் லாந்தர் மரத்தடியில்தான் குடியிருக்கிறேன்” என்று மறைந்தது.
பொழுது விடிந்ததும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி பெண் குழந்தை காட்சி தந்த இடத்துக்குப் போய்ப் பார்க்க அங்கே சுயம்பு எழுந்தருளி இருந்தது. உடனே ஊர்ப் பெரியவர்கள் கலந்து பேசி தகரத்தாலான ஒரு கொட்டகையை அமைத்தனர். அதுவே இன்று அம்மன் கோயிலாகக் காட்சியளிக்கிறது என்று தலப் புராணம் கூறுகிறார்கள் பக்தர்கள்.
தன்னை நாடிவந்த பக்தர்களின் வேண்டுதலைத் தந்தியைப் போல விரைவாகத் நிறைவேற்றுவதால் அம்மனைத் ‘தந்தி மாரியம்மன்' என்றழைக்கிறார்கள். தந்தி அம்மனை வணங்கினால் திருமணம், பிள்ளைப்பேறு, பிணி நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவிழா
தந்தி மாரியம்மனின் சகோதரரான குன்னூர் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் ராமர் கோவிலில்தான் கொடியேற்றம் தொடங்குகிறது. விழாவில் பூச்சாற்றி, கரகம் எடுத்து, கொலுவில் உட்கார வைக்கப்படுவார் அம்மன். திருக்கல்யாணம் முடிந்து, சிம்ம, காமதேனு, அன்ன, சேவல், குதிரை, புலி, ஆதிசேஷ கமல, ரிஷப, தாமரை, யானை, மயில் வாகனங்களில் வலம் வருகிறார்.
இடையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் இளைஞர்கள் பங்கேற்கும் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் மூவாயிரம் பேர் பூக்குழி இறங்கும் இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இக்கோயில் திருவிழாவுக்காக வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.
தினமும் கலைநிகழ்ச்சிகள், பூஜை, வழிபாடுகளும் திருவிழாவின்போது நடத்தப்படுகின்றன. கேரள மக்கள் நடத்தும் முத்துக் பல்லக்கு ஊர்வலம், புஷ்ப, முத்து, அலங்கார ரதங்கள் அனுதினமும் வீதிகளில் வலம் வருகின்றன. இறுதியாக புஷ்ப ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டு, மறுபூஜையோடு விழா நிறைவடைகிறது.